Saturday 5 May 2018

சொர்க்கத்தின் உள்ளே செல்லும் முதல் பெண்மணி யார்

சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் ?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தி ல் அன்னை பாத்திமா (ரலி)மிகவும் ஆவ லோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா (ரலி) அவர்கள் கேட்டவுடன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான்.ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூரினார். சொர்க்கத்தின் உள்ளே நுழைவது விறகு வெட்டியின் மனைவியா..? யார் அவர் என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.. உனது வீட்டுக்கு அருகாமையில் தான் அவருடைய வீடு இருக்கிறது என்று கூறினார்.அன்னை பாத்திமா நாயகிக்கு ஆவல் அதிகரித்து அப்படி என்ன கூடுதல் தகுதி இருக்கிறது என்பதை அறிய அவரை சந்திப்பதற்காக தன்னுடைய கணவர் அலி (ரலி) அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு விறகு வெட்டியின் வீட்டுக்கு சொன்று கதவை தட்டுகிறார்.
யார் அது என்று ஒரு பெண்மணின் குரல் கேட்கிறது நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் தங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன் என்று பாத்திமா(ரலி) கூறுகிறார் உலகமே திரும்பி பார்க்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான நபிகள் நாயகத்தின் மகள் ஒரு ஏழையின் வீட்டு வாசலில் நின்று கொண்டு நான் தான் பாத்திமா என்று கூறிய அந்த நேரத்திலும் அந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்னுடைய கணவர் இல்லாத நேரத்தில் கதவு திறக்க அனுமதி இல்லை என்று விறகு வெட்டியின் மனைவி கூறுகின்றார்.
மேலும் அல்லாஹ்வின் தூதரின் மகளை காண்பதற்கு எனக்கும் ஆசைதான். ஆனால் என்னுடைய கணவரின் அனுமதி இல்லாம ல் கதவு திறப்பதற்கு எனக்கு அனுமதியில்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.மேலும் அந்த பெண்மணி கூறுகையில்.நாளை நீங்கள் வருவதாக இருந்தால் என்னுடைய கணவரிடம் அனுமதி பெற்று வைக்கிறேன் என்று அந்த பெண்மணி கூறினார். அதன் அடிப்படையில் அன்னை பாத்திமா (ரலி) இரண்டவது நாளாக தன்னுடைய புதல்வர்கள் ஹசன்(ரலி) ,ஹுசைன்(ரலி) ஆகியோரை அழைத்து சொல்கிறார்.
முதல்நாளை போன்று கதவை தட்டுகிறார் முதல் நாளை போல யாரது என்று பெண்ணி ன் குரல் கேட்கிறது.நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் என்னுடன் என்னுடைய புதல்வர்கள் இருவரும் வந்து ள்ளனர் என்று பாதிமா (ரலி) கூருகிறார். இரண்டாவது நாளும் கதவு திறக்கப்பட வில்லை நாயகி என்னை மன்னிக்கவேண்டு ம் நீங்கள் வருவதற்கு மட்டும்தான் அனுமதி பெற்றேன்.தங்களுடைய புதல்வர்கள் உள்ளே வர அனுமதி இல்லை. நாயகியை மறுத்தமைக்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நான் சொல்லும் வார்த்தைகளை தாங்கள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கூறுகிரார்.
முன்றாவது நாளாக புதல்வர்களை விட்டு மீண்டும் அதே வீட்டுக்கு அன்னை பாத்திமா (ரலி) செல்கிறார் மூன்றாவது நாலும் தட்டுகிறார், யார் என்று அதே போல குரல் கேட்கிறது. நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துளேன் என்று அன்னை கூறியவுடன் கதவு திறக்கபடுகிறது என்னுடைய கணவரிடம் உங்களுடைய வருகை குறித்து அனுமதி கேட்டேன். பெருமானாரின் குடும்பத்தினர் யார்தான் வந்தாலும் எவ்வித தடையும் இல்லை என்று கணவர்  கூறியதாக அந்த பெண்மணி கூறினார். அதன் பிறகு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அஸர் தொழுகை வருகிறது.
இருவரும் தொழுகிறார்கள் தொழுகை முடித்து அன்னை பாத்திமா (ரலி) ஓரமாக அமர்ந்துகொள்கிறார் ஆனால் அந்த பெண்ம ணியோ யாஅல்லாஹ் தன்னுடைய சேவை தன்னுடைய கணவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவருக்கு ஆயுள் பலம், தேக நலம் அளித்திட வேண்டும் என்று கணவருக்காக கண்ணீர் மல்க"துஆ"செய்கிறார்.அங்கிருந்து ஸலாம் சொல்லிவிட்டு அன்னை பாத்திமா அங்கிருந்து விடைபெற்று மறுநாள் தன்னுடைய தந்தையிடம் நடந்தவைகளை சொல்லிவிட்டு அல்லாஹ்வை வணங்கா மல் வேறு எதுவும் வணங்க கட்டளை இருந்தால் இனிதான கணவரை வணங்குவதற்கு அனுமதி பெறுவேன் என்று கூருகிறார்.
கணவனின் உடமைகளை கவனமாக காத்து கொள்பவள், கணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடந்து கொள்பவள், கணவனின் குணமறிந்து கனிவு கொண்டு கடமை செய்பவள், கணவனின் காலடியில் காலமெல்லாம் சேவை செய்பவள், கணவனின் ஆணையின்றி வீட்டில் பிறரை சேர்த்திடாதவள், கணவனின் எதிரில் கையை தரக்குறைவாய் நீட்டிடாதவள். நாளை சொர்க்கத்தில் நல்ல இடத்தை பெற்றுக் கொள்வாள் என்றும் நரகிலிருந்தும் தப்பி கொள்வாள்.
எனது அருமை மகள் பாத்திமாவே.. ஒட்டகத்தில் நீ வரும்போது விறகு வெட்டி யின் மனைவி ஒட்டகத்தின் கயிறை கையிலே பிடித்தவாறு முதல் ஆளாய் சொர்க்கத்தின் உள்ளே நுழைவார், கண்ணான என் மகளே அடுத்தபடி நீ நுழைவாய். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

Wednesday 2 May 2018

நபிகளார் பலதார மணம் புரிந்தது ஏன்

         
                              நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பலதார மணம் புரிந்தது ஏன்?

நபி (ஸல்) நல்ல உடல் வலிமையும் திடகாத்திரமும் கொண்ட வாலிபக் காலத்தில் தன்னை விட 15 வயது அதிகமான கதீஜா (ரழி) அவர்களுடனே ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள். கதீஜா (ரழி) மரணமான பின்பே ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவரும் வயதில் நபி (ஸல்) அவர்களை விட மூத்தவராக இருந்தார். அதற்குப் பின் தனது வயோதிக காலத்தில்தான் பல திருமணங்களைச் செய்தார்கள். இதை நன்கு சிந்திப்பவர் “நபி (ஸல்) பல திருமணங்களை செய்தது, அதிக ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான்” என்று அறவே கூற முடியாது. மாறாக, அதற்குப் பல உயர்ந்த உன்னத நோக்கங்கள் இருந்திருக்க வேண்டும் என அறியலாம்.

அபூபக்ர் (ரழி) அவர்களின் மகள் ஆயிஷாவையும், உமர் (ரழி) அவர்களின் மகள் ஹஃப்ஸாவையும் நபி (ஸல்) மணமுடித்து அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகிய இருவருடனும் உறவை பலப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு அலீ (ரழி) அவர்களுக்குத் தனது மகள் ஃபாத்திமாவையும், உஸ்மான் (ரழி) அவர்களுக்குத் தங்களது மகள்கள் ருகைய்யா பின்னர் உம்மு குல்சூமையும் மணமுடித்துக் கொடுத்து உறவை செம்மைப்படுத்திக் கொண்டார்கள். இந்த நால்வரும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பல இக்கட்டான நேரங்களில் உடல், பொருள் தியாகங்கள் புரிந்து இஸ்லாத்திற்காக வெற்றியைத் தேடித் தந்தவர்கள். எனவே, இந்த நால்வருடன் மக்கள் அனைவரும் நல்லுறவுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இத்திருமணங்கள் மூலம் நபி (ஸல்) முஸ்லிம்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அரபியர்கள் பண்டைக் கால வழக்கப்படி மாமனார் வீட்டு உறவைப் பெரிதும் மதித்தனர். இவ்வுறவு பல மாறுபட்ட குடும்பங்களுக்கிடையில் நெருக்கத்தை உண்டு பண்ணுவதற்குரிய வழிகளில் ஒன்றாக இருந்தது. மாமனார் வீட்டு உறவுகளுடன் சண்டையிடுவதையும், போர் புரிவதையும் அவர்கள் தங்களுக்கு மகா கேவலமாகவும் இழுக்காகவும் கருதினர். பல மாறுபட்ட வமிசங்களிலிருந்து நபி (ஸல்) தங்களது திருமணங்களைச் செய்து அந்த வமிசங்களுக்கிடையே உள்ள பகைமையை யும் கோபத்தையும் தணிக்க முயற்சித்தார்கள்.

எடுத்துக்காட்டாக, உம்மு ஸலமா (ரழி) - இவர் மக்ஜூம் கிளையைச் சேர்ந்தவர். அபூ ஜஹ்லும், காலித் இப்னு வலீதும் இதே கிளையைச் சேர்ந்தவர்கள்தான். (அபூஜஹ்ல் பத்ரு போரில் கொல்லப்பட்டான்) நபி (ஸல்) அவர்களைப் பல போர்களில் எதிர்த்து வந்த காலித் இப்னு வலீத் (ரழி) தனது கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) மணமுடித்துக் கொண்டதால் தனது எதிர்ப்பைக் கைவிட்டு குறுகிய காலத்திற்குள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாமை ஏற்றார்.

இவ்வாறே உம்மு ஹபீபா (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அபூ ஸுஃப்யானின் மகளாவார். அபூ ஸுஃப்யான் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த கொடுமைகள் அனைவரும் அறிந்ததே. உம்மு ஹபீபாவை நபி (ஸல்) திருமணம் செய்தபின் அபூஸுஃப்யான் தனது தீய செயல்களிலிருந்து சற்றே பின்வாங்கினார்.

அதுபோலவே, பனூ நழீர் மற்றும் பனூ முஸ்தலக் ஆகிய இரு யூத வமிசங்களிலிருந்து ஸஃபிய்யா மற்றும் ஜுவைரியாவை மணமுடித்தார்கள். இதனால் இவ்விரு குலத்தாரும் நபி (ஸல்) அவர்களிடம் பகைமை காட்டிவந்ததை நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமின்றி ஜுவைய்யா (ரழி) அவர்களினால் அவர்களது சமூதாயத்திற்குப் பெரும் நன்மைகளும் பலன்களும் கிடைத்தன. நபி (ஸல்) பெண்ணெடுத்த சமூகத்தார்களை அடிமையாக்கி வைப்பதா? என்று கைதிகளாக இருந்த அவர்களது சமூகத்தின் நூறு குடும்பத்தார்களை நபித்தோழர்கள் உரிமையிட்டார்கள். உள்ளங்களில் இந்த உதவி எவ்வளவு பெரியமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த பலன்களுக்கிடையில் மேலான மற்றும் ஒரு பலன் இத்திருமணங்களால் ஏற்படுகின்றது. அதன் விளக்கமாவது:

நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தினர் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை அமைப்பதற்குத் தேவையான பண்புகளை அறியாதவர்களாக இருந்தனர். இத்தகைய சமுதாயத்தைப் பண்படுத்தவும், சீர்திருத்தவும் வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.

இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படை, ஓர் ஆண் அந்நியப் பெண்ணுடன் கலப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஆண்களால் பெண்களை முழுமையாக சீர்திருத்துவதென்பது இச்சட்டத்தைக் கவனித்து முடியாத ஒன்று. ஆனால், பெண்களையும் சீர்திருத்த வேண்டும் என்ற அவசியம் ஆண்களைச் சீர்திருத்த வேண்டும் என்ற அவசியத்தை விட சற்றும் குறைவானதல்ல மாறாக, அதைவிட மிக அதிகமானதே.

ஆகவே, மகத்தான இச்சீர்திருத்தப் பணியை நிறைவேற்ற அதற்குத் தகுதிவாய்ந்த மாறுபட்ட வயதும் திறமையும் கொண்ட பெண்களை தனக்குத் துணையாக தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தவிர நபி (ஸல்) அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அப்போதுதான் வீட்டுப் பெண்களுக்கு ஒழுக்கப் பண்புகளையும் மார்க்கச் சட்டங்களையும் வழங்கலாம். அதன்மூலம் அவர்களை மற்ற கிராம, நகர, வாலிப, வயோதிகப் பெண்களுக்கு மார்க்கப் பயிற்சி தரும் ஆசிரியைகளாக உருவாக்க முடியும். அப்பெண்மணிகள் நபி (ஸல்) அவர்களின் சார்பாக பெண்ணினத்திற்கு மார்க்கத்தை எடுத்துரைக்கும் பொறுப்பையும் நிறைவேற்றுவார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவிகளான முஃமின்களின் தாய்மார்கள், நபி (ஸல்) தங்கள் வீடுகளில் எப்படி இல்லற வாழ்க்கையை நடத்தினார்கள் என்ற செய்திகளை நமக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இதில் அவர்களது பங்கு மகத்தானது. குறிப்பாக, நபி (ஸல்) அவர்களுடன் நீண்ட நாட்கள் வாழ்ந்த ஆயிஷா (ரழி) போன்ற துணைவியர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களின் பெரும்பாலானவற்றை சமுதாயத்திற்குத் தெரிவித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.

மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான். நபி (ஸல்) அவர்களின் மாமி மகள் ஜைனப் பின்த் ஜஹ்ஷை ஜைதுப்னு ஹாஸா (ரழி) மணமுடித்திருந்தார். ஜைதை சிறு வயது முதலே நபி (ஸல்) வளர்த்து வந்ததால் இவரை ஜைத் இப்னு முஹம்மது (முஹம்மதின் மகன் ஜைது) என்றே மக்கள் அழைத்தனர். ஆனால், இத்தம்பதியடையே சுமுகமான உறவு நிகழவில்லை. இதனால் ஜைது (ரழி) தனது மனைவியை விவாகரத்து செய்துவிட எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசித்தார்.

ஜைது (ரழி) தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டால் அவரை, தானே மணக்க நேரிடும் என அல்லாஹ்வின் அறிவிப்பு மூலம் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், இத்திருமணம் நடந்தால் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பழிப்பார்கள். நயவஞ்சகர்களும் யூதர்களும் முஷ்ரிக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக குழப்பங்களையும் தவறானக் குற்றச்சாட்டுகளையும் பரப்புவார்கள். அதனால், பலவீனமான நம்பிக்கையுடைய முஸ்லிம்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் ஏற்படலாம். ஆகவே, ஜைது (ரழி) தலாக் விஷயமாக பேசிய போது தலாக் விடவேண்டாம் என நபி (ஸல்) அவருக்கு அறிவுரை கூறினார்கள்.

நபி (ஸல்) உணர்ந்த இந்த அச்சமும் தடுமாற்றமும் அல்லாஹ்வுக்கு பிடிக்கவில்லை. எனவே, நபியவர்களை கண்டித்து அடுத்துவரும் வசனத்தை அருளினான்.

(நபியே!) அல்லாஹ்வும், நீங்களும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி “நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து உங்களுடைய மனைவியை (நீக்காது) உங்களிடமே நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிய சமயத்தில், நீங்கள் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உங்கள் மனதில் மறைத்தீர்கள். நீங்கள் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) (அல்குர்ஆன் 33:37)

ஆனால், நடக்க வேண்டியது நடந்து விட்டது. ஜைது (ரழி) தன் மனைவியை தலாக் கொடுத்து விட்டார், நபி (ஸல்) பனூ குறைளா யூதர்களை முற்றுகையிட்ட காலக்கட்டத்தில் ஜைனப் (ரழி) அவர்களுடைய இத்தா முடிந்தவுடன் நபி (ஸல்) அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இதனை நபியவர்களின் விருப்பத்திற்கு விடாமல் தானே மணமுடித்து வைத்ததாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

‘ஜைது’ (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக் கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக, இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும். (அல்குர்ஆன் 33:37)

இவ்வாறு அல்லாஹ் செய்ததற்குக் காரணம்:

ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கின்றது. (அல்குர்ஆன்33:5)

மற்றும்,

(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:40)

ஆகிய வசனங்களால் இந்தத் தவறான நடைமுறையை சொல்லால் உடைத்தது போல் செயலாலும் அதனை உடைக்க விரும்பினான்.

ஊறிப்போன எத்தனையோ பழக்க வழக்கங்களைத் தகர்ப்பது என்பது சொல்லால் மட்டும் முடியாது. அதனை மாற்ற நினைக்கும் சத்திய அழைப்பாளர்கள் தனது செயலாலும் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும். இதற்கு ஹுதைபிய்யா, உம்ராவில் நடந்த நிகழ்ச்சியை அழகிய எடுத்துக்காட்டாகக் கூறலாம். நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த அன்பு, பாசம் பற்றி உர்வா இப்னு மஸ்வூத் (ரழி) கூறிய ஹதீஸிலிருந்து நாம் தெரிந்திருக்கலாம்.

“உஸ்மான் (ரழி) கொல்லப்பட்ட செய்தி உண்மையாயின் வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போர் புரிய வேண்டும் பின் வாங்கக் கூடாது” என்று நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் மரத்தின் கீழே சத்தியவாக்குறுதி வாங்கினார்கள். அந்நேரத்தில் நபியவர்களிடம் போட்டி போட்டுக் கொண்டு தோழர்கள் சத்திய வாக்குறுதி தந்தார்கள். மேலும், அதில் அபூபக்ர், உமர் (ரழி) போன்ற நெருக்கமான தோழர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் அந்தத் தோழர்களுக்குச் சமாதான உடன்படிக்கை நிறைவேறிய பின், தங்களின் குர்பானி பிராணிகளை அறுக்கும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். ஆனால், நபியவர்களின் இக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு தோழர்களில் எவரும் முன்வரவில்லை. இது நபி (ஸல்) அவர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த உம்மு ஸலமா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! தாங்களே முதலில் எழுந்து சென்று குர்பானியை நிறைவேற்றுங்கள் யாரிடமும் பேசாதீர்கள்” என்று ஆலோசனை வழங்கினார்கள். அதற்கிணங்க நபி (ஸல்) அவர்களும் அவ்வாறு செய்ய, தோழர்கள் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு குர்பானியை நிறைவேற்றினார்கள். ஆகவே, காலங்காலமாக ஊறிப்போன பழக்கத்தைத் தகர்த்தெறிவதில் சொல்லால் திருத்துவது அல்லது செயலால் திருத்துவது ஆகிய இரண்டிற்குமிடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலுள்ள வேறுபாடு இருப்பதை உணரலாம்.

ஜைனபை நபி (ஸல்) திருமணம் செய்த பின்பு இத்திருமணம் குறித்து நயவஞ்சகர்கள் பல தவறான பொய்ப் பிரச்சாரங்களை மக்களுக்கிடையில் பரப்பினர். இறைநம்பிக்கையில் உறுதியற்ற முஸ்லிம்களின் இதயங்களில் தீய எண்ணங்கள் உண்டாயின.

இத்திருமணத்தால் இரண்டு விதமான குழப்பங்களை நயவஞ்சகர்கள் உண்டாக்கினர். 1) நபி (ஸல்) அவர்களுக்கு இது ஐந்தாவது திருமணமாக இருந்தது. (நான்கிற்கு மேல் திருமணம் முடிப்பது அனுமதியில்லை என முஸ்லிம்கள் அறிந்திருந்தனர்.) 2) ஜைது (ரழி) நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன். அவர் நபி (ஸல்) அவர்களின் மகனாகவே கருதப்பட்டு வந்தார். இதைச் சொந்த மகனின் மனைவியைச் சொந்தத் தந்தை மணமுடிப்பதைப் போன்று மானக்கேடான செயலாகக் கருதினர். அல்லாஹு தஆலா இவ்விரண்டையும் குறித்து தௌ;ளத் தெளிவான பதிலை சூரா அஹ்ஜாபில் இறக்கி வைத்தான். அதன் மூலம் ‘ஒருவரை வளர்ப்பு மகனாக ஆக்குவது மார்க்க சட்டத்தில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது’ என்றும் ‘நபி (ஸல்) அவர்களுக்கு பல உன்னத நோக்கங்களுக்காக ஏனைய முஸ்லிம்களைவிட திருமண விஷயத்தில் சிறப்புச் சலுகையை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்’ என்றும் முஸ்லிம்கள் புரிந்துகொண்டனர்.

நபி (ஸல்) தங்களது மனைவிமார்களுடன் மிக அழகிய முறையில் உயர்ந்த பண்புகளுடனும் சிறந்த குணங்களுடனும் வாழ்க்கை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் அவ்வாறே உயர்ந்த குணங்களும் சிறந்த பண்புகளும் பெற்றிருந்தனர். பொது மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வறுமையில் வாழ்ந்தும், நபி (ஸல்) அவர்களுக்குப் பணிந்து, பணிவிடை செய்து நல்ல மனைவியர்களாகத் திகழ்ந்தார்கள்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அல்லாஹ்விடம் சென்றடையும் வரை மெல்லிய ரொட்டியை அவர்கள் பார்த்ததாக எனக்குத் தெரியாது. பொறித்த ஆட்டுக் கறியை நபி (ஸல்) சுவைத்ததே இல்லை. (ஸஹீஹுல் புகாரி)

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்து விட்டோம். நபி (ஸல்) அவர்களின் வீடுகளில் எதுவும் சமைக்கப்படவில்லை.” உர்வா, “நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? என்று ஆயிஷாவிடம் கேட்டார். அதற்கு, “பேரீத்தம் பழங்களையும் தண்ணீரையும் உண்டு வாழ்ந்தோம்” என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள். இதுபோன்ற அநேக சம்பவங்கள் ஹதீஸ் நூற்களில் பதிவாகியுள்ளன. (ஸஹீஹுல் புகாரி)

வறுமையிலும் நெருக்கடியிலும் வாழ்ந்த போதிலும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர்கள் முகம் சுளித்ததோ, மனம் வருந்தியதோ, முறையீடு செய்ததோ இல்லை. ஆம்! அவர்களும் மனிதர்கள் தானே. இவ்வாறு ஒரே ஒரு முறை நிகழ்ந்தது. அதை அல்லாஹ் கண்டித்து ஒரு வசனத்தை இறக்கினான்:

நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன். அன்றி, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நன்மையைக் கருதுபவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்குர்ஆன் 33:28, 29)

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தேர்ந்தெடுத்து, தங்களது உயர்ந்த பண்புகளையும் சிறந்த குணங்களையும் நிலைநாட்டினர். அவர்களில் எவரும் உலகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களுக்கிடையில் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் பொதுவாக சக்களத்திகள் மத்தியில் இருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படவில்லை. அவர்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒரு சில நிகழ்வுகள்தான் நடந்தன. அதையும் அல்லாஹ் கண்டித்து விட்டான். அத்தியாயம் தஹ்ரீமின் துவக்கத்திலிருந்து ஐந்து வசனங்கள் வரை இதுபற்றியே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இறுதியில்........

பலதார மணங்களின் அடிப்படையைப் பற்றி ஆழமாக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்த பலதார மணங்களைக் கடுமையாக விமர்சிக்கும் ஐரோப்பியர்களின் வாழ்க்கையையும், அவர்கள் படும் சிரமங்களையும், துன்பங்களையும், அவர்கள் புரியும் குற்றங்களையும், செய்யும் அசிங்கங்களையும் இந்த நேரிய அடிப்படையிலிருந்து விலகியதால், அவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்களையும், துயரங்களையும் ஆழிய கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்தால் பலதார மணம் மிக அவசியமானதும், இன்றியமையாததும், மிகச் சரியான தீர்வு எனவும் விளங்கிக் கொள்ளலாம். அறிவுடையோருக்கு இதில் நல்லதோர் படிப்பினை உண்டு.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

மூஸா அலைஹிஸ்ஸலாம்

                             
           
                       

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 3200 வருடங்களுக்கு முன் எகிப்தில் பிறந்தார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் இஸ்ராயில் என்ற வம்சத்தில் பிறக்கின்ற எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்ய உத்திரவிட்ட காலத்தில்தான் அவர் பிறந்தார். மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பிறந்தவுடன் அவரைப் பெட்டியில் வைத்து நைல்நதியில் விட்டுவிடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். நைல்நதியில் மிதந்து வந்த பெட்டியில் உள்ள குழந்தையை ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா கண்டெடுத்து ஃபிர்அவ்னின் அரண்மனைக்கு கொண்டு சென்றார். அக்குழந்தை இஸ்ராயில் வம்சத்தை சார்ந்ததினால் அக்குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்தான். ஆனால் தன் மனைவி ஆசியாவின் நிர்பந்தத்திற்க்கு இணங்கி அக்குழந்தையை கொல்லாமல் விட்டுவிட்டான். அக்குழந்தைக்கு பால் கொடுப்பதற்க்காக செவிலித்தாய் என்ற முறையில் ஃபிர்அவ்னுக்கு தெரியாமல் அதன் சொந்த தாயிடம் ஒப்படைத்தார்கள். மூஸா அலைஹி வஸ்ஸலாம் ஃபிர்அவ்னின் அரண்மனையிலே வளர்ந்து வாலிபம் அடைந்தார். ஓரு அக்கிரமக்காரனின் கொடுமையிலிருந்து அப்பாவியான இஸ்ரவேலரை காப்பதற்க்காக மூஸா அவனை தாக்கிய போது அவன் இறந்து விடுகிறான். அவனை கொலை செய்வது மூஸாவின் நோக்கமல்ல. ஆனால் கொலைப் பழி அவர்மீது சாட்டப்பட்டதால் ஃபிர்அவ்னின் ஆட்கள் அவரை தேட ஆரம்பித்தனர். இதை அறிந்ததும் அவர் அந்த இடத்தைவிட்டு தப்பி சென்றுவிட்டார். சினாய் மலைப்பகுதிகளையும், பாலைவனங்களையும் கடந்து பல மைல் தூரம் தனித்து நடந்து மதியன் இடத்தை அடைந்தார்.

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.

ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார். அல்குர்ஆன் 28:23-24
the place where the damsels watering their flocks

ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டிய இடம்.
 the shade where the Prophet Moosa took rest.

மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஓய்வெடுத்த இடம்.

இங்கு ஓய்வெடுக்கும் போதுதான் அப்பெண்களில் ஒரு பெண் சிறிது வெட்க்கத்துடன் வந்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்து உதவியதற்க்கு கூலி கொடுக்க எங்கள் தந்தை அழைக்கிறார் என்று கூறினார். அந்த தந்தை ஸுஐப் அலைஹி வஸ்ஸலாம் ஆவார்கள். ஸுஐப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் மகள்களில் ஒருவரை பத்து ஆண்டுகள் ஆடு மேய்த்து திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின்படி திருமணம் செய்து கொடுத்தார்கள். அதற்க்குபின் பத்து ஆண்டுகள் மத்யனில் வாழ்ந்த பிறகு மனைவியை அழைத்துக் கொண்டு மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு இப்பொழுது எகிப்த்தை சார்ந்த தெற்க்கு சினாயில் உள்ள துவா பள்ளத்தாக்கிற்க்கு வந்து சேர்ந்தார்.
The valley of Thua

துவா பள்ளத்தாக்கு

இரவில் அந்த இருளில் அல்லாஹ் அவரிடம் நேரில் பேசினான். அதற்க்கு பிறகு நேர்ந்த சம்பவங்களை குர்ஆனில் அல்லாஹ் விவரிக்கிறான்.

“நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

இன்னும் “நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.

“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:12-14
Holy Catherine Church

துவா பள்ளத்தாக்கில் கி.பி.330ல் கான்ஸ்டன்டைன் என்ற கிருத்துவ அரசன் நிர்மானித்து கி.பி.530ல் ஜஸ்டினிய மன்னரின் உத்தரவின்பேரில் விரிவு செய்யப்பட்ட புனித கேதரின் என்ற கிருத்துவ மடம்தான் இது.

மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் நீண்டதொரு உரையாடலை நிகழ்த்தியது ஒரு மரத்திற்க்கு அருகிலிருந்துதான்.

அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார். அல்குர்ஆன் 28:30

அல்லாஹ்வின் பேரொளி எழுந்த இடத்தில் இருந்த அந்த மரத்தின் தொடர்ச்சியாக ஒரு மரத்தை இப்பொழுதும் காணலாம். நெருப்பின் ஜுவாலைகள் வெளிப்பட்டதால் இந்த மரம் பர்னிங் புஸ்(Burning Bush) என்று பெயர் பெற்றது (படம் 8a)
Burning Bush

Tuesday 1 May 2018

சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-6]

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.”

“நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)”

“சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் பிரதேசத்தி)லிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறியது.”

“அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (தேவையான) அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளாள். மேலும், அவளுக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் உள்ளது.”

“அல்லாஹ்வை விட்டுவிட்டு சூரியனுக்கு சுஜூது செய்பவர்களாக அவளையும் அவளது கூட்டத்தாரையும் கண்டேன். ஷைத்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டி, அவர்களை (நேர்) வழியை விட்டும் தடுத்து விட்டான். எனவே, அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்.”

“வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துகின்ற, மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் பகிரங்கப்படுத்துபவற்றையும் அறிகின்ற அல்லாஹ்வுக்கு அவர்கள் சுஜூது செய்ய வேண்டாமா?”

“(உண்மையாக) வணங்கப்படத் தகுதி யானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை. (அவன்) மகத்தான அர்ஷின் இரட்சகனாவான்.”

“நீ உண்மை உரைத்தாயா? அல்லது நீ பொய்யர்களில் இருக்கிறாயா? என்பதை நாம் அவதானிப்போம்” என (சுலைமான்) கூறினார்.

“எனது இக்கடிதத்தை எடுத்துச் சென்று, அவர்களிடம் அதைப் போட்டு விட்டு பின்னர் அவர்களை விட்டும் ஒதுங்கி, அவர்கள் என்ன முடிவு செய்கின்றனர் என்பதைக் கவனித்துப்பார் (என்றும் கூறினார்)”

“பிரமுகர்களே! நிச்சயமாக என்னிடம் சங்கையான ஒரு கடிதம் போடப்பட்டுள்ளது” என்று (ஸபஃ இளவரசி) கூறினாள்.

“நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து வந்துள்ளது. அது, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமான அல்லாஹ் வின் பெயரால்  என ஆரம்பிக்கின்றது.)”

“நீங்கள் என்னிடம் ஆணவம் கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாகவே என்னிடம் வாருங்கள். (என்று எழுதப்பட்டுள்ளது.)”

“பிரமுகர்களே! எனது விஷயத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நீங்கள் என்னிடம் நேரடியாகக் கருத்துச் சொல்லாத வரையில் எந்தவொரு விஷயத் தையும் முடிவு செய்பவளாக நான் இல்லை” என்று கூறினாள்.”

“அ(தற்க)வர்கள், ‘நாம் பலசாலிகளாகவும் பலமாகப் போராடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். முடிவு உம்மிடமே உள்ளது. எதை (எமக்கு) ஏவுவது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று கூறினர்.

“நிச்சயமாக அரசர்கள் ஒரு கிராமத்தில் நுழைந்தால், அதைச் சீரழித்து விடுவார்கள். அக்கிராமத்தவர்களில் கண்ணிய மிக்கவர்களை இழிவானவர்களாக ஆக்கி விடுவர். இவ்வாறே இவர்களும் செய்வார்கள்” என்று கூறினாள்.”

“நிச்சயமாக நான் அவர்களுக்கு ஒரு அன்பளிப்பை அனுப்பி, தூதர்கள் என்ன முடிவுடன் திரும்புகின்றனர் என்பதைக் கவனிக்கப் போகின்றேன் (என்றும் கூறினாள்)”

“அவர்கள் சுலைமானிடம் வந்த போது, ‘எனக்குப் பொருளைக் கொடுத்து நீங்கள் உதவப் போகிறீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது, அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதை விட மிகச்சிறந்ததாகும். எனினும் உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்’ என்று கூறினார்.”

“அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள். அவர்களால் எதிர்கொள்ளமுடியாத படை களுடன் நிச்சயமாக நாம் அவர்களிடம் வந்து, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக இருக்கும் நிலையில் இழிவடைந்தவர்களாக, அதை விட்டும் அவர்களை நிச்சயமாக நாம் வெளியேற்றுவோம் (என்றும் கூறினார்)”

(27 : 20-37)



இந்த சம்பவம் இன்னும் நீண்டது. சுலைமான் நபியின் பறவைப் படையின் தளபதி ஹுத் ஹுத் பறவையை ஒரு நாள் அவர் காணவில்லை. அது சற்று தாமதித்து வந்தது. தனது தாமதத்திற்கான காரணத்தையும் அது கூறியது. சபா எனும் நாட்டைப் பற்றியும், அந்த மக்களை ஒரு பெண் ஆட்சி செய்வது பற்றியும் கூறியது. அவர்களுக்கு சகல வளங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அப்பெண்ணும் அந்நாட்டு மக்களும் சூரியனை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமல்லவா வணங்க வேண்டும் என்று அந்தப் பறவை கூறியது.

அந்தப் பறவையின் உணர்வை நாம் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே எச்சந்தர்ப்பத்திலும் வணங்கப்பட வேண்டியவன். சூரியனோ, சந்திரனோ, மண்ணோ அல்லது மரமோ வணக்கத்திற்குரியவை அல்ல. இவற்றையெல்லாம் படைத்த அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கத் தகுதியானவன். இதை அந்தப் பறவை அறிந்து வைத்திருந்தது. மக்கள் சூரியனை வணங்குவதை அந்தப் பறவை கூட விரும்பவில்லை என்பதை விளக்க வேண்டும்.

பின்னர் சுலைமான நபி அந்தப் பறவை மூலம் ஸபா இளவரசிக்குக் கடிதம் அனுப்பி அந்தக் கடிதத்தை வைத்து அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை அந்தப் பறவை ஒட்டுக் கேட்டு அதை சுலைமான் நபியிடம் கூறியது. அந்தப் பறவை வழங்கிய தகவலின் படி சுலைமான் நபி செயற்பட்டு ஈற்றில் அந்த இளவரசி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை இந்த அத்தியாயத்தின்(27) 38-44 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன.

அவற்றை விளக்குவதுடன் இஸ்லாத்தின் சத்திய கொள்கையில் உறுதியுடன் இருப்பதுடன் பிறருக்கும் இந்த சத்தியத்தை தெளிவுபடுத்துவதன் அவசியத்தை இந்த ஹுத் ஹுத் பறவையிடமிருந்து நாம் பாடமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிய வைக்கலாம்.

ரமளான் முதல் பிறை

ரமளான் முதல் பிறை

ரமளானின் முதல் பிறையை கணக்கிடு வதற்கு, அதற்கு முந்தைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் ஆரம்ப, கடைசி நாட்களை கணக்கிடுவதிலும், ரமளானை அடுத்த ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் அக்கரை காட்டுவது அவசியமாகும்.
ஷஹ்பான் மாதத்தின் நாட்களை கணக்கி டும் முறை

‘ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கண க்கிட்டு வாருங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (திர்மிதி 682)

‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி 1909, திர்மிதி 624)

‘ரமளானுக்கு முன் நோன்பு நோற்காதீர்கர்" நபிமொழி. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அஹ்மத் நஸயீ, திர்மிதி 624)

ஷஃபான் மாதம் சந்திர ஆண்டின் 8 வது மாதமாகும். இது ரமளானுக்கு முந்திய மாதம்.

ரமளான் மாதம் சந்திர ஆண்டின் 9 வது மாதமாகும். நோன்பு வைப்பதற்காக இறைவன் தேர்வு செய்த மாதம்.

ஷவ்வால் மாதம் சந்திர ஆண்டின் 10 வது மாதமாகும். இது ரமளானுக்கு அடுத்த மாதம்.

ரமளான் மாதத்தின் முதல் பிறையை முடிவு செய்வதற்கு, ஷஃபான் மாதத்தின் பிறையை கணக்கிட்டு வர வேண்டும். அதாவது அம்மாதத்தின் முதல் பிறையையும் கடைசி பிறையையும் பார்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதல் ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

ரமளான் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பு வைக்க வேண்டும். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பை விட வேண்டும்.

ரமளான் மாதத்தின் முதல் பிறை மேக மூட்டத்தின் காரணமாக தென்பட வில்லையானால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்த வேண்டும். அடுத்த நாள் ரமளானின் முதல் நோன்பை வைக்க வேண்டும் என்பதை இரண்டாம் ஹதீஸிலிருந்தும், ஷஃபானின் இறுதி நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை மூன்றாவது ஹதீஸிருந்தும் விளங்க முடிகிறது. (ஒருவரின் வழமை யான நோன்பு அந்நாட்களில் அமைந்து அவர் நோன்பு நோற்றால் தவறில்லை என்பதை மற்றொரு நபிமொழி கூறுகிறது)

‘ரமளானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!" (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: புகாரி 1914, திர்மிதி 621)

  ரமளான்  மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை

ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்" என்பது நபிமொழி. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1907)

ரமளான் மாதத்தின் முதல் பிறை மேகமூட்டத்தால் தென்படவில்லையானால் எவ்வாறு ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமோ அதே போன்று ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை அதே காரணத்திற்காக தென்படவில்லை யானால் ரமளான் மாதத்தையும் முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும் என்பதையும் கவனத்தில் கொண்டு பிறையை பார்க்க முயற்சிக்க வேண்டும்.மற்றொரு ஹதீஸில் 30 நாட்கள் என்றும் வந்துள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் 29 நாட்கள் நோன்பு நோற்றது, முப்பது நாட்கள் நோற்றதை விட அதிகமாகும்" என்று இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அபூதாவூது 2315, திர்மிதி 625)

நோன்பு என்றால் முப்பது நாட்கள் தான் என்றும் அவ்வாறு முப்பது நாட்கள் அமைய வில்லையென்றால் மனவருத்தம் கொள்வதும் திருப்தி அடையாதிருப்பதும், சிலவேளை ரமளான் மாதத்தின் முதல் பிறையை பார்த்த தகவல்களை அறிந்து மக்களுக்குச் சொல்லும் ஆலிம் அல்லது   நகர ஹாஜியை திட்டுவதும் அறியாமை யால் நடைமுறையில் இருந்து வரும் நிகழ்வுகளாகும்.ஆனால் நபித்தோழர் இப்னு மஸ்வூது அவர்களின் கூற்று அப்படிப்பட்ட வர்களுக்கு நல்ல அறிவுரையாக அமைந்து ள்ளது. 30 நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்காக ரமளானுக்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தின் இறுதியில் நோன்பு வைப்பதற்கு தடை உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிறையைப் பார்ப்பதும் அதன்படி நோன்பு வைப்பதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் பொறுப்பும் கடமையுமாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக!
 நன்றி Abdhul Hakeem

மூஸா நபியின் வரலாறு

மூஸா நபி வரலாறு

எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன்.

இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான்.அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு   துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர். இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் நபி மூஸா(அலை) அவர்கள்.ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.

ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி

மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம்.  ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். (அல்குர்ஆன்:  28:3,4)

மூஸா நபியின் பிறப்பு

பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, நபி மூஸா(அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்த காலகட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.

நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவரைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த நபி மூஸா(அலை) அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள். அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது.இந்த வரலாற்றை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்..

தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன்  அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று இக்குழந்தையை பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும் அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர்.மூசாவே பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.
(அல்குர்ஆன் 20:38-40)

நபித்துவம் வழங்கப்படுதல்

மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன்.அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன் என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார். அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார்.
(அல்குர்ஆன் : 28:29-30)

இரு பெரும் அற்புதங்கள்

உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும்பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார்.மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக!  இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர் (என்று இறைவன் கூறினான்).என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன்.எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன் என்று அவர் கூறினார்.என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன் (என்றும் கூறினார்).(அல்குர்ஆன்: 28:31-34)

உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள் என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 28:35)

ஃபிர்அவ்னின் ஆணவம்

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். பெரும் பொய்யரான சூனியக்காரர் என்று அவர்கள் கூறினர் (அல்குர்ஆன்: 40 : 23-24)

ஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக்குரல் 

ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர் என்று மூஸா கூறினார். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்)கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே  என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக்கொண்டு வா! என்று அவன் கூறினான்.அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்? என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 7: 104-110)

போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள்

இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள் என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர். சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா? என்று அவர்கள் கேட்டனர். (அதற்கவன்) ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள் என்று கூறினான். மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று கேட்டனர். ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள் மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள்.பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.
(அல்குர்ஆன்:  7:111-119)

இஸ்லாத்தை ஏற்ற சூனியக்காரர்கள்

சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றும் கூறினர்.
(அல்குர்ஆன்:  7:120-122)

ஃபிர்அவ்னின் ஆணவப்போக்கு

நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்! என்று ஃபிர்அவ்ன் கூறினான்.உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன் (என்றும் கூறினான்).
(அல்குர்ஆன்: 7:123,124)

பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை என்று ஃபிர்அவ்ன் கூறினான். ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன் என்றான்.
(அல்குர்ஆன்: 28:38)

நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான். ( அல்குர்ஆன்: 79:24)

சூனியக்காரர்களின் ஈமானிய உறுதி

நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள் என்று அவர்கள் கூறினர்.எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ,எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக! என்றனர்.(அல்குர்ஆன்; 7:125, 126)

என் இறைவன் அல்லாஹ்வே என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர்உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான் என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது

நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கைக் கொண்ட ஒருவர் கூறினார். (அல்குர்ஆன்: 40:28)

கடல் பிளந்தது, கொடியவன் கொல்லப்பட்டான்

அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள்புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். (அல்குர்ஆன்:  28:5,6)

காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்.உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும்,அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
(அல்குர்ஆன்: 26:60-66)

காலம் கடந்த ஞானோதயம்

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம் என்று கூறினான்.இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். (அல்குர்ஆன்: 10:90,91)

அழியாத அத்தாட்சி

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை.உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.   (அல்குர்ஆன்:  10:92,93)

கொடுங்கோலன் பிர்அவ்னை வல்ல அல்லாஹ் அழித்த நாள் தான் ஆஷுரா எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும்.