Sunday 2 February 2014

நைஜீரிய கால்பந்து வீரர் இஸ்லாத்தில் நுழைந்தார்



நைஜீரிய கால்பந்து வீரர் இஸ்லாத்தில் நுழைந்தார்

ஓய்வு பெற்ற நைஜீரிய கால்பந்து வீரர் எமேகா எசிவ்கோ சென்ற வாரம் "ஷஹாதாஹ்" எனும் சாட்சி பிரகடனத்தை மொழிந்து இஸ்லாத்தை தனது வாழ்வு நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை சரிதத்தை படித்த சமயத்தில் அதனால் கவரப்பட்டமையே தான் இஸ்லாத்தில் நுழைந்தமைக்கான காரணம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது பற்றி அவர் குறிப்பிடுகையில்,

"நான் எப்போதும் வித்தியாசமான ஒருவனாக இருந்ததுடன் பல்வேறு மதங்கள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தேன். இந்நிலையில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு பற்றி படிக்கும் போது அதனால் மிகவும் கவரப்பட்டேன் "என கூறுகிறார்.

கூறுகையில் தொடர்ந்தும்,

"அனைத்து இறைத் தூதர்கள் மத்தியிலும் சிறந்த தூதராக விளங்கும் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்தொடர்வதையிட்டு பெருமிதம் அடைகிறேன்" என குறிப்பிடுகிறார்.

குறித்த தீர்மானத்தை யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் அன்றி தானாகவே எடுத்ததாக குறிப்பிடும் அவர், தற்போது தொழுகைகள் உட்பட மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருவதால் தனது வாழ்வு ஒழுக்கம் நிறைந்ததாகவும், கட்டுப்பாடானதாவும் விளங்குவதாக தெரிவிக்கின்றார்.

"நான் இப்போதுதான் ஒரு விதையை ஊன்றி இருக்கின்றேன், அதனை மரமாக வளர்த்து எடுக்க வேண்டும்" எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

46 வயதுடைய முன்னாள் நைஜீரிய கால்பந்து வீரரான எமேகா எசிவ்கோ, இஸ்லாத்தை ஏற்ற பின் தனது பெயரை முஸ்தபா முஹம்மத் என மாற்றிக் கொண்டுள்ளார்.

அதேநேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நைஜீரிய கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை தமது மார்க்கமாக ஏற்று வருவது குறிப்பிடத் தக்கது.