Thursday, 17 May 2018









சர்வதேசப்பிறை ஓர் அறிமுகப்பார்வை


அன்பின் இஸ்லாமிய சகோரர்களே! சகோதரிகளே!
பொதுவாக முஸ்லிம்கள் தமது நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளில் பிறை தொடர்பாக ஊருக்கு ஊர் பிறை பார்க்கவேண்டும், நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும், இஸ்லாமிய கலண்டர் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் செயற்பட வேண்டும் அல்லது முழு உலகிற்கும் ஒரு பிறை பார்த்தால் போதும் என்பது போன்ற நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றார்கள்.
இவைகளில் நாம் உலகில் ஒரு இடத்தில் பிறை கண்டால் முழு உலகும் அதைக்கடைப்பிடிக்க வேண்டும் என்ற (சர்வதேசப்பிறை) நிலப்பாட்டையே பின்வரும் காரணங்களால் அவசியம் தெரிவு செய்ய வேண்டும்.
1.அல்குர் ஆனும், அஸ்ஸுன்னாவும் சர்வதேசப்பிறையையே அதிகம் வலியுறுத்துவது.
2.ச‌ர்வ‌தேச‌ப்பிறையே அறிவுபூர்வமானதும் நடைமுறைச்சாத்தியமானதும் ச‌ர்வ‌தேச‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஒற்றுமைக்கு வ‌ழிவ‌குக்க‌ கூடிய‌தாக‌வும் இருக்கின்ற‌து.
3.பிறையை எமக்குத் தீர்மானித்து தரும் பிறைக்கொமிட்டியினர் தொடர்ச்சியாக மோசடிகளில் ஈடுபட்டு அவர்களின் நம்பகத்தன்மையை இழந்தமையும்.
1.சர்வதேசப்பிறை தொடர்பான அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆதாரங்கள்:.
இன்றைய நடைமுறையில் உள்ளது போல் இஸ்லாமிய அடிப்படையில் ஒரு வருடத்தின் மாதங்கள் பன்னிரன்டுதான் என அல்குர் ஆனின் பின்வரும் வசனம் உறுதி செய்கிறது.
 நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் என்னிக்கை 12களாகும். இவை அல்லாஹ்வின் நியதியில் அவன் வானங்கள், பூமியயை படைத்த நாள்முதல் இருந்து வர்கின்றன.”(அல்குர்ஆன்)
அவ்வாறே ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் என்பதை பின்வரும் நபி மொழி தெளிவு படுத்துகிறது.
“நாங்கள் எழுதாத, கணக்கை பயன்படுத்தாத உம்மி சமூகமாவோம். எனவே மாதம் என்பது ஒன்றில் இருபத்தொன்பது நாட்களாகும், அல்லது முப்பது நாட்களாகும்” என நபியவர்கள் விரல்களினால் சைகை செய்தார்கள்.”அறிவிப்பளர்: இப்னு உமர் ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்.
மேற்படி நபிமொழி மாதம் என்பது இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்கள் என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஒருபோதும் இருபத்தெட்டு ஆகவோ முப்பத்தொன்று ஆகவோ இருக்க முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றது. எனவே அதனடிப்படையில் மாதத்தின் முதல் நாளை எவ்வாறு தீர்மானிப்பது என்பது தொடர்பான ஆதாரங்களை கவனிப்போம். ரமளான் மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பது தொடர்பாக இஸ்லாம் மூன்றே மூன்று வழிகளை மாத்திரம் காட்டித்தந்துள்ளது.
1.(29ம் நாளில்) பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோட்பது பிறையை கண்ணால் கண்டு நோன்பை விடுவது.
” பிறையை கண்டே நோன்பு வைய்யுங்கள்பிறையை கண்டே நோன்பை விடுங்கள்.” அறிவிப்பளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: புஹாரி
2.(29ம் நாளில்) பிறையை காணாவிட்டால் கண்டதாக வருகின்ற இரு சாட்சிகளின் தகவல்களை ஏற்றுக்கொள்ளல்.
இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள்நோன்பை விடுங்கள்.” அறிவிப்பளர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழ்ர்களிடமிருந்து)ஆதாரம்:அஹ்மத் நஸ்ஈ
3.(இருபத்தொன்பதாம் நாளில்) நாம் பிறையை கானவில்லை, கண்டதான சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்ற நிலையிருந்தால் குறித்த மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்துவிட்டு, பிறை பார்க்காமல், சாட்சியங்களை எதிபார்க்காமல், முப்பதாம் நாளை அடுத்த மாதத்தின் முதல் நாளாக கொள்வது.
மேகத்தால் உங்களுக்கு பிறை மறைக்கப்பட்டால் (மாதத்தை) முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள்.
அறிவிப்பளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: புஹாரி
என‌வே மேற்கூற‌ப்ப‌ட்ட‌ மூன்று அடிப்ப‌டைக‌ளையும் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்ப‌வ‌ர்க‌ளும் ச‌ரி அல்ல‌து ச‌ர்வ‌தேச‌ப்பிறை அடிப்ப‌டையில் செய‌ற்ப‌டுப‌வ‌ர்க‌ளும் ச‌ரி எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். ஆனால்இரு சாட்சிய‌ங்க‌ளின் சாட்சிய‌த்தை ஏற்றுக்கொள்வ‌து என்ற‌ விட‌ய‌த்தில்தான் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்ப‌வ‌ர்க்ளுக்கும் ச‌ர்வ‌தேச‌ப்பிறை பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இடையே க‌ருத்து முர‌ண்பாடு தோன்றுகிற‌து.
மேற்படி இரு சாட்சியங்களும் முஸ்லிம்களாக, நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டுமென்று மாத்திரம் நபிமொழிகள் வலியுறுத்த நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பவர்கள் குறித்த நாட்டுக்குள் அவர்கள் இருக்க வேண்டுமென்று மூன்றாவது ஒரு நிபந்தனையையும் எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இல்லாமல் முடித்து விடுகின்றார்கள். அதாவது நபி (ஸல்) அவர்கள்” இரு நீதமான முச்லிம்களின் சாட்சியம்” என பொதுவாக கூறியிருக்க அவ்விருவரும் எங்கள் நாட்டுக்குள் இருந்தால்தான் ஏற்றுக்கொள்வோம், வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் முஸ்லிம்களாக நீதமானவர்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அடம் பிடிக்கின்றார்கள்.
சர்வதேசப்பிறை அடிப்படையில் செயற்படும் நாம் என்ன கூறுகிறோம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியது போல் இரு நீதமான முஸ்லிம்களின் சாட்சியத்தை அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சரி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். நபி (ஸல்)அவர்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்து வந்த சாட்சியங்களையும் ஏற்றுள்ளார்கள் என பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்திகிறது.
ரமளான் மாதத்தின் முப்பதாம் நாளில் மக்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்பொழுது இரு கிராமப்புற காட்டரபிகள் வந்து அல்லஹ்மீது ஆனையிட்டு நாங்கள் நேற்று இரவு பிறை கண்டதாக நபி (ஸல்)அவர்களிடம் சாட்சி கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (அதை ஏறுக்கொண்டு) மக்களை நோன்பை விடும்படி ஏவினார்கள் அறிவிப்பளர் : இப்னு ஹர்ராஸ் (நபித்தோழரிடமிருந்து)
ஆதாரம்: அஹ்மத்அபூதாவூத்
எனவே அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் உலகில் எங்கு பிறை கண்டாலும் சாட்சியங்கள் அடிப்படையில் அதனை ஏற்று செயற்படுவதே சரியானதாகும். நாட்டுக்கு நாடு பிறை பார்ப்பதற்கு அல்குர் ஆன், அல்ஹதீஸில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபிக்கப் படுகின்றது.
2.ச‌ர்வ‌தேச‌ப்பிறையே அறிவுபூர்வமானதும்:நடைமுறைச்சாத்தியமானதும் ச‌ர்வ‌தேச‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஒற்றுமைக்கு வ‌ழிவகுக்கக்கூடியதுமாகும்:
ஆம், வெளிநாட்டில் உள்ள நீதமான முஸ்லிம்களின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதே அறிவு பூர்வமான விடயமாகும். உதாரணமாக வெளிநாட்டில் உள்ள ஒருவர் இறந்துவிட்டார் என்ற தகவலை ஏற்று அவருடைய மனைவி இத்தா இருக்கின்றார் என்பதப் பார்க்கின்றோம். உள்நாட்டு சாட்சியத்தை மாத்திரம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்கள் கூட இந்த விடயத்தில் இவ்வாறு நடப்பது முரண்பாட்டை காட்டுகிறதல்லவா?
அது மாத்திரமல்ல, நாட்டுக்கு நாடுதான் பிறை பார்க்க வேண்டு மென்பது பகுத்தறிவிற்கு முற்றிலும் முரணான் வாதமாகும். இதை விளங்கிகொள்ள பெரிதாக அல்குர் ஆன், அல்ஹதீஸை ஆய்வு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரமான ஒவ்வொரு முஸ்லிமாலும் இதனைப்புரிந்து கொள்ளமுடியும்.
நாடுகளின் வரையறையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ ஏற்படுத்தவில்லை. அவை மனிதனாலும் அரசியற் காரணிகளாலும் உருவானவை. நாடுகள் சில ஒரு நாடாக மாறவும் கூடும். அதேபோல ஒரு நாடு பல நாடுகளாக பிரியவும் சாத்தியமுண்டு. எனவே, நாடுகள் பிரியும்போதும் சேரும்போதும் அல்லாஹ்வின் சட்டம் வேறுபடும் என்று யாராவது கூறமுடியுமா?
எமது நாட்டையே எடுத்துக்கொள்வோம். தற்போது முழு இலங்கைக்கும் ஒரு பிறை பார்க்க வேண்டுமென்று வாதிடுபவர்கள் தப்பித் தவறி அரசாங்கம் புலிகளுக்கு ஈழ நாட்டை கொடுத்து விட்டால் ஒரு பிறை பார்ப்பதா? இரு வேறு பிறைகள் பார்க்கவேண்டுமா?
இரு பிறைகள் என்றால் அது அறிவுபூர்வமான வாதமா? அல்லது ஒரு பிறைதான் என்றால் நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்ற வாதம் நொருங்கிவிடுமல்லவா? எனவே நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பது அல்குர் ஆன், அல்ஹதீஸுக்கு முரணான வாதம் மட்டுமல்ல மனித அறிவிக்கும் முரணாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் சுமார் ஐம்பது கி.மீ தொலைவிலுள்ள இந்தியாவின் கீழக்கரையில் பிறை கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடாது அனால், சுமார் நானூறு கி.மீ தொலைவிலுள்ள மாத்தறையில் பிறை கண்டால் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது எவ்வளவு பகுத்தறிவுக்கு முரணான வாதம்?அது மாத்திரமல்ல, சர்வதேசக்கடற்பரப்பில் பயணிக்கின்ற ஒருவர் எந்த நாட்டின் பிறை அடிப்படையில் நேன்பு நோட்க வேண்டும்?
உதாரணமாக, இந்தியாவில் பிறை கண்டு இலங்கையில் பிறை காணவில்லை என்று வைத்துக்கொள்வோம், இலங்கை இந்தியாவிற் கிடையில் உள்ள கடற்பரப்பில் பயணம் செய்யும் ஒருவர் இந்திய பிறை அடிப்படையில் நோன்பு நோட்பதா? அல்லது இலங்கையில் பிறை தென்படவில்லை என்று நோன்பு வைக்காமல் விடுவதா?
எனவே நாட்டுக்கு நாடு பிறை என்ற வாதம் அறிவுக்கு முரணான‌தென்பதயும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்; உலகில் ஓரிடத்தில் பார்க்கின்ற பிறையைக் கொண்டு உலக முஸ்லிம்கள் அனைவரும் செயற்பட வேண்டும் என்கின்ற “ச்ர்வதேசப்பிறை” ஒரு நடைமுறச்சாத்தியமான விடயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் எப்போது ஒரு பகுதிக்கு பகலாகவும் ஒரு பகுதி இரவாகவும் இருக்கும். எனவே ஒருபகுதிக்கும் அதற்கு நேர் எதிரே இருக்கின்ற பகுதிக்கும் இடையே உள்ள கால வித்தியாசம் ஆக கூடியது 12 மனித்தியாலங்கலாக இருக்கும்.
உதாரணமாக:- இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை ஏழு முப்பது மணி என்றால் கலிபோனியாவில் வெள்ளிக்கிழமை காலை ஏழு முப்பது ஆக இருக்கும். எனவே இப்போது இலங்கையில் பிறை கண்டால் அது சனிக்கிழமை ரம்ழான் மாதத்தின் முதற்பிறை என்கின்ற படியால் கலிபோனியாவில் உள்ளவர்கள் வெள்ளி இரவு ஸஹர் செய்து சனிக்கிழமை முதல் நோன்பை பிடிப்பார்கள்.
ஆனால், மேற்கு நாடுகளில் முதற்பிறை தென்பட்டால் கீழத்தேய நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது.
அதாவது, கலிபோர்னியாவில் பிறை கண்டதாக அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஏழு முப்பது மனிக்கு அறிவித்தார்களென்றால் நாம் சனி காலை ஏழு முப்பது மனியில் இருப்போம். கலிபோனியாவில் கண்ட பிறை சனிக்கிழமை முதல் நோன்பு என்பதைக்காட்டியதால் சனி காலை ஏழு முப்பது மனியில் இருக்கின்ற நாம் தகவல் கிடைத்த நேரத்தில் இருந்து நோன்பை நோற்க வேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த பின்வரும் சம்பவம் ஆதாரமாகும்.
ரமளான் நோன்பு கடமையாக்க படுவதற்கு முன்பு ஆஷுரா நோன்பு கடமையாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையானதன் பின்னால் அஷுரா நோன்பு விரும்பியவர் நோற்கல்லாம் விரும்பியவர் விட்டு விடலாம் என்று ஆக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது முஹர்ரம் பத்தாம் நாள் யூதர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கக் கண்டு அந்த நாள் ஆஷுரா என தெரிந்து அன்று காலையுணவை சாப்பிட்டார்கள், அப்படியே நோன்பு வக்கும் படியும் சாப்பிடாதவர்கள் அந்த நேரத்தில் இருந்து மீதமுள்ள நேரத்தில் (மாலை வரை) “நோன்பு நோற்கும் படியும் ஏவினார்கள்” இதற்கான ஆதாரங்களை புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் ஆஷுரா என்ற பாடத்தில் பார்க்கலாம்.
எனவே நபி(ஸல்) அவர்கள் ஒரு கடமையான நோன்பை தனக்கு தகவல் தெரிந்த நேரத்தில் இருந்து நோற்று மக்களையும் நோற்கும்படி ஏவியதன் அடிப்படையில் எமக்கு குறித்த நாள் நோன்பு என்று தகவல் கிடைத்தது முதல் நோன்பு நோற்பது கடமையாகும்.
அகவே, ஆகக்கூடுதலான 12 மனி வித்தியாசத்திலேயே பிறைத்தகவலை ஏற்று நோன்பு நோற்பது சாத்தியமாக இருக்கும்போது அதற்குக் குறைவான நேரங்களில் ஏற்படும் வித்தியாசத்தில் நோன்பு நோற்பது மிகவும் சாத்தியமான ஒன்றாகும். எனவே உலகில் ஓரிடத்தில் பிறை கண்டால் அதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுச்செயல்படுவதே நடைமுறைச்சாத்தியமானதாகும் என்பது தெளிவாகின்றது.
ஆனால், நாட்டுக்கு நாடு பிறை பார்த்தல் என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லாத விடயமாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக, கரிபியன் தீவுகள், ட்ரிலிடாட், குயானா அகிய நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 6 மாதங்களை மழைகாலமாக கொண்டிருப்பவர்கள் நாட்டுக்கு நாடு பிறை என்ற அடிப்படையில் 4 மாதங்கள் தொடர்ச்சியாக முப்பது முப்பதாக பூர்த்தி செய்துவிட்டு ரமளான் மாதத்தை ஆரம்பிப்பார்களானால் ரமளான் மாத்தத்தின் முடிவைக்காட்டும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை ரம்ளான் மாதத்தின் 27ல் அல்லது 28லேயே தென்பட்டுவிடும். மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள்தான் என்று நாம் ஆரம்பித்தில் கூறியுள்ள நபிமொழிக்கு இது முரண்படுவதால் இம்மக்கள் வெளிநாட்டவரின் பிறையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
எனவே, நாட்டுக்கு நாடு பிறைபார்த்தல் என்பது எமது நாட்டுக்கு சாத்தியம் சில நாடுகளுக்கு சாத்தியமில்லை என்பதிலிருந்து அது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்பதனை புரிந்து கொள்வதுடன் அசாத்தியமான விடயங்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் மார்க்கமாகாது என்பதனையும் விளங்க வேண்டும்.
சில பாமரர்கள் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நேரத்திலா தொழுகிறார்கள்? தொழுகை நேரங்கள் வித்தியாசப்படுவது போல பெருநாள் போன்றவையும் வித்தியாசப்படவேண்டும் தானே என்று கேள்வி கேற்கின்றனர். இக்கேள்வி அடிப்படையிலேயே தவறாகும். காரணம் நாம் ம்ஃரிப் தொழுவதென்றால் சூரியன் மறைய வேண்டுமென்றுதான் நபி மொழி கூறுகின்றதே தவிர சூரியன் மறந்ததாக இரு முஸ்லிம்கள் சாட்சி சொன்னால் அதனடிப்படையில் தொழுங்கள் என்று கூறவில்லை.
அனால், பிறை விடயத்தில் பிறை கண்டால் நோன்பு பிடியுங்கள் என்று மாத்திரம் கூறாமல் இரு நீதமான முஸ்லிம்கள் அவர்கள் (எந்த நாட்டவராக இருந்தாலும்) பிறை கண்டதாக தெரிவித்தால் நோன்பு பிடியுங்கள் என்றும் நபி மொழி கூறுவதால் தொழுகைக்கும் நோன்பிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பவர்களின் வாதத்தின் படியே பார்த்தாலும் காத்தான் குடி மக்களாகிய நாம் எல்லா வருடங்களும் காத்தான்குடியில் கண்டுதான் நோன்பு பிடிக்கின்றோமா? பிறை கண்டுதான் நோன்பை விடுகின்றோமா?
இல்லை, மாறாக கிண்ணியாவில் பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு அத்தகவல் வானொலி மூலம் அறிவிக்கப்பட்டால் நோன்பு நோற்கிறோம் நோன்பை விடுகிறோம் அவ்வாறே கென்னியாவில் பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு அத்தகவல் தொலை பேசியூடாக அறிவிக்கப்பட்டாலும் கூட அதை ஏற்று செயத்பட வேண்டும் என்றுதான் நாம் கூறுன்றோமே தவிர, பிறை காணப்படாவிட்டாலும் நோன்பு பிடிக்க வேண்டுமென்று ஒரு போதும் கூறவில்லை.
அவ்வாறே சர்வதேசப்பிறையானது முழு உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வழிவகுக்ககூடையதும், கண்டத்திற்கு ஒரு பிறை, நாட்டுக்கு ஒரு பிறை, ஊருக்கு ஒரு பிறை, மத்ஹபுகளுக்கு ஒரு பிறை, தரீக்காவிற்கு ஒரு பிறை என்று அனைத்து வேறுபாடுகளையும் களையக்கூடியதாகவும் உலகமே ஒரு கிராமம் போல் ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை பிரகடணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
3.பிறை விடயத்தில் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவும் அதன் பிறைக்குழுவும் தொடர்ந்தும் மோசடிகள் செய்து வருவது:
நாட்டுக்கு நாடு பிறை பார்த்தல் என்ற அடிப்படையில் நோன்பு, நெருநாள் இபாத்தத்களை நிறைவேற்றிவருவதாக நினத்திருக்கும் நீங்கள் உண்மையிலேயே இலங்கை பிறையின் அடிப்படையில் நோன்பு பிடிப்பதும் இல்லை, பெருநாள் கொண்டாடுவதும் இல்லை.
மாறாக ஜமிய்யதுல் உலமாவின் பிறைக்குழுவும், பெரிய பள்ளிவாயல் நிருவாகமும் பிறை கண்டாலும் சரி, பிறை காணாவிட்டாலும் சரி அவர்கள் இச்சைக்கு ஏற்ப எப்போது நோன்பு என்று அறிவிக்கின்றார்களோ அப்போது நோன்பு நோற்கின்றீர்கள். எப்போது பெருநாள் என்று அறிவிக்கின்றார்களோ அப்போது பெருநாள் கொண்டாடுகின்றீர்கள். இந்த மோசடி நம்பிக்கை துரோகம் ஓரிரு வருடங்களாக அன்றி ஐந்தாறு வருடங்களாக தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
இத்தகவல் உங்களை திடுக்கிட செய்யலாம். உண்மை கசப்பாக இருந்தாலும் அதை எத்தி வைப்பது எமது பணி என்பதால் இங்கு ஆதாரத்துடன் விளக்குகிறோம்.
2005ம் ஆண்டு இலங்கையில் கண்ட பிறையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு புதன், வியாழன், வெள்ளி அகிய மூன்று தினங்களிலும் இல்ங்கை மக்கள் பெருநாள் கொண்டாடினர். இதில் ஜமிய்யதுல் உலமாவில் உள்ள சில உலமாக்கள் கூட பிறைக் குழுவால் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பெருநாள் கொண்டாடினர்.
ஆனால் நமது பிரதேச மக்கள் நோன்பு நாளில் நோன்பு பிடிக்காமல் இருப்பதற்கும், பெருநாள் தினத்தில் நோன்பு பிடிப்பதற்கும், பெருநாள் இல்லாத தினத்தில் பெருநாள் கொண்டாடுவதற்கும் தவறாக வழிநடாத்தப்பட்டனர்.
இவைகளுக்கான அடிப்படைக்காரணம் என்ன?
அல்குர் ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் ஏன் மத்ஹபுகளில் கூட ஒதுக்கப்பட்ட வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து முதல் நாள் பேருவலை முஸ்லிம்கள் கண்ட பிறை நிராகரிக்கப்பட்டது. எனவே குர் ஆன், ஹதீஸுக்கு முரணான வான சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் நோன்பு மற்றும் பெருநாள் தீர்மானிக்கப்படுகிறதே பிறை பார்த்தல் அடிப்படையில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்தோடு இது தொடர்பாக மாற்றுக்கருத்துள்ளவர்களுடன் அவர்கள் யாராக இருந்தாலும் என்றும் எப்போதும் அல்குர் ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ, கல்ந்துரையாடவோ தேவை ஏற்படின் ஒரு பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்ளவோ எமது நிருவன உலமாக்கள் தயாராக உள்ளனர்.
அல்லாஹ் எம்மனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாக காட்டி அதைப்பின்பற்றுகின்ற பாக்கியத்தையும் அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி அதை தவிர்ந்து நடக்கின்ற பாக்கியத்தையும் தந்தருள்வானாக!
“எமது கடமை தெளிவாக சொல்வதே அன்றி வேறில்லை” (அல்குர் ஆன்)

Wednesday, 16 May 2018

மஸ்ஜிதுன் நபவீ ''யில் ஒரு பெண்ணின் ஜனாஸா''வந்து விட்டது.
நபி ஸல் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள்.
அந்த சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலா நேரில் வந்து,"அந்த பெண்ணின் ஜனாஸாவை தாங்கள் தொழ வைக்க வேண்டாம்,அப்படி தொழ வைக்க வேண்டுமானால் அந்த பெண்ணின்
கபுரை சென்று பார்த்து விட்டு பிறகு தொழுகை நடத்த அல்லாஹ் சொல்கிறான் "
என்று உத்திரவிடுகிறார்.
நபி ஸல் அவர்கள் நேராக
சென்று கபுரை காண்கின்றார்கள்.
''சுப்ஹானல்லாஹ்'' கப்ரு குழிக்குள்
பாம்பும் ,தேளும் ,விஷ ஜந்துக்களும்
நிறைந்து காணப்பட்டது.அதைக்கண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் கவலையே உருவாக வருகின்றார்கள்.ஈமான் கொண்ட பெண்ணே என்று எண்ணி மீண்டும்
தொழவைக்க நினைக்கையில் மீண்டும் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல் அவர்களை தடுத்து மீண்டும் அந்த
பெண்ணின் கபுரை சென்று பார்த்து விட்டு பிறகு தொழுகை நடத்த அல்லாஹ் சொல்கிறான்"என்று உத்திரவிடுகிறார்.
மீண்டும் நபி ஸல் அவர்கள் சென்று பார்க்கையில்,கபுர்' அக்னி ஜுவாலையாக , நெருப்பு குண்டமாக மாறி எரிகிறது.விஷ ஜந்துக்கள் அனைத்தும் நெருப்பு கங்குகளாக நெளிகின்றன. அதைக்கண்டு கருணை நபி அன்னவர்கள் கண்களில் கண்ணீர் வடித்து " இந்தப் பெண் என்ன பாவங்கள் செய்தவ ளாக இருக்கும் என எண்ணி, அந்த
பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரரிடம்
விசாரித்தார்.
அவர் இந்த பெண் பற்றி கூறுகையில், " இவர் ஒரு நாள் விட்டு ஒருநாள் நோன்பு பிடிப்பார்,பேணுதலாய் தொழக்கூடியவர். தவராமல் தஹஜ்ஜத்,தொழுவார்.
சதாநேரமும் குர்ஆன் திலாவத்துடன் இருப்பார் என சொன்னார்.
அந்த பெண்ணின் கபுருக்கும் இவர் சொல்லு வதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று எண்ணிய நபி ஸல் அவர்கள்
அவரது கணவன் எங்கு என்று விசாரித்தார். அதற்கு அங்கு உள்ளவர்கள் இவரது கணவர்
இங்கு வரவில்லை என்று சொல்ல, நபி ஸல் அவர்கள் அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்.பின்னர் வந்த அந்த பெண்ணின் கணவரிடம், "உங்கள் மனைவியின் ஜனாஸாவிற்கு ஏன் வரவில் லை என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அந்த மனிதன் " யாரசூலுல்லாஹ் !
ஒரு மனிதன் ''தலாக் ''விடுவானே ஆனால்''
அல்லாஹ்வின் அர்ஸ் '' ஆடுகின்றது என தாங்கள் பகிர்ந்தீர்கள்.அந்த ஒரு வார்த்தை யை நீங்கள் சேர்த்து சொல்லாமல் இருந்தி ருப்பீர்கள் என்றால், அவளை எப்போதோ ''தலாக் ''விட்டிருப்பேன் என்று தனது மனைவியின் செயல் பற்றி மனம் குமுறிக் கொண்டே சொன்னார்.
மேலும் அவர் தனது மனைவி பற்றி கூறு கையில்,"யா ..ரசூலுல்லாஹ் !
தாகத்திற்கு என் மனைவியிடம் தண்ணீர் கேட்ப்பேன் போய் எடுத்து குடித்துக்கொள்; நான் குர்ஆன் ஓதுகிறேன் என்பாள்.வேலை செய்துவிட்டு களைத்து வந்து பசியுடன்
உணவு கேட்பேன்;நான் நோன்பு வைத்துள் ளேன் என்னிடம் வந்து உணவு கேட்கிறாய் ..? எங்காவது போய் சாப்பிடு என்பாள்.எது கேட்டாலும் எரிந்து விழுவாள் ..நான் பொறுத்துக் கொண்டே வாழ்ந்து விட்டேன் யா .. ரசூலுல்லாஹ்...
அதனால் என்னால் என் மனைவியை மன்னிக்கமுடியாது! யா ரசூலுல்லாஹ் ..! என்றார்"அழுது கொண்டே.
அதற்கு நபி ஸல் அவர்கள் "உங்களின்
மனைவி எல்லா நல் அமல்களும் புரிந்தார்.
ஆனால் உங்களின் பொருத்தத்தை இழந்து விட்டார்.கணவனின் பொறுத்தமில்லாமை யின் காரணத்தால் உங்களின் மனைவி நரகம் செல்கின்றார்,எனவே, எனக்காக
வேண்டி உங்களின் மனைவியை மன்னித்து விடுங்கள் என்று தாடி நனைந்து நீர் தாரை கள் நெஞ்சை நனைக்கும் அளவு அழுது கொண்டே அந்த பெண்ணின் கணவரிடம் நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்.
அவ்வாறு நபி ஸல் அவர்கள் சொன்னவுடன் அந்த மனிதர், அன்னவர்களின் கரங்களைப் பற்றிக் கதறி அழுதார்.
பின்னர் பெருமானார் அன்னவர்கள் ஜனாஸா''தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தபோது கபுர்''சொர்க்க பூங்காவாக காட்சி அளித்ததாம்
''சுப்ஹானல்லாஹ் ''......
அதன் பின்பு அங்குள்ளவர்களிடம் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்"யார் ஒரு பெண்மணி தன் கணவரின் பொருத்தத்துடன் இந்த
உலகத்தைவிட்டு மறைவாளேயானால் அவள் நாடிய வழியில் சொர்க்கம் செல்லட்டும் ''
என்று திரு வாக்களித்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ....
நம் தீன் குல பெண்கள் அனைவரையும்
மானக்கேடான செயல்களை விட்டு தடுத்து அந்நிய தீய சக்திகளின் சூழ்ச்சியைவிட்டும்
பாதுகாத்து மேலும் நம் அனைவர்களுக்கும்
நம்மைசார்ந்தவர்களுக்கும் அல்லாஹ்வின்
திருபொருத்தத்துடன் கூடிய ''ஹுஸ்னுள்
ஹாத்திமா'' 'எனும் இறுதி முடிவை நஷீபாக்கித்தருவானாக ..!
ஆமீன் ...ஆமீன்...!! யா ..ரப்பில் ஆலமீன் ..!!

Tuesday, 15 May 2018



இதை படித்தால் கண் கலங்கி போவீர்கள்

ஒரு நாள் காலைப் பொழுது, ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள்.

பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் (ஸல்) அவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே..! நீங்கள் விரும்பினால் உங்கள் துணி மூட்டைகளை என்னிடம் தாருங்கள். நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள்.
“ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் கொடுத்தாள்.

“திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்..?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
தன்னோடு உரையாடுவது முஹம்மது நபிகள் (ஸல்) அவர்கள் என்பதை அறியாத அம்மூதாட்டி “மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் வந்துள்ளாராம். அவர் இறைவனின் இறுதித் தூதராம். முந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டும் என்கிறாராம். நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்..? எங்களது ஜனங்கள் அவரைப் பற்றி பலதும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் வாழ எனக்கு விருப்பமில்லை. அது தான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்” என அம்மூதாட்டி கூறினார்.
அதைக் கேட்டு கொண்டு அமைதியாக வந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

வழியெல்லாம் அம்மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி குறை கூறி கொண்டு வந்தார்.
பொறுமையின் சிகரமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொறுமையோடும், புன்முறுவல் பூத்தவர்களாகவும் நடந்து சென்றார்கள். அப்போது அம்மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிரிப்பில் பிரகாசத்தையும் முகத்தில் பணிவையும் அவதானித்தார்.

கடைசியில் அம்மூதாட்டி சொன்ன இடம் வந்தது. மூட்டையை இறக்கி அம்மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு “நான் போய் வருகிறேன் தாயே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடைபெற்றார்கள்.
மிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து “இந்த சில்லறைகளை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி சில திர்ஹம்களை நீட்டினார்.

அதற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “வேண்டாம் அம்மா, நான் இதனை பணத்திற்காக செய்யவில்லை” என கூறி உறுதியாக மறுத்துவிட்டார்கள்.
கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதரா...? என்று வியந்த அம்மூதாட்டி “கருணை உள்ளம் படைத்தவரே, உங்கள் பெயரையாவது சொல்லி விட்டு செல்லுங்கள்” என்று கூறினார்.

அப்போது நற்குணத்தின் தாயகம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக “நீங்கள் யாருடைய போதனைக்குப் பயந்து இந்த ஊரை விட்டு போகிறீர்களோ, அந்த முஹம்மது நான் தான்” என்று கூறினார்கள்.

அதனை கேட்ட அம்மூதாட்டி அதிசயித்து நின்றார். அவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன. இவ்வளவு நற்குணம் படைத்த ஒருவரையா சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் தப்பாக பேசினேன் என்று உள்ளத்தால் அழுதார்.

நிச்சயமாக நற்குணத்தின் சிகரமான இந்த புனிதர் வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அம்மூதாட்டி அடுத்த கணம் இஸ்லாத்தைத் தழுவினார்.

இதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன.

1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூதாட்டிக்கு உதவும் போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அங்கே மதத்தை தாண்டி மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்து சொன்னார்கள்.

2. தன்னை பற்றி அம்மூதாட்டி கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார்கள். இதில் பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றை உலகிற்கு எடுத்து காட்டினார்கள்.

3.கடைசியாக தன்னை எதிரியாக பார்த்த ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருப்பி கொடுத்தது - “அன்பு”. கடைசியில் எதிரி அன்பரானார்.

அன்பினால்: வேதனை சுகமாகும்.
அன்பினால்: கசப்பு இனிமையாகும்.
அன்பினால்: இருள் வெளிச்சமாகும்.

Sunday, 13 May 2018

பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா?

             
                           

நாட்களையும், மாதங்களையும் தீர்மானிப்பதற்குச் சூரியக் கணக்கு,சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

சந்திர மாதக் கணக்கைப் பொறுத்த வரையில் மாதம் 29 இல் அல்லது 30 இல் முடிவடையலாம். சூரியக் கணக்கைப் போன்று 28 இல் முடியும் மாதங்களோ, 31 இல் முடியும் மாதங்களோ சந்திரக் கணக்கில் கிடையாது. 29 ஆம் அன்று பிறை பார்க்கப்படும் அடுத்த மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டால் புதிய மாதம் தோன்றி விட்டது எனத் தீர்மானிக்கப்படும். அப்படி இல்லையென்றால் இருக்கும் மாதம் 30 இல் முடிவதாகத் தீர்மானிக்கப்படும். சில போது தலைப் பிறை தோன்றி மேக மூட்டம், மழை காரணமாக பிறை தென்படாவிட்டால் கூட மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த அணுகுமுறையைக் கையாளும் போது சில இடங்களில் தெரியாத பிறை, மற்றும் சில இடங்களில் தென்பட வாய்ப்புள்ளது. எனவே, நாட்களைத் தீர்மானிப்பதில் சில முரண்பாடுகள் தோன்றுவது இயல்பாகி விட்டது. ஆரம்ப காலத்தில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. எனினும், மார்க்க அறிவுள்ளவர்-அற்றவர் அனைவரும் மார்க்கம் குறித்து வாதம் செய்யும் நிலை அதிகரித்திருப்பதாலும், தொலைத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியாலும் பிறை என்பது பெரும் குழப்பத்தை ஏற்படும் அம்சமாக ஆகிவிட்டது.

ஸஊதியில் பெருநாள் தொழுவதை நோன்புடன் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒருவருக்கு, தான் நோற்ற நோன்பு சரியானது தானா? என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதான். இந்த வகையில் சமீப காலமாகப் பிறை தொடர்பாகப் பல வாதப் பிரதிவாதங்களும், ஏட்டிக்குப் போட்டியான பிரசார அணுகுமுறைகளும், இயக்கப் பிரிவுகளும் தோன்றி வரும் ஆரோக்கியமற்ற சமூகச் சூழலைச் சந்தித்து வருகின்றோம். ஒரு நாளைத் தீர்மானிப்பதில் இவர்களுக்குள் இத்தனை சர்ச்சைகளா? என்ற மாற்று மதச் சகோதரர்களின் ஏளனத்திற்குமுள்ளாகி வருகின்றோம்.

சர்ச்சைகளுக்கான முதல் காரணம்:
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிறை தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு குழு இருக்கும். இவர்கள் பெரும்பாலும் குர்ஆன்-ஸுன்னா என்ற தூய வட்டத்தை விட்டும் சற்று விலகியவர்களாகவே இருப்பர். இவர்களின் மெத்தனப் போக்கே இந்தச் சர்ச்சை பூதாகரமாக எழுந்ததற்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினால் மிகையாகாது.

பிறை கண்டதாக அறிவித்தால் ஏற்க மறுப்பது, தகவல் உண்மையாக இருந்தாலும் கூட்டம் முடிந்த பின்னர் வந்த தகவல் என்பதற்காக ஏற்க மறுப்பது, ஸஹர் நேரத்தில் பெருநாளை அறிவிப்பது போன்ற செயற்பாடுகளால் பிறைக் குழுக்கள் மீது மக்கள் குறை காண முற்பட்டனர். எனவே, மாற்றுத் தீர்வுக்காக மக்கள் மனம் அலைபாய ஆரம்பித்தது.

அந்தந்தப் பிரதேசங்களில் பிறை கண்டு நோன்பு நோற்றல், பெருநாளைக் கொண்டாடுதல் என்ற நிலைப்பாட்டிலிருந்து மக்கள் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தனர்.

அந்தந்தப் பிரதேசத்துப் பிறையை வைத்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிப்பது என்பது தவறான நிலைப்பாடு அல்ல. ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. இருக்கின்ற நடைமுறை குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரண்படவில்லை என்றால் அதை மாற்றுவதற்காகப் பெரிய சமூக சவாலைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும், பிறைக் குழுவிலுள்ள குறைகளாலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த சிக்கல்களாலும் சர்வதேசப் பிறை என்ற சிந்தனை உருவானது.

பிறை பார்த்து நோன்பு பிடிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்கு பிறை தென்பட்டதாகத் தகவல் கிடைத்தாலும் பிறை பார்த்தல் என்பது நடந்து விட்டது. உள்நாடு-வெளிநாடு என்று நபி(ஸல்) அவர்கள் பிரிக்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்த நாடுகள். இவை ஒன்றாக இருக்கும் போது ஒரு பிறை; அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்த பின்னர் மூன்று பிறைகளா? இலங்கையில் விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்கின்றனர். அப்படித் தனி நாடு கொடுக்கப்பட்டால் கொழும்பில் கண்ட பிறை வடகிழக்கு முஸ்லிம்களுக்குப் பொருந்தாதா? என்றெல்லாம் வாதம் செய்யப்பட்டது.

ஒரு இறைவன்!
ஒரு தூதர்!
ஒரு கிப்லா!

பிறை மட்டும் ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது? என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் நியாயமாக மக்களால் நோக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் குர்ஆன்-ஸுன்னா பேசியோர் இரு கூறுகளாகப் பிரிந்தனர். சிலர் சர்வதேசப் பிறைதான் சத்தியமானது; உள்நாட்டுப் பிறை என்பது அசத்தியம் என்ற தோரணையில் பேச ஆரம்பித்தனர். இந்தக் கருத்து வேறுபாடு பெரும் பிளவாக மாறியது.

உள்நாட்டுப் பிறையை வைத்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துள்ள அறிஞர்கள் சர்வதேசப் பிறையை வன்மையாக மறுக்காததால் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு இந்தப் பிரசாரப் போராட்டம் ஓய்ந்தாலும், இதன் காரணமாக ஏற்பட்ட ரணங்கள் ஆறவில்லை. ஏற்பட்ட பிளவு, பிளவாகவே இருந்து வந்தது. காலப் போக்கில் சர்வதேசப் பிறையிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. பிறை பார்த்தல் என்ற ஸுன்னாவுக்கு இடமில்லாமல், பிறை கேட்டல் என்ற நிலை ஏற்பட்டது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் தொழில் புரிவோர் தரும் தொலைபேசிச் செய்திகளே சர்வதேசப் பிறையைத் தீர்மானிக்கும் சாட்சியங்களாகின. சர்வதேசப் பிறைப் படி நோன்பு நோற்போரே, ஒரு நாள்-இரு நாட்கள் வித்தியாசத்தில் ஒரே நாட்டில் நோன்பையும், பெருநாளையும் அனுஷ்டிக்கும் நிலை ஏற்பட்டது. முழு உலகத்திற்கும் ஒரே நாளில் நோன்பு-பெருநாள் எனப் பிரசாரம் செய்தவர்கள், ஒரே வீட்டிற்குள் இரண்டு பெருநாட்களைக் கொண்டாடும் நிலையை ஏற்படுத்தினர்.

சர்வதேசப் பிறையிலும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை எனும் போது, மக்கள் மனதில் பிறையைக் கணிப்பீடு செய்தல் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இந்தக் கருத்து சர்வதேச மட்டத்திலும் வளர்ந்து வரும் அதே வேளை, தமிழகத்தில் அமைப்புகளைத் துண்டாடுமளவுக்குச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. இலங்கையில் சிலரின் மனதில் இப்போதுதான் இந்த எண்ணம் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

காலத்தைக் கணிப்பீடு செய்யத் தெரியாத உம்மத்தாக இருக்கும் போதுதான் பிறை பார்த்து நோன்பு பிடிக்க நபி(ஸல்) அவர்கள் ஏவினார்கள். இப்போது காலத்தைக் கணிப்பிடும் அறிவை நாம் பெற்று விட்டோம். நூறு வருடங்களுக்கு நோன்பு-பெருநாள் எப்போது வரும் என்பதை நாம் இப்போதே தீர்மானித்து விடலாம் என இத்தரப்பினர் வாதிடுகின்றனர்.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் வானியல் அறிவில் அரசர்களாக இருந்த போது கூட இந்த எண்ணம் முஸ்லிம் உம்மத்திற்கு ஏற்படவில்லை. அடுத்து, பிறையைப் பார்க்க வேண்டும்! என்ற உத்தரவை எப்படிக் கைவிடுவது என்பதும் புரியவில்லை. எனினும், சர்வதேசப் பிறைக் குழுவினர் எப்படித் தமது வாதத்திற்குத் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகியதை ஆதாரமாக முன்வைத்தனரோ, அதே போன்று விஞ்ஞான வளர்ச்சியை இத்தரப்பார் ஆதாரமாக முன்வைக்கின்றனர். “பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறும் போது, நீங்கள் நிழலைப் பார்த்து அதான் கூறுகின்றீர்களா?” அதே போன்று, “காலத்தைக் கணித்து அந்தக் கணிப்பின் பிரகாரம் நோன்பையும், பெருநாளையும் கொண்டாடினால் என்ன குற்றம் வந்து விடப் போகின்றது?” எனக் கேட்கின்றனர். இந்தக் கேள்விகள் நியாயமானவையாகத் தென்பட்டாலும் முடிவுகளைச் சரியானவை என்று கூற முடியாது. அது இந்தக் கட்டுரையின் நோக்கமுமல்ல.

பிறை தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகளால் குர்ஆன்-ஸுன்னா பேசும் அமைப்புகள் பிளவுபட்டு ஒருவரை மற்றவர் பகைத்துக்கொள்ளலாமா? ஒருவரை மற்றவர் தரக் குறைவாக விமர்சிக்கலாமா? ஹறாத்தைச் செய்பவர்கள் எனக் கண்டிக்கலாமா?

இது இஜ்திஹாதுக்கு உரிய ஒரு மஸ்அலாவாகும். இது விடயத்தில் இஜ்திஹாதான அம்சங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய அம்சங்களைக் கடைபிடிக்கின்றோமா? என்பது பற்றி தெளிவுபடுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

பார்வைகள் வித்தியாசப்பட இடமுண்டு:
ஒரு ஆயத்தை அல்லது ஹதீஸை நல்ல நோக்கத்துடன் ஆராயும் இருவர், இரு வேறுபட்ட முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. நோக்கமும், ஆராயும் வழிமுறையும் சரியாக இருந்தால் இரு கருத்துகளை வெளியிட்டவர்களும் கண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

“ஒரு ஆய்வாளன், ஆய்வு செய்து சரியான முடிவைக் கண்டால் அவனுக்கு இரு நற்கூலிகளும், தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலியும் வழங்கப்படும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி: 3662, 344, 7351, 6919, முஸ்லிம்: 1716, 4584, 3576, அபூதாவூத்: 3574, திர்மிதி: 1326)

இங்கே தவறான முடிவை எடுத்தவர் கண்டிக்கப்படவில்லை. இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரனான அல்லாஹ்வே அவருக்கு நற்கூலியைக் கொடுக்கும் போது, அவரைக் கண்டிக்கும் உரிமையை எமக்குத் தந்தது யார்? என்பது சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

அடுத்துத் தீர்ப்புக் கூறுவோர் அதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும். தகுதியில்லாதவர்கள் இதில் தலையிடக் கூடாது! என்பது கவனிக்கப்பட வேண்டும். ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட “அல்ஹாகிம்” என்ற பதம் இதை உணர்த்துகின்றது.

அடுத்து, ஒருவரது தீர்ப்புத் தவறு என்பது தெளிவானால் தீர்ப்பை வெளியிட்டவர் கண்டிக்கப்படாத அதே வேளை, தவறான முடிவு புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

ஒரு வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாகப் புரிந்துகொள்ளும் சாத்தியம் இருப்பதை உணர்த்த மற்றுமொரு நிகழ்ச்சியைக் கவனத்திற்கொள்ளலாம்.

“அப்துல்லாஹ் இப்னு உபை” எனும் முனாஃபிக் மரணித்த போது, நபித் தோழரான அவனது மகன் நபியவர்களிடம் வந்து, தனது தந்தைக்காக ஜனாஸாத் தொழுகை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருக்காகத் தொழுகை நடத்த நபி(ஸல்) அவர்கள் முற்பட்ட போது உமர்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது ஆடையைப் பிடித்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்காகத் தொழுகை நடத்தப் போகின்றீர்களா? உங்களது இரட்சகன் இவனுக்குத் தொழுகை நடத்துவதைத் தடுத்துள்ளான் அல்லவா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ் தடுக்கவில்லை. “(நபியே!) அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லது பாவ மன்னிப்புக் கோராதிருப்பீராக! நீர் அவர்களுக்காக எழுபது தடவைகள் பாவ மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் நிராகரித்தமையே இதற்குக் காரணமாகும். அல்லாஹ் பாவிகளான இக்கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.” (9:80) என்ற வசனத்தில் எனக்குப் பாவ மன்னிப்புக் கேட்பதா? இல்லையா? என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தந்துள்ளான். நான் அவருக்காக எழுபதுக்கும் அதிகமான தடவைகள் மன்னிப்புக் கேட்பேன்!” என்றார்கள். பின்னர், “அவர்களில் மரணித்து விட்ட எவனுக்காகவும் ஒரு போதும் நீர் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்!..” (9:84) என்ற வசனம் அருளப்பட்டது. (புகாரி 4670, 4393)

மேற்படி சம்பவத்தில் ஒரு வசனத்தை உமர்(ரழி) அவர்கள் நோக்கிய விதமும், நபி(ஸல்) அவர்கள் நோக்கிய விதமும் வித்தியாசப்பட்டுள்ளது. இது முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுவிப்பது குறித்து நேரடியான சட்டம் வர முன்னர் நடந்த சம்பவம். மேற்படி (9:80) வசனம் முனாஃபிக்களுக்காக பாவ மன்னிப்புத் தேடக் கூடாது! என்று கூறுகின்றது. ஜனாஸாத் தொழுகையில் இறந்தவருக்காகப் பாவ மன்னிப்புக் கோரப்படுகின்றது. எனவே, முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது! என உமர்(ரழி) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் மேற்படி வசனம் முனாஃபிக்களுக்குப் பாவ மன்னிப்புக் கோருவதைத் தடுக்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனக்குத் தந்துள்ளது என நபி(ஸல்) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஒரே வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாக விளங்க வாய்புள்ளது என்பதை உணர்த்துவதற்காகவே இந்தச் செய்தியைக் கூறினோம்.

பார்வைகள் வித்தியாசப்படுவதுண்டு:

நேரடியான முடிவு கூறப்பட்ட விடயத்தில் வித்தியாசமான விளக்கம் கூற முடியாது. ளுஹர் தொழுகையின் றகஅத்கள் நான்கு என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தால் இது கண்டிக்கத் தக்க கருத்து வேறுபாடாகும். ஏனெனில், முடிவு தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. முடிவு கூறப்படாத ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அம்சத்தில் அவரவரது பார்வை, சிந்தனை, உணர்வுகள், அவரவர் முக்கியத்துவம் கொடுக்கும் துறை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகள் வர வாய்ப்புள்ளது.

இஸ்லாத்தில் நடந்த முதல் போரான “பத்ர்” கைதிகள் குறித்து அபூபக்கர்(ரழி) அவர்களதும், உமர்(ரழி) அவர்களதும் முடிவுகள் வித்தியாசமாக இருந்தன. உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாப்பையும், அபூபக்கர்(ரழி) அவர்கள் குடும்ப உறவு, சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் கருத்துக் கூறினார்கள். எனவே, கைதிகளைக் கொல்ல வேண்டும் என்று உமர்(ரழி) அவர்கள் கூற, அவர்கள் விடயத்தில் மென்மையான கருத்தை அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறினார்கள்.

இதை வைத்து அபூபக்கர்(ரழி) அவர்கள் காஃபிர்களுக்கு ஆதரவு செய்ததாகவோ, வளைந்து கொடுப்பதாகவோ, சமாளிப்பதாகவோ, கொள்கையில் தடம் புரண்டு விட்டதாகவோ உமர்(ரழி) அவர்கள் விமர்சனம் செய்யவில்லை.

பிரிவினை_ஏன்?

குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே சில மஸ்அலாக்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மற்றும் சில விடயங்களைப் பொறுத்த வரையில் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களாக உள்ளன. இதில் தாராளமாக விட்டுக் கொடுத்து நடக்கலாம்.

மற்றும் சில அம்சங்கள் இஸ்லாம் அங்கீகரித்தவை. ஏற்றுக்கொள்வதற்கும், சந்தர்ப்ப-சூழ்நிலையை அவதானித்துத் தவிர்த்துக்கொள்வதற்கும் அனுமதி உள்ள அம்சங்கள். இது நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளாக இருக்குமே தவிர கொள்கை ரீதியானதாகவோ, மார்க்கச் சட்டதிட்டத்தின் அடிப்படையில் எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்குரியதாகவோ இருக்காது. இந்த மூன்று அம்சங்களிலும் ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்யாமல் சுமுகமான உறவைக் கையாளலாம்.

இவற்றுக்கு உதாரங்களாகப் பின்வரும் செய்திகளைக் கூறலாம்;

1- விட்டுக் கொடுத்துப் புரிந்துணர்வுடன் அவரவர் கருத்துப் படி அமல் செய்வதைத் தடுக்காத போக்கைக் கைக்கொள்ள வேண்டிய அம்சம்:

இமாம் சத்தமிட்டு ஓதும் தொழுகைகளில் பின்னாலுள்ளவர்கள் சூறதுல் ஃபாதிஹாவை ஓத வேண்டுமா? அல்லது கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
2- இஜ்திஹாதுக்குரிய அம்சம்
உள்நாட்டுப் பிறையா? சர்வதேசப் பிறையா? எதை வைத்து அமல் செய்வது? உறுப்பு தானம் செய்யலாமா?
3- நிர்வாக ரீதியான முடிவு:
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சமூகச் சேவைக்காகவும், அழைப்புப் பணிக்காகவும் நிதியைப் பெறலாமா? அல்லது தவிர்க்க வேண்டுமா?

இது போன்ற நிலையில் நாம் நிதி பெறுவ தில்லை என முடிவு செய்துள்ளோம்.நீங்கள் நிதியைப் பெற்றுச் சேவை செய்வ தென்றால் எமக்கு ஆட்சேபனை இல்லை என்ற போக்கே கடைபிடிக்கப்பட வேண்டும்.

எனினும்,குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடை யே  ஷைத்தான் பிரிவினையை உண்டுபண் ணவும்,தப்பபிப்பிராயங்களை வளர்க்கவும், அவதூறுகளையும்,போலியான குற்றச்சாட் டுகளை உருவாக்கவும் இத்தகைய சாதார ணப் பிரச்சினைகளைத்தான் பயன்படுத்து கின்றான் என்பது ஆச்சரியமான செய்தியா கும்.

அகீதாவில் ஒன்றுபட்டவர்கள் இத்தகைய சாதாரணக் கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டு நிற்பதும், நீதி-நியாயங்களை யும், இஸ்லாமிய வரம்புகளையும் மீறிக் கோபத்தையும், குரோதத்தையும் வெளிப்படுத்துவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிறை போன்ற அம்சங்களை அடிப்படையாக முன்வைத்து இயக்கங்களைத் துண்டாடுவதையும், ஆலிம்களைப் புறக்கணிப்பதையும் எப்படி நியாயப்படுத்த முடியும்?

அனைத்திலும் குர்ஆன்-ஸுன்னா பேசுவோர் அகீதா ரீதியான முரண்பாடுகளைக் கையாள்வதை விட மிக மோசமான வெறியுணர்வுடன் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களை எப்படிக் கையாள முடியும்?

உண்மையில், மார்க்கத்தில் பற்றிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது. தனிநபர் மீதுள்ள பற்றும், பகையும், தனியான அமைப்புகள் மீதுள்ள முத்திப் போன பக்தியும்தான் இத்தகைய பகையை ஏற்படுத்துகின்றன.

எனவே, இஜ்திஹாதுக்குரிய அல்லது சாதாரண நிர்வாக ரீதியான முடிவுகள் எமது சகோதரத்துவத்தையோ, பிரசார அமைப்பு களையோ சிதைக்காத விதத்தில் கையாளப் பட வேண்டும்.

  • பிறை விடயத்தில் இதன் பின் ஒன்றுபட்ட முடிவு வருவதற்கான வாய்ப்பு அரிதாகவே இருக்கின்றது. இஜ்திஹாதுக்குரிய அம்சம் என்ற வகையில் சுய ஆய்வை இது விடயத்தில் விட்டுக் கொடுப்பது கூடக் குற்றமாகாது.குறிப்பாகப் பிறை விடயத்தில் இஸ்லாமே விரிந்த தாராளப் பார்வையைத்தான் வேண்டி நிற்கின்றது. அப்படி வர முடியாது போனால் கூட பிறையால் பிளவுபட்டுப் பகையுணர்வுடன் செயற்படும் இந்த நிலையையாவது நீக்குவதற்கு நாம் நிச்சயமாகச் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். இதனைக் 
  • கருத்திற்கொண்டு களப்பணி புரிவோமாக!
  • நன்றி Abdhul Hakeem