தவ்ஹீத் என்பது ஒரு இயக்கத்திற்கு மாத்திரம் சொந்தமான பெயரா?
தவ்ஹீத் எனும் பெயரை கேட்டவுடனே அதிகமான மக்கள் இது ஒரு இயக்கத்தோடு தொடர்புடைய சொல், இது நமக்கு அவசியமானதல்ல, நாம் அந்த இயக்கத்தவர்கள் அல்லவே… என ஏதோ தவ்ஹீதின் பெயரால் உள்ள இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு மாத்திரம் உரித்தான ஒரு சொல்லாகவும் இவ்வியக்கங்களைச் சாராத முஸ்லிம்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற பானியில் நடந்து கொள்ளக் கூடிய ஒரு அவல நிலையை பரவலாக தெற்காசிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் காணக் கூடியதாக இருக்கின்றது.
19ஆம் நூற்றாண்டின ஆரம்பத்தில் உதயமான இஸ்லாமிய இயக்கங்கள் மத்ஹப் வெறியையும் தாண்டி மக்களை கூறு போட ஆரம்பித்த காலப்பகுதியில் இந்த தவ்ஹீதின் பெயரால் ஒரு இயக்கத்தை உருவாக்கி அதன் இஸ்தாபகத் தலைவராக யாரும் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. தமது சொந்த சரக்குகளை முஸ்லிம் சமுதாயத்தில் சந்தைப்படுத்தி இயக்கம் வளர்க்க முற்பட்ட அக்காலகட்டத்தில் இஸ்லாம் என்றால் அல்லாஹ்வின் வஹியும் நபியவர்களின் சீரிய வாழ்கை வழி முறையும் என்று பேச்சளவில் உச்சரித்துவிட்டு நபியவர்களின் சுன்னாவுக்கு மாற்றமாக மௌலானாக்களின் சுன்னாக்களை இஸ்லாமாக காண்பித்து தமது இயக்கங்களுக்கு நல்ல பெயரை சமுதாயத்தில் எடுத்துக் கொள்ள அள்ளும் பகலும் பாடுபட்டனர். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் வீரியத்துடன் எடுத்தியம்பிய நல்லோர்களின் கூட்டம் தவ்ஹீதை முதன்மைப்படுத்திய தமது பிரச்சாரத்தில் உலகின் நாலா பாகங்களிலும் பரந்து கிடந்த தவ்ஹீதுக்கு எதிரான ஷpர்கை அழித்தொழித்து அல்லாஹ் மாத்திரம் தான் வணங்கப்பட வேண்டும், எல்லா வணக்கங்களின் ஊடாகவும் அல்லாஹ்வின் ஏகத்துவம் உரிதிப்படுத்தப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்கள் மீது தவ்ஹீது வாதிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தூய இஸ்லாமிய கொள்கையைக் கொண்ட எந்த ஒரு அறிஞரும் தவ்ஹீத் இயக்கம் என்று ஒரு பெயரை தெரிவு செய்து தமது இயக்கத்திற்கு பெயர் வைத்த வரலாற்ரை காணமுடியாது.
இயக்கங்கள் என்று வந்துவிட்டால் அங்கு இஸ்லாத்தின் வளர்சியை விட இயக்கத்தின் வளர்சியே முதன்மைப் படுத்தபடுவதை பரவலாக காணமுடிகின்றது. இயக்க ரீதியாக வளர ஆரம்பிக்கும் போது அங்கு ஏனைய இயக்கங்களோடு போட்டி போட்டுக் கொண்டு அங்கத்துவம், சந்தா, அமீர், பொதுச் செயளாலர், பொதுக் குழு என இயக்கத்தின் பண்புகள் கிளைவிட்டு வளர ஆரம்பிக்கும். இஸ்லாத்தின் தூய கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வது என்பதை விட தமது இயக்கத்தின் கொள்கைகள், கட்டுப்பாடுகளை மக்கள் ஏற்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பர். வெளிப்படையில் அரசியல் கட்சிகளை ஒத்த இயக்கங்கள் தமது இயக்கத்திற்குல் இருப்பவர்கள் கூட இயக்கம் சார்ந்த ஒரு செயற்பாட்டை அல்லது இயக்கத்தின் அமீரின் கொள்கை சார்ந்த ஒரு பிழையை அல்லது கருத்தை விமர்சிக்க முடியாத ஒரு நிர்பந்தம் ஏற்படுவதை காணலாம். மீறியும் விமர்சித்தால் உடனே பொது குழுவை கூட்டி குறித்த அங்கத்தவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதோ அல்லது அவரை ஒதுக்கி வைக்கக் கூடிய ஒரு கேவலமான நிலையை இஸ்லாமிய இயக்கங்களில் காணமுடிகின்றது. இதனால் கட்சித் தாவலை ஒத்த இயக்க தாவல்களும் அல்லது இயக்கத்தின் செயற்பாடுகளில் இருந்த ஒதுங்கிக் கொள்ளுவதையும் ஆங்காங்கே காணமுடிகின்றது.
இஸ்லாத்தின் பெயருக்கு குந்தகம் ஏற்பட்டாலும் பரவாயில்லை இயக்கத்தின் பெயருக்கு குந்தகமோ விமர்சனமோ ஏற்பட்டு விடக் கூடாது என நினைக்கும் இப்படிப்பட்ட இயக்க வெறியர்கள் மூலம் இஸ்லாத்திற்கு சேவை நடை பெரும் என்று எல்லளவும் எதிர்பார்க்க முடியாது. மீறியும் ஏதாவது சேவைகள் நடந்தாலும் அதனை அதிகபட்சமாக விளம்பரம் பன்னி அதனூடாக இயக்கத்தை போசிக்க நினைக்கின்றனர். சிலர் விளம்பரம் இல்லாத இயக்கம் என்று சொல்லிச் சொல்லியே அதனை சமூக வலைத்தளங்களில் பெரும் விளம்பரமாக்கியுள்ளனர். எனவே தான் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவை அதன் தூய வடிவிலே எடுத்துச் சொல்லும் அழைப்பாளர்களுக்கு ஒரு இயக்கத்தில் தொங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்காது. ஏகத்துவக் கொள்கையை சரியாக ஏற்று நல்வழி நடந்த முன்னோர்கள் காட்டிதந்த பிரகாரம் இஸ்லாத்தின் வரம்புகளை பேணி நடப்போர் எப்போதும் சத்தியத்தின் பக்கம் இருப்பதோடு அசத்தியத்திற்கெதிராக போராடுவதற்கு எந்நிலையிலும் அஞ்சமாட்டார்கள். தூய ஏகத்துவக் கொள்கையை கடைபிடிக்க நினைப்பவர்களுக்கு இயக்கத்தின் தேவைக்கு அப்பால் நல்வழி நடந்த உலமாக்களின் முன்மாதிரிகளைக் கொண்டு தமது கொள்கையில் உறுதியாக இருப்பதோடு மற்ற மக்களுக்கும் சத்தியக் கொள்கையை எடுத்துச் சொல்வார்கள்.
ஏகத்துவ கொள்கை தொடர்பான தெளிவு இல்லாத ஒரு மனிதர் தன்னை முஸ்லிம் என அறிமுகப்படுத்த முடியாது. காரணம் இக் கொள்கையே முஸ்லிம்களை ஏனைய மதத்தவர்களின் பல கடவுள் கொள்கையில் இருந்து வேறாக்குகின்றது. ஆக ஏகத்துவக் கொள்கையில் தெளிவு மற்றும்அதனை பற்றிப் பிடித்துக் கொள்ளும் உறுதி என்பன இன்றியமையாதவை எனலாம். முஸ்லிமாக தன்னை அறிமுகப்படுத்தக் கூடியவர்கள் அல்லாஹ்வின் ருபூபிய்யத்தை (அவனே படைப்பாளன், பரிபாளிப்பன், உயிரை தந்து கைப்பறுபவன், உணவளிப்பவன்) என்ற முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ள ருபூபிய்யத்தை ஏற்றுக் கொண்டுவிட்டால் மாத்திரம் ஏகத்துவத்தில் தெளிவு பெற்றுவிட்டார் அல்லது அவரது ஈமான சம்பூர்னமாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது. காரணம் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஓரே கடவுள் தான எம்மை படைத்தான் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
அல்லாஹ்வின் ருபூபிய்யத்தை ஏற்றுக் கொள்கின்றவன் அவனுக்கு மாத்திரம் தனது எல்லா வணக்க வழிபாடுகளை செலுத்துவதன் மூலம் அல்லாஹ்வின் உளுஹிய்யத்தை (வணங்கப்படத் தகுதியானவன் அவன் மாத்திரமே) ஏற்றுக் கொண்டு அதனை உறுதி செய்ய வேண்டும். மேலும் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை எவ்வித கூட்டல் குறைத்தலோ, மாற்றுதலோ, மறுத்தலோ அல்லது உவமானங்களோ இன்றி நம்புவதன் மூலம் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
வெறுமனே அல்லாஹ் படைப்பாளன் எனற் விடயத்தில் மாத்திரம் அவனது ஏகத்துவத்தை உறுதி செய்வது பூரண ஈமானாகாது. நபியவர்கள் அனுப்பட்ட குறைஷி சமூகம் கூட ருபூபிய்யத்தை ஏற்று இருந்தார்கள் என்பதற்கு அல்லாஹ் ஏகப்பட்ட சான்றுகளை அவனது திருமறையில் குறிப்பிடுகின்றான். எனவே தான் அல்லாஹ்வை அறிமுகப்படுத்துவது நபியவர்களின் நுபுவத்தின் நோக்கமாக இருக்கவில்லை. காரணம் அம்மக்கள் அல்லாஹ் தான் படைத்து பரிபாளிப்பவன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தனர். அப்துல்லாஹ், அப்துல் மனாப் என்ற பெயர்களை எல்லாம் தமது பிள்ளைகளுக்கு சூட்டினர். இப்படி அல்லாஹ்வை அறிந்து வைத்திருந்த சமுதாயத்திற்கு அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் மாத்திரமே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் என்பதை எடுத்து வைப்பதே நபியவர்களின் தஃவாவின் சாரம்சமாக இருந்தது. இதனை எத்திவைக்கவே மக்காவில் 13 வருடங்கள், மதீனாவில் 10 வருடங்கள் என தமது வாழ்கையை தியாகம் செய்தார்கள். ஏகத்துவத்தின் மூன்று பிரிவுகள் தொடர்பான விளக்கத்தை ஒரு முஸ்லிம் கட்டாயமாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.
#தவ்ஹீதின்_வகைகள்
#தவ்ஹீது_மூன்று_வகைப்படும். அவைகள்: –
தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)
தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)
1. #தவ்ஹீதுர்_ருபூபிய்யா: –
இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களiயும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவற்கு ‘தவ்ஹீதுர் ருபூபிய்யா’ என்று பெயர்.
அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.
படைப்பும் ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். [அல்-அஃராப்:54]
இந்த வகை தவ்ஹீதை பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஏற்றுக் கொள்கின்றனர். ஏன் குறைஷp காபிர்கள் கூட மகத் தெளிவாக இதனை ஏற்றுக் கொண்டனர்.
மேலும் (நபியே!) ‘நீர் இவர்களிடத்தில் வானங்களையும் பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?’ என்று கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்? [அல்-அன்கபூத்:61]
ஒரு சிலர் இயற்கை என்று மறுத்தாலும் அவர்கள் ஆள்மனது அதனை ஏற்றுக் கொள்வதாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும் அநியாயமாகவும் பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால்இ இந்த விஷமிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக. [சூரதுன் நம்ல்:14]
2. #தவ்ஹீதுல்_உலூஹிய்யா: –
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங்கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யா’ என்று பெயர்.
அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் என உறுதிகொள்வதாகும்.
3. #தவ்ஹீதுல்_அஸ்மா_வஸ்ஸிஃபாத்: –
அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள்
மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்’ என்று பெயர்.
வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே. உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான்இ அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன்இ பார்ப்பவன். [சூரதுஸ் ஸுரா:11]
அல்லாஹ்வின் பெயர்களை மற்றும் பண்புகளை மாற்றுதல், மறுத்தல், விபரித்தல், உவமைப்படுத்துதல் என்பவற்றுக்கு அப்பால் அல்குர்ஆன், ஹதீஸில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ்வாரே நம்பியாக வேண்டும். யூதர்கள் அல்லாஹ்வின் பண்புகளில் எப்படியெல்லாம் விளையாடினர் என்பதனை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
‘அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது’ என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான். உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது. ஆகவே அவர்களிடையே பகைமையும் வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான். (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். [அல்-மாயிதா:64]
#தவ்ஹீதின் முக்கியத்துவம்
மேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.
இந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ‘ஷிர்க்’ என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப்பானாவும்).
எனவே தான் அல்குர்ஆனின் முதலாவது அத்தியாயமாகிய சூரதுல் பாதிஹாவில் அல்லாஹ் இந்த மூன்று பிரிவு தொடர்பாகவும் பேசுகின்றான்.
சூரதுல் பாதிஹாவின் ஆரம்பத்தில் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்கின்றான். இங்கு தவ்ஹீதுர் ருபூபிய்யாவை சுட்டிக் காட்டுகின்றான். பின்னர் அளவற்ற அருளாலன் நிகரற்ற அன்புடையோன் என தனது பெயர்கள் மற்றும் பண்புகளை குறிப்பிடுகின்றான், இது தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிபாத் ஆகும். மேலும் தவ்ஹீதின் மிக முக்கிய பிரிவாகிய தவ்ஹீதுல் உலூஹிய்யாவை ‘உன்னையே வணங்குகின்றோம் உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்’ என கூறுவதன் மூலம் அண்ட சராசரங்களை படைத்து பரிபாளிக்கும் அந்த ரஹ்மான் அனவே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் என்பதனை நாம் சூரதுல் பாதிஹாவில் உறுதி மொழியாக அல்லாஹ்விடம் வழங்குகின்றோம்.
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நபியவர்களுக்கு முன் இறக்கிய வேதங்களை ஒன்றினைத்து அல்லாஹ் அல்குர்ஆனை அருளினான், அல்குர்ஆனின் கருத்துக்களை ஒன்றினைத்து சூரதுல் பாதிஹாவை அருளினான், சூரதுல் பாதிஹாவின் கருத்துக்களை ஒன்றினைத்து ‘உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்’ என்ற வசனத்தில் அருளினான்.’
ஒரு நாளைக்கு பல தடவைகள் அல்லாஹ்வுக்கு முன் தொழுகையில் நின்று கொடுக்கும் வாக்குறுதியை ஒரு சில மக்கள் சில வினாடிகளில் மறந்து விட்டு பள்ளியில் இருக்கும் அல்லது பள்ளிக்கு வெளியே இருக்கும் அவ்லியாக்களிடம்(?) சென்று தமது பிரச்சினைகளை முன் வைக்கின்றனர். அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டவேண்டும். இந்த மாபெரும் அநியாயத்தை தடுக்காமல் அப்படியே நின்றுவிடாது. சிலர் நினைக்கலாம் இப்போது படிப்படியாக ஷிர்க்கான செயற்பாடுகள் குறைந்துவிட்டன என்றும், காலப்போக்கில் முழுமையாக இல்லாது போய்விடும் எனலாம். ஆனால் ஷிர்க்கான செயற்பாடுகள் ஒரு போதும் கால ஒட்டத்தின் மாற்றத்தில் நின்றுவிடும் என நினைப்பது பெரும் மடமையாகும். காரணம் இன்று எமது சமுதாயத்தில் ஏகத்துவ எழுச்சியும் ஷிர்க் ஒலிப்பும் ஏற்பட்டுள்ளது என்றால் அதன் பின்புலத்தில் பலத்த தியாகங்களுடன் தமது பிரச்சாரத்தை வீரியமாக முன்வைத்த உலமாக்களை மறந்து விடமுடியாது. எல்லா இயக்கங்களும் தாம் முதன்மைப்படுத்தும் இபாதத்தை அல்லது கொள்கையை சமூகத்தில் முன்வைப்பதுடன் ஒதுங்கிக் கொள்ளும் அதே வேலை தவ்ஹீத் சிந்தனையையும், ஷிர்க் ஒலிப்பையும் பற்றி பேசுவதில் இருந்து பின்வாங்குகின்றனர். காரணம் மீறியும் போசினால் தமது இயக்க செயற்பாடுகளை தொந்தரவு இல்லாமல் செய்யவதில் பல பிரச்சினைகளை முன்னோக்க வேண்டி வரும் என்ற பயம் தான் அன்றி வேறில்லை. இப்படி மக்கள் மன்றத்தில் சத்தியத்தை எடுத்துச் சொல்ல தயங்குகின்றவர்கள் தாம் கஷ;டப்பட்டு செய்த அமல்களை அனைத்தையும் ஷிர்க் பாலடித்துவிடும் என்பதை மறந்து விடுகின்றனர்.
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும் தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோஇ அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால்இ அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்துவிடும். [சூரதுல் அன்ஆம்:88]
ஏன் நபியாக இருந்தால் கூட அவர் இணைவைத்தாலும் அவரின் நல்லரங்கள் அழிக்கப்படும் என அல்லாஹ் பின்வருமாரு கூறுகின்றான்.
அன்றியும் உமக்கும் உமக்கு முன் இருந்தவர்களுக்கும் வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால்இ ‘நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால்இ உம் நன்மைகள் (யாவும்) அழிந்துஇ நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). [சூரதுஸ் ஸுமர்:65]
எகத்துவ பிரச்சரம் மற்றும் ஷிர்க் ஒலிப்பு என்ற விடயத்தில் எல்லா முஸ்லிம்களும் தெளிவடைந்து இதனை இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் மன்றத்தில் முன்வைத்து எமது சமுதாயத்தில் இருந்து ஷிர்க்கை முழுமையாக துடைத் தெரிய முயற்சிப்போமாக! நன்றி Fb friend Abdhul Hakeem