Monday 26 November 2018

அகீகா (குழந்தை தர்மம் )

                               

                          “அகீகா” இது குழந்தை கிடைத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தருணம், ஆடறுத்து இறைச்சியை விநியோகித்தோ விருந்து சமைத்துக் கொடுத்தோ கொண்டாட இஸ்லாம் காட்டிய சிறந்த வணக்கம்.

இதை எப்படி கொடுக்க வேண்டும்?
யாருக்கு கொடுக்க வேண்டும்?
எப்போது கொடுக்க வேண்டும்?
எதை கொடுக்க வேண்டும்?
என்பன போன்ற சந்தேங்கள் பலருக்கு உண்டு அதை எனது இப்பதிவு தீர்த்து வைக்கும் என நம்புகின்றேன்.

ஒருவருக்கு ஆண் குழந்தை கிடைத்துவிட்டால் அதற்காக இரண்டு ஆடுகளும் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஒரு ஆட்டையும் அறுத்தும் விருந்தாகவோ அல்லது இறைச்சியாகவோ கொடுப்பதே அகீகாவாகும்.

இதை தங்களது சொந்தங்கள்/ அயலவர்கள்/ நண்பர்கள் / ஏழை எளியோர் என்று நாம் விரும்பும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். கொடுப்பவர்களும் உண்ணலாம் அதில் தடை இல்லை.

ஆட்டுக் கடாய்தான்  கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெட்டை ஆடும் கொடுக்கலாம். ஆனால் குட்டி இருந்து பால் கொடுக்கும் நிலையில் உள்ள பெட்டை ஆட்டை தவிர்த்தல் வேண்டும்.

அவ்வாறே எந்த வயதுடைய ஆட்டை கொடுக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. பொதுவாக சமைத்துண்ண நாம் எவ்வாறான, எந்த வயதுடைய ஆட்டை விரும்புவோமோ அதை அளவு கோலாக கொண்டால் போதுமானது.

எங்களது குடும்பம் பெரிதாக இருக்கிறது ஆடு கொடுத்து போதாது பகரமாக மாடு கொடுக்க முடியாதா? என்ற கேள்வியும் சிலருக்கு உண்டு.

நிச்சயமாக ஆடுதான் கொடுக்க வேண்டும். ஆடு என்பது அனைத்து சூழலிலும் பிரதேசங்களிலும் வாழக்கூடிய, கிடைக்கக் கூடிய ஒரு பிராணி என்பதாலோ என்னவோ இஸ்லாம் அகீகா விடயத்தில் ஆட்டை மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இது குழந்தை பிறந்து ஏழாம் நாளே கொடுக்க வேண்டும்.  மாறாக ஏழு நாட்களுக்குள் என்றோ அல்லது ஏழு நாட்கள் முடிந்த பின்னர் என்றோ தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப் பட்டுள்ளது.குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.
அறிவிப்பவர் : சமுரா (ரலி)
நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்

இதை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை வசதி இல்லாதவர்கள் கடன் பட்டு கஸ்ட்டப்பட்டு கொடுப்பது அவசியமில்லை.

இறைவா எனக்கு நீ வசதியைத் தந்திருந்தால் அகீகா கொடுத்து இருப்பேன் என்று உளமாற நினைக்கும் போது அந்த எண்ணத்துக்காக அகீகா கொடுத்த கூலியைக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் கருணையாளன் என்பதை மனதில் கொள்ளவேண்டும்        நன்றி; ஹாறூன் ஸஹ்வி       ********************************


بسم الله الرحمن الرحيم
ஒரு குழந்தை பிறந்து ஏழாவது நாளில் கொடுக்கப்பட வேண்டிய ஒரு விடயமே அகீகாவாகும். இந்த அகீகா குறித்து பலர் அதிகமான விடயங்களை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அகீகாவுடைய விடயத்தில் அதிகமானவர்களுக்கு சந்தேகம் எழக்கூடியது பின்வரும் மூன்று விடயங்களிலேயாகும்.
1.அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
2.ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா  கொடுக்கப்பட வேண்டுமா?
3.ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக்கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
ஆகவே, இம்மூன்று வினாக்களுக்குமான தெளிவை இங்கு நாம் உங்களுக்கு சுருக்கமாகக் கூறுகின்றேன்.
முதல் வினா:
அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
விடை:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நுபுவ்வத்திற்குப் பின் தனக்காக அகீகா கொடுத்ததாக ஒரு ஹதீஸ் முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் இந்த ஹதீஸில் அப்துல்லாஹ் இப்னு முஹர்ரர் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பொறுத்தவரையில் ஹதீஸ் கலை அறிஞர்களால் விடப்பட்டவர் என்ற தரத்தைப் பெற்றவராவார். ஆகவே, இவர் பலவீனமானவர் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
அத்தபரானீ அல்அவ்ஸத் என்ற நூலிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னுல் முஸன்னா என்பவர் இடம் பெறுகிறார். இவரும் பலவீனமானவர் என்ற காரணத்தால் இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.
இமாம்களான அதாஃ, ஹஸன், இப்னு ஸீரீன் ஆகியவர்கள் பெரிய வயதில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள்.
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அகீகா கொடுக்க முடியாது என்ற கருத்தைக் கூறியுள்ளார்கள். ஏனென்றால் அகீகா என்பது ஒரு தந்தை தனது மகனுக்கு நிறைவேற்ற வேண்டியதாகும் என்ற காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகமான ஹனபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் இக்கருத்தை முன்வைத்துள்ளார்கள். மேலும், இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் யார் இவ்வாறு அகீகா கொடுக்கிறாரோ அதனை நான் வெறுக்கமாட்டேன் என்றும் மேலும், மற்றோர் அறிவிப்பில் யார் இவ்வாறு செய்கிறாரோ அது சிறந்ததாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் இவ்வாறு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல. ஏனென்றால் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என அவருடைய நூலான பத்ஹுல் அல்லாமில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்க: அல்முங்னீ 13:397, அத்துஹ்பா பக்கம்: 87, 88, அல்மஜ்மூஃ 8:431
இரண்டாவது வினா:
ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டுமா?
விடை:
ஹன்பலீ மற்றும் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் அகீகா கொடுக்க வேண்டும் எனக்கூறுகின்றார்கள். ஏனென்றால் ஒரு குழந்தை பிறப்பதன் மூலமே அகீகா நிறைவேற்றப்படுகின்றது என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகா குறித்து வரக்கூடிய பொதுவான ஹதீஸ்களை இவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்.
இமாம் மாலிக் மற்றும் ஹஸன் ஆகியோர் மரணித்த குழந்தைக்கு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல எனக்கூறுகின்றனர். அக்குழந்தைக்கு ஏழாவது நாளில் அதை அறுக்கப்பட வேண்டும் என்ற திர்மிதியில் வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸை முன்வைத்து இவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு ஏழாவது நாள் உயிர் வாழக்கிடைப்பதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
சரியான கருத்து ஏழாவது நாளுக்கு முன் மரணித்தவர்களுக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இக்கருத்தை அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் மற்றும் இப்னு உஸைமீன் ரஹிமஹுமல்லாஹ் அவர்கள் சரிகண்டுள்ளார்கள்.
மூன்றாவது வினா:
ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக் கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
விடை:
பெரும்பாலான அறிஞர்கள் ஆடு அல்லாத கால்நடைகள் அகீகாவுக்குச் செல்லுபடியாகும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால் முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் சரியான அறிவிப்பு வரிசையின்படி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் ஒட்டகத்தை அகீகாவுக்காக அறுத்ததாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
இக்கருத்து ஹன்பலீ, ஷாபிஈ மற்றும் மாலிகீ ஆகிய மத்ஹப்களைச் சார்ந்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டகம் மற்றும் மாடு ஆகியன ஆட்டைவிட அதிக கூலியைப் பெற்றுத்தரும் என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற பொதுவான ஹதீஸை முன்வைத்து அவர்கள் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் ஆட்டை மாத்திரமே அகீகாவாகக் கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள்.
ஹப்ஸா பின்த் அப்திர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவருக்கு நீங்கள் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுக்க வேண்டாமா? எனக்கூறப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், என்னுடைய மாமியான ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆண் குழந்தைக்கு இரு ஆடுகளும் மற்றும் பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் என்றே கூறக்கூடியவர்களாக இருந்தர்கள் எனக்கூறினார்கள்.                                        - முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் 4:328
இந்த ஆதாரத்தை முன்வைத்து இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அவருடைய கருத்தை முன்வைக்கின்றார்கள். மேலும், அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற ஹதீஸை நாம் ஆதாரமாக் கொண்டால் பறவைகளையும் அகீகாக் கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு மறுப்பளிக்கின்றார்.
மேலும், அனைத்து ஹதீஸ்களிலும் ஆட்டையே குறிப்பிடப்பட்டுள்ளது. அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் கூறும்போது: ஹதீஸில் வந்த செய்தியோடு சுருக்கிக்கொள்வதே மிக ஏற்றமாகும். யார் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுத்தால் அது செல்லுபடியாகும் என நான் ஆசை வைக்கின்றேன் என்கிறார்கள்.