Saturday 20 January 2018

இந்து வேதங்களைக் கற்றறிந்த,பிராமண வகுப்பைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டரான ராவ் ஏன் முஸ்லிம் ஆனார்? இஸ்லாத்தை ஏற்றது குறித்து ராவ் கூறியதாவது: நான் நடுத்தர வகுப்பு வைதீக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை டெக்ஸ்டைல் என்ஜினியர். தாய் தனியார் பள்ளி ஆசிரியை. பள்ளிக் கல்வியுடன், எனது தாய் மாமாவிடம் வைதீகக் கல்வியையும் கற்றேன். எனது குடும்பத்தார்கள் எல்லோரும் வைதீகக் கல்வி கற்றவர்களே. இதனால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு சிறு வயதிலேயே என் உள்ளத்தில் ஆணி அடித்தது போன்று படிந்திருந்தது. பருவ வயதை அடைந்ததும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தேன். முஸ்லிம்கள் மீதான வெறுப்பு இன்னும் அதிகமானது. பள்ளிவாசல்களில் கூறப்படும் பாங்கொலி எனக்கு அதிக எரிச்சலைத் தந்தது . மசூதிக்கு அருகில் ஏதேனும் விழா நடந்தால், வாய்ப்பை பயன்படுத்தி பாங்கு சப்தம் கேட்காதவாறு மியூசிக் சப்தத்தை அதிகமாக்குவேன். இந்நிலையில் பள்ளி விடுமுறை காலம் வந்தது. இரண்டு மாதம் விடுமுறை. எனது தாயாரும், சகோதரியும் அருகில் இருந்த முஸ்லிம் வணிக நிறுவனத்தில் கோடைக் கால வேலையில் சேர்ந்தனர். என்னையும் சேருமாறு கட்டாயப்படுத்தினர். ஏற்கனவே என்னுள் ஊறிப் போயிருந்த வெறுப்பால் முஸ்லிம் வணிக நிறுவனத்தில் வேலைக்குச் சேர துளியும் எனக்கு விருப்பமில்லை. எனது தாயார் என்னைத் திட்டினார். என்னால் குடும்பத்திற்கு எந்த பலனும் இல்லை என்றார். இதனால் வேதனையடைந்த நான் வேறு வழியின்றி அந்த முஸ்லிம் நிறுவனத்தில் சேர்ந்தேன். அந்நிறுவனத்தின் முஸ்லிம் நிறுவனர், அங்கு வேலை செய்த பணியாளர்கள் அனைவரையும் நன்கு கவர்ந்திருந்தார். எனது தாயாருக்கும், சகோதரிக்கும் கூட அவரைப் பிடித்துப் போயிற்று. எனினும் நான் அவரை வெறுக்கவே செய்தேன். யாராவது அவரை புகழ்ந்து ஏதேனும் கூறினால் அதனைச் செவி தாழ்த்திக் கேட்கமாட்டேன். இந்நிலையில், அந்நிறுவனத்தில் வேலை செய்தவர்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் சிலர் இஸ்லாத்தை ஏற்றனர். இது எனக்கு இன்னும் வெறுப்பையும், அவர் மீதான கோபத்தையும் அதிகப்படுத்தியது. அத்துடன் இன்னொன்றையும் சவாலாக எடுத்துக் கொண்டேன். அது, நான் பின்பற்றும் இந்து மதம்தான் உண்மை மதம், என்பதை அந்த முஸ்லிம் முதலாளிக்கு உணர்த்த வேண்டும் என்பதே,இதற்காக உழைத்தேன் . எனது அறிவை அதிகப்படுத்திட நிறைய படித்தேன். எனது இம் முயற்சியில் இஸ்லாம் குறித்தும் தெரிந்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதுதானே அவரிடம் இஸ்லாத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி, இந்து மதத்தை உயர்த்திப் பேச முடியும். அதற்காக, அப்துல்லாஹ் யூசுப் அலி என்பவரால் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதி ஒன்றினை வாங்கிப் படித்தேன். திருக்குர்ஆனைப் படிக்க படிக்க இந்து மதத்தின் மீது பல சந்தேகங்கள் எழுந்தன. ஏதோ தவறான கொள்கையில் இருக்கிறேன் என எனக்குப் புரிந்தது. கடைசியில் “நான் பின்பற்றும் மதம்” வெறும் கதை, கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற முடிவுக்கு வந்தேன். பள்ளிக் கல்வியைக் கூட முடித்திராத என் முன் இப்போது பல கேள்விகள் நின்றன. இப்போது நான் என்ன செய்வது ? எங்கு செல்வது ? இந்த உண்மை எனக்கு ஏன் இவ்வளவு நாள் தெரியாமல் போனது ?என் பொறுப்பு என்ன? இவ்வாறு பல கேள்விகள் சிந்தனையில் ஓடின. மாணவப் பருவத்திலேயே இதற்கான விடைகளைத் தேட முடிவெடுத்தேன். எனது குடும்பத்தார்களிடமும், எனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டேன். பெயிண்ட் மூலம் வரைகின்றோம். அவனை பார்த்தவர் யார்? குடும்பத்தினர்கள் என்னிடம் சொன்னார்கள். இறைவனை யாரும் பார்க்கவில்லை. கற்பனை செய்துதான் வரையப்படுகிறது என்று. உடனே எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. திருக்குர்ஆனில் நான் படித்திருக்கிறேன். “இறைவனை யாரும் காண இயலாது.” (திருக்குர்ஆன் 6 :103. மிச்சம் மீதி இருந்த நம்பிக்கையும் இப்போது அறுந்து போனது. விநாயகர், சாமுண்டீஸ்வரி , ராமன், சீதா என அனைத்து உருவங்களும் வெறும் கற்பனைகள் என எனக்குப் புரிந்தது. இத்தனை நாளும் இக் கற்பனைகளையா இறைவன் என எண்ணி ஏமாந்தேன்.? என்னையே நான் நொந்து கொண்டேன். பின்பு ஒரு முறை எனது குடும்பத்தாரிடம் கேட்டேன். நமது வேதங்கள் சிலை வழிபாட்டை ஆதரிக்கவில்லை. நாம் ஏன் சிலை வைத்து வணங்க வேண்டும் ? உடனே எனது தாயார் என்னைத் திட்டினார். பின்பு சொன்னார். நமது முன்னோர்கள் அவ்வாறே செய்தனர். நாமும் அதனைச் செய்கிறோம் ஏன்றார். மறுநாள் திருக்குர்ஆனில் யதார்த்தமாக இரண்டாவது அத்தியாயமான பகராவில் 134 மற்றும் 170 ஆம் வசனங்கள் எனது கண்களில் பளிச்சிட்டன. அவ்விரு வசனங்களும் பின்வருமாறு, மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? ((திருக்குர்ஆன் 2:170) 2:134. அந்த உம்மத்து (சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்றிரவு எதைப் பற்றி எனது தாயாரிடம் கேட்டேனோ, அதற்கான பதில்கள் இப்போது நான் படித்த மேற்கண்ட வசனங்களில் இருந்தன. நான் திகைத்துப் போனேன். அவ்வசனங்கள் எனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன. சிலைகளை வணங்குவதை நிறுத்தினேன். பல தெய்வ வணக்கத்தைப் (polytheism) பாவமாக பார்க்கத் தொடங்கினேன். இஸ்லாம் குறித்து இன்னும் தெரிந்து கொள்ள முடிவு செய்து அல்பகரா அத்தியாயத்தை படித்து முடித்தேன். அதில் சிலர் பற்றி குறிப்பிட்டிருந்தது. அவர்கள் உலக இலாப நோக்கத்திற்காக இஸ்லாத்தை ஏற்றவர்கள். அவர்களை முனாபிக்குகள் ( நயவஞ்சகர்கள்- Hypocrities) என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டது.மேலும் திருக்குர்ஆனின் இன்னொரு வசனத்தையும் படித்தேன். அவ்வசனம் பின்வருமாறு, திருக்குர்ஆன்:5:3. “... இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாத்தையே (நன் மார்க்கமாகப் ) பொருந்திக்கொண்டேன்... இப்போது எனக்கு புரிந்தது. எனது மனதில் உள்ள எல்லா சந்தேகங்களுக்கும் திருக்குர்ஆனில் விடை உள்ளது. தொடர்ந்து திருக்குர்ஆனைப் படித்தேன். மனதளவில் இஸ்லாத்தை எனது வாழ்க்கை நெறியாக ஏற்றேன். அப்போது எனது படிப்பைக் கூட நான் நிறைவு செய்திருக்கவில்லை. எனவே B.E படிப்பை நிறைவு செய்ய விரும்பினேன். இதற்கிடையில் இஸ்லாம் குறித்து எனக்கு தெரிந்தவற்றை, எனது குடும்பத்தார்களிடம் எடுத்துச் சொல்லவே செய்தேன். அல்லாஹ்வின் மகத்தான அருளால் எனது சகோதரி இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றாள். படிப்பை முடித்த பின்பு நானும் என் சகோதரியும் குடும்பத்தை விட்டு வேலை தேடி தனியாகத் தங்கி இருந்தோம். கையில் பணமோ, வேலையோ இன்றி தவித்த நாட்களை அல்லாஹ்தான் கழியச் செய்தான். பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை அப்பொழுது நினைத்துப் பார்ப்பேன். திருக்குர்ஆன்: 29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?” எனக்கு நிறைய வாய்ப்புகள் வரவே செய்தன ஆனால் நேர்முகத் தேர்வில் பணி நேரங்களில் “ஐந்து நேர தொழுகை” தொழுதிட வாய்ப்புக் குறித்து கேட்பேன்.. “முடியாது” என கூறப்பட்டால் அப்பணியில் சேர்வதைத் தவிர்த்து விடுவேன். கடைசியில் படிப்பு சம்மந்தப்பட்ட வேலை கிடைக்காததால், B.E படிப்பை முடித்த நான் வெறும் 2000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்தேன். சுமார் ஒரு வருடம் இவ்வாறே கழிந்தது. அல்லாஹ்வின் மகத்தான அருளால் நல்ல வேலை கிடைத்தது. முஹம்மது உமர் ராவ் எனும் அழகிய பெயரில் தற்போது வாழ்ந்து வருகிறேன்.அல்ஹம்துலில்லாஹ்.