Tuesday 2 January 2018

இஸ்லாம் தந்த பெண்ணின் பெருமை

                                       ,                   
 
இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு இனிய மார்க்கம். மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி தந்த இஸ்லாம் ஆண், பெண் இருபாலாருக்கும் கடமைகளை வகுத்து கொடுத்துள்ளது. உலகில் எந்த மதத்திலும் இல்லாத பெண் உரிமைகளும், சிறப்புகளும் இஸ்லாத்தில் உண்டு.


பெண் குழந்தை என்றாலே முகம் சுழித்து மண் தோண்டி புதைக்கும் சமுதாயத்தில் பெண் குழந்தை பரக்கத்தானது அதாவது வாழ்க்கையில் விஸ்தீரணத்தை தரக்கூடியது என்று கண்மணி நாயகத்தின் அருள் வாக்கை கொண்டு பெண்ணின் உயிரும் உள்ளமையும் பாதுகாக்கப்பட்டது.

பிறகு அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்ற தடைகளுக்கு விடையாக ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி கற்பது கடமையே என்ற கண்மணி நாயகத்தின் திருவாக்கை கொண்டு பெண்ணின் கல்வியறிவு பாதுகாக்கப்பட்டது.

அடுத்து திருமணத்தில் பெண்ணின் சம்மதம் எதற்கு? யாரை பெரியவர்கள் கட்ட சொல்கிறார்களோ அதற்கு சரி என்று தலை அசைக்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றி திருமணத்துக்கு முன் பெண்ணின் சம்மதம் பெற வேண்டும் என்ற கண்மணி நாயகத்தின் அருள் வாக்கை கொண்டு பெண்ணின் சுயவிருப்பம் பாதுகாக்கப்பட்டது.
பெண் என்பவள் குடும்பத்துக்கு ஒரு செலவு. நாளை திருமணம் என்ற பெயரில் புருஷன் வீட்டுக்கு குடும்ப சொத்தை எடுத்து சென்று விடக்கூடாது என்று பெண்ணுக்கு குடும்ப சொத்தில் பங்கு கொடுக்காத காலத்தில் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்ற கண்மணி நாயகத்தின் அருள் வாக்கை கொண்டு பெண்ணின் சொத்துரிமை பாதுகாக்கப்பட்டது. 

மனைவியாக வருபவளை ஒரு தண்டமாக நினைத்து அவளை மணமுடிக்க அவளின் பெற்றோரிடம் வரதட்சணை வாங்கிய சமுதாயத்தில் அதற்கு மாற்றமாக ஆண்தான் பெண் என்னும் செல்வத்தை பெற பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்ற கண்மணி நாயகத்தின் புனித வாக்கை கொண்டு பெண்ணின் சுயகௌரவம் பாதுகாக்கப்பட்டது

பெண் என்பவள் வெறும் போக பொருளாக பார்க்கப்பட்ட சமுதாயத்தில் பெண் ஹிஜாப் அணியவேண்டும் என்னும் கண்மணி நாயகத்தின் புனித வாக்கை கொண்டு பெண்ணின் ஒழுக்கம் பாதுகாக்கப்பட்டது.

எனவே இஸ்லாத்தில் பெண்ணுக்கு உரிமை இல்லை, உரிமை இல்லை என்று கூக்குரல் இடுபவர்களே! கொஞ்சம் நிதானமாக முழுமையாக இஸ்லாத்தை படித்துவிட்டு சொல்லுங்கள், இஸ்லாத்தில் கிடைக்காத உரிமை வேறு எங்கு உண்டு என்று?

அதேபோல், முஸ்லிம் பெண்களாகிய நாம் இஸ்லாம் நமக்கு தந்த உரிமைகளை பேணி, தூய மார்க்கத்தை கற்று, அதன் வழியில் நடந்து நம் குடும்பத்தார்களையும் பாதுகாப்போமாக!