Tuesday, 1 May 2018

மூஸா நபியின் வரலாறு

மூஸா நபி வரலாறு

எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன்.

இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான்.அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு   துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர். இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் நபி மூஸா(அலை) அவர்கள்.ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.

ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி

மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம்.  ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். (அல்குர்ஆன்:  28:3,4)

மூஸா நபியின் பிறப்பு

பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, நபி மூஸா(அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்த காலகட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.

நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவரைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த நபி மூஸா(அலை) அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள். அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது.இந்த வரலாற்றை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்..

தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன்  அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று இக்குழந்தையை பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும் அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர்.மூசாவே பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.
(அல்குர்ஆன் 20:38-40)

நபித்துவம் வழங்கப்படுதல்

மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன்.அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன் என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார். அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார்.
(அல்குர்ஆன் : 28:29-30)

இரு பெரும் அற்புதங்கள்

உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும்பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார்.மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக!  இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர் (என்று இறைவன் கூறினான்).என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன்.எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன் என்று அவர் கூறினார்.என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன் (என்றும் கூறினார்).(அல்குர்ஆன்: 28:31-34)

உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள் என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 28:35)

ஃபிர்அவ்னின் ஆணவம்

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். பெரும் பொய்யரான சூனியக்காரர் என்று அவர்கள் கூறினர் (அல்குர்ஆன்: 40 : 23-24)

ஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக்குரல் 

ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர் என்று மூஸா கூறினார். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்)கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே  என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக்கொண்டு வா! என்று அவன் கூறினான்.அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்? என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 7: 104-110)

போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள்

இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள் என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர். சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா? என்று அவர்கள் கேட்டனர். (அதற்கவன்) ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள் என்று கூறினான். மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று கேட்டனர். ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள் மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள்.பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.
(அல்குர்ஆன்:  7:111-119)

இஸ்லாத்தை ஏற்ற சூனியக்காரர்கள்

சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றும் கூறினர்.
(அல்குர்ஆன்:  7:120-122)

ஃபிர்அவ்னின் ஆணவப்போக்கு

நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்! என்று ஃபிர்அவ்ன் கூறினான்.உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன் (என்றும் கூறினான்).
(அல்குர்ஆன்: 7:123,124)

பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை என்று ஃபிர்அவ்ன் கூறினான். ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன் என்றான்.
(அல்குர்ஆன்: 28:38)

நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான். ( அல்குர்ஆன்: 79:24)

சூனியக்காரர்களின் ஈமானிய உறுதி

நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள் என்று அவர்கள் கூறினர்.எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ,எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக! என்றனர்.(அல்குர்ஆன்; 7:125, 126)

என் இறைவன் அல்லாஹ்வே என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர்உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான் என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது

நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கைக் கொண்ட ஒருவர் கூறினார். (அல்குர்ஆன்: 40:28)

கடல் பிளந்தது, கொடியவன் கொல்லப்பட்டான்

அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள்புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். (அல்குர்ஆன்:  28:5,6)

காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்.உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும்,அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
(அல்குர்ஆன்: 26:60-66)

காலம் கடந்த ஞானோதயம்

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம் என்று கூறினான்.இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். (அல்குர்ஆன்: 10:90,91)

அழியாத அத்தாட்சி

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை.உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.   (அல்குர்ஆன்:  10:92,93)

கொடுங்கோலன் பிர்அவ்னை வல்ல அல்லாஹ் அழித்த நாள் தான் ஆஷுரா எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

Saturday, 14 April 2018

*மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்*

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும்.

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 17:1

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் இறைவனுக்கு இது சாத்தியமானதே!

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை இறைவன் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தான் என்பதைப் பின்வரும் வசனத்தில் இருந்து அறியலாம்.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.

திருக்குர்ஆன் 17:60

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் கூறிய பொழுது சிலர் நம்ப மறுத்து மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று அல்லாஹ்  குறிப்பிடுகிறான்.

மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.

அல்லாஹ் நாடினால் மிகச் சிறிய அளவு நேரத்தில் விண்ணகம் அழைத்துச் செல்ல முடியும்; அவனது ஆற்றல் அளப்பரியது என்று நம்புவதுதான் மிஃராஜ் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதை நம்ப மறுப்பவர் அல்லாஹ்வின் ஆற்றலில் ஐயம் கொண்டவராவார். அவரது ஈமான் சந்தேகத்துக்கு உரியதாகும்.

*மிஃராஜ் நடந்தது எப்போது?*

மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எந்தக் குறிப்பும் இல்லை.

எந்த ஆண்டில், எந்த மாதத்தில், எந்தத் தேதியில் நடந்தது என்பதில் அறிஞர்கள் சொந்தக் கருத்தாக பலவாறாக கூறியுள்ளனர். இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.

ரஜப் மாதம் 27 ல் தான் மிஃராஜ் நடந்தது என்று பரவலாக மக்கள் நம்புவது ஆதாரமற்றதாகும்.

அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஒரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை.

*மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்*

ரஜப் 27 ஆம் இரவு தான் மிஃராஜ் நடைபெற்றது என்று நம்பி அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல பித்அத்தான காரியங்களைச் செய்கின்றனர்.

மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர் என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.

இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்லிகள், மவ்லித் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிக்கின்றனர்.

6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும்; அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3 ஆம் கலிமாவை 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.

3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.

இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃப, லிஈலாஃபி குறைஷ் ஆகிய அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி எழுதி வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.

இவை நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?

யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 2697


நமது கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 3243

தாமாக புதிய வணக்கங்களை உருவாக்கிக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கும் கேள்வியைக் காணுங்கள்!

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?

திருக்குர்ஆன் 49:16

அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதாகக் கருதப்படும்.

அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்குத்தான் எந்த வணக்கத்தையும் நாம் செய்ய வேண்டும். ஆனால் நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் அன்பை யாரும் பெற முடியாது என்று அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:31,32

இன்னும் சிலர் இந்த இரவில் பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 7:205

உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

திருக்குர்ஆன் 7:55

அல்லாஹ்வின் இந்த அறிவுரையை எதிர்த்து பணிவில்லாமல் எழுந்து, குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : நஸாயீ

எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்சிப்போமாக!

தோல்களில்தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன

                                                                  தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன

இவ்வசனத்தில் (4:56) நரகவாசிகளின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம் என்று கூறப்படுகிறது.

வேதனைகளை உணரும் நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் தீக்காயத்தை மூளை உணராது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறு தீக்காயம் ஏற்படும்போது மனிதன் துடிக்கிறான். ஆனால் பெருமளவு தோல் கருகிப் போனவன் துடிதுடிக்காமல் படுத்துக் கிடக்கிறான். அவன் சாதாரண தீக்காயம் பட்டவனை விட பன்மடங்கு துடிக்க வேண்டும். ஆனால் அவன் எந்த வேதனையும் இல்லாதவனைப் போல் படுத்துக் கிடப்பதை நாம் பார்க்கிறோம்.

காரணம் தீக்காயத்தின் வேதனையை மனிதன் உணர்வதற்கான தோல் கரிந்து விட்டதால் அவனுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது எப்படித் தெரியும்?

திருக்குர்ஆன் "அவர்களின் தோல் கருகும்போது அதை மாற்றுவோம்'' என்று கூறாமல் "வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்'' என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுகிறதென்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான் இதைக் கூறியிருக்க முடியும்.

திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.

Saturday, 24 March 2018

#உஸைர்_நபியும்… #உயிர்_பெற்ற_கழுதையும்…

“ச்சீ-கழுதை” யாரையாவது பிடிக்காவிட்டால் இப்படித்தான் திட்டுவோம். கழுதை அதன் முட்டாள் தனத்தாலும் அதன் அசிங்கமான சப்தத்தினாலும் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது. ஆனால், நான் அற்புதமான ஒரு கழுதை பற்றி குர்ஆன் கூறும் கதையை உங்களுக்குக் கூறப் போகின்றேன்.

உஸைர் என்றொரு நபி இருந்தார். அவர் ஒரு ஊருக்கு கழுதையில் பயணம் சென்றார். அந்த ஊர் சிதைந்து சின்னா பின்னமாகி இருந்தது. முற்று முழுதாக அந்த ஊர் அழிந்து போயிருந்தது. அந்த ஊரின் அழிவைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். அழிந்து போன இந்த ஊரை அல்லாஹ் எப்படித்தான் உயிர்ப்பிப்பானோ என்று எண்ணினார். அல்லாஹ் அவருக்கு தனது ஆற்றலை நேரடியாகக் காட்ட விரும்பினான்.

அல்லாஹ் அவரை நூறு வருடங்கள் மரணிக்கச் செய்தான். பின்னர் அல்லாஹ் அவரை உயிர்ப்பித்தான். அவர் நூறு வருடங்கள் மரணித்த நிலையில் இருந்தது அவருக்குத் தெரியாது. தூங்கி விழிப்பது போல் அவர் உணர்ந்தார்.

அவர் ஒரு மரத்தடியில் உறங்கும் நிலையில்தான் மரணித்தார். அவரது கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவரது உணவும் பானமும் கூட அந்த மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.

நூறு வருடங்கள் மரணித்து உயிர் பெற்ற அவரிடம், “நீ எவ்வளவு காலம் இந்த இடத்தில் தங்கி இருந்தாய்?” என்று கேட்டான். அவர் நான் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சில பகுதிகள் கழித்திருப்பேன் என்றார். அதற்கு அல்லாஹ்,

“இல்லை, நீ நூறு வருடங்கள் தங்கி இருந்தாய்.” இதோ உன் உணவையும் பானத்தையும் பார்! அது இன்னும் கெட்டுப் போகவில்லை என்றான். அவர் கொண்டு வந்த உணவு நூறு வருடங்கள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருந்தது. இது அதிசயம்தானே!

இதோ உன் கழுதையைப் பார் என்றான். அவரது கழுதை இறந்து கிடந்தது. அதன் எலும்புகள்தான் எஞ்சியிருந்தது. இதோ பார் அந்த எலும்பில் எப்படி நாம் சதையை சேர்க்கின்றோம் என்றான். இறந்து அழிந்து எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்த கழுதையின் எலும்புகள் இணைந்தன. அதற்கு சதையும் தோலும் உருவானது. அது உயிர் பெற்றது. இறந்த கழுதைக்கு அல்லாஹ் உயிர் கொடுப்பதைக் கண்ணால் கண்ட அவர் அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவன் என்று எனக்குத் தெரியும் என்று தனது ஈமானின் உறுதியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த சம்பவம் திருக்குர்ஆனில் சூறா அல் பகரா 02 ஆம் அத்தியாயம் 259 ஆம் வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

أَوْ كَالَّذِي مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْيِي هَـٰذِهِ اللَّـهُ بَعْدَ مَوْتِهَا ۖ فَأَمَاتَهُ اللَّـهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُ ۖ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۖ قَالَ بَل لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۖ وَانظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ آيَةً لِّلنَّاسِ ۖ وَانظُرْ إِلَى الْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُ قَالَ أَعْلَمُ أَنَّ اللَّـهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் – (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன. (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார். ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை, ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது, அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார். (அல் பகரா: 259)

நாமும் மரணித்த பின் அல்லாஹ் எங்களை உயிர் கொடுத்து எழுப்புவான்.


  • அதன் பின் எமது நல்லறங்களுக்குப் பரிசும் தவறுகளுக்குத் தண்டனையும் வழங்குவான். இதை மனதில் கொண்டு நாம் இந்த உலகில் வாழ வேண்டும். நம்மை படைத்த அந்த அல்லாஹ்வுக்கு நாம் மரணித்த பின்னர் மீண்டும் நம்மை உயிர் கொடுத்து எழுப்புவது இலகுவானதுதானே!

Wednesday, 21 March 2018

உலகம் அழியும் #காலம் நெருங்கும்போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் #யஃஜூஜ் #மஃஜூஜ் ஆவர்.
உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக #நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும்.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தினர் நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அவர்களால் வரவும் முடியாது.
அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது.
#யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரையிலான வசனங்கள் கூறுகின்றன.
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள்.
 உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள் என்று 21:96 வசனம் கூறுகிறது.

    இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் #Flores என்ற ஒரு தீவு உள்ளது.
இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர் நெல்லிஸ் குயா தனது மூதாதையர்கள் கூறியதாக சொல்லும் விசித்திர கதை.

    இந்த கிரமத்திற்கு அப்பால் உள்ள மலைகளுக்கு பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கண்கள் சிறியதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியவர்களாகவும், ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள் என்றும், இவர்கள் அடிக்கடி தங்கள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்கள், உணவுப் பொருள், பழங்களை திருடிக்கொண்டு ஓடி விடுவார்கள். பெரும் பசிக்காரர்கள். எதையும் தின்பவர்கள். இக்குள்ளர்களை
(Ebu gogo) எபு கோகோ என்று அழைப்பதாகவும் கூறினார். இதற்குப் பொருள் எதையும் தின்னும் தின்னிப்பண்டாரம்.

    இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் சில ஆண்டு முன்பு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகை முடிவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு #எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.

    அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பாகும்.

    இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறினார்.

    முதியவர் நெல்லிஸ் குயாவின் கிராமத்தினர், இன்னும் இந்த விசித்திர குள்ளர்கள் மலைகளுக்கு அப்பால் அல்லது பாதாள நகரத்தில் வசிப்பதாக நம்புகின்றனர். இக்கிராமத்தினர் அனைவரும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். விசித்திர குள்ளர்களை Ebu Gogo என்று அழைப்பது  யஃஜுஜ், மஃஜுஜின் ஆங்கிலப் பெயரான Yahog, Magog வுக்கு நெருக்கமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சித்திர குள்ளர்கள் மனித இனத்தின் ஒரு பிரிவினர். இவர்களுக்கு Homo floresiensis என்ற பெயர் இடப்பட்டுள்ளது.

    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) ஏவாள் (ஹவ்வா )அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்: தப்ரானீ

இவர்கள் நூஹ்(அலை) நோவா அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.

    ‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர்.

ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573

     “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.

 அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ

    கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் முக அளவும் கிராம மக்களின் வர்ணிக்கும் ‘எபு கோகோ குள்ளர்களின் அமைப்பும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர்னைன் அவர்கள் பயணம் செய்த கீழ்திசை இரு மலைகள் சூழ்ந்த அமைப்பு, விளங்கிக்கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள், மேலும் எரிமலை குழம்பு நிறைந்த ஃபுளோரஸ் தீவில் இரும்புப் பாலங்களும் நெருப்பாக்குவதற்கு தேவையான மரங்கள் மற்றும் நிலக்கரியும் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான், அவர்களில் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக் கண்டு அதன் நீரைப் பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும்போது (தண்னீர் இராது என்பதால்) அந்த இடத்தில் ஒரு சமயத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(அரழி) நூல்: முஸ்லிம்

    இக்கூட்டத்தினர் வெளியாகும்போது மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்றளவுக்கு அனைத்தையும் தின்று தீர்த்து அநியாயம் செய்வார்கள். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒரு மாட்டின் தலை இன்று என்ன பெறுமதியோ, அது அன்று நூறு தங்க காசுகளைவிட அதிக வெகுமதியாக இருக்கும்”

    துல்கர்னைன் எழுப்பிய தடுப்புச் சுவர் இந்தோனேஷிய தீவுகளில் எதாவது ஒன்றில்  இருக்கலாம். ஃபுளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடும் எலும்புக்கூடும் தரும் ஆய்வுச் செய்திகள், குள்ள மனிதர்கள் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள், கூர்மையான கற்களால் ஆன ஆயுதங்களை கொண்டு ராட்சத பல்லி, முயல் அளவில் உள்ள காட்டெலி அன்று வாழ்ந்த குள்ள யானை போன்ற மிருகங்களை வேட்டையாடி வீழ்த்தியுள்ளார்கள்.

மனிதன் கால்படாத ஏராளாமான காட்டு பிதேசங்கள் இன்றும் இந்தோனேஷிய தீவுகளில் உள்ளன. ஆகவே அறிவியல் சான்றுபடியும் கிராம மக்கள் வழிவழி கதைகள் மூலமும் குர்ஆன் ஹதீஸ் மூலம் அறியும்   யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் இந்தோனேஷிய தீவுகளில்   வாழ்ந்து வரலாம். எது எப்படியோ 3 அடி குள்ள மனிதர்கள் ஆதம்(அலை) சந்ததிகள் என்ற குர்ஆன், ஹதீஸ் முன்னறிவிப்பு இன்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 20 March 2018

மூன்று நாட்கள் பட்டினி இருந்த சமயத்தில் நடந்தது என்ன?


                                                                      ஒரு சமயம் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவ ர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள்வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள்.
குடும்பத்தின் பசி, பட்டினி பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புதுத்துணியொன்றை தனது அருமைக் கணவர் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து இத்துணியை விற்றுப் பணம் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.
மனைவி கொடுத்த துணியை கடைத் தெருவுக்கு கொண்டு போய் ஆறு திர்ஹம்  களுக்கு விற்றார்கள். ஆனால் அந்த ஆறு திர்ஹம்களையும் வாங்கி வரும் பொழுது சில ஏழைகள் ஹஜ்ரத் அலியிடம் ஏதாவது தாருங்கள் என்று கேட்ட போது அப்படியே தர்மம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு மனிதர் ஒரு ஒட்டகத்தை பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களைப் பார்த்தவுடன் அபுல் ஹஸன் அவர்களே! இந்த ஒட்டகத்தை வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்டார்கள்.
இந்த ஒட்டகத்தை வாங்க என்னிடம் பணம்இல்லையே’ என்று ஹஜ்ரத் அலி (ரலி) சொன்னபோது பரவாயில்லை. இதனை தவணை முறையில் உமக்கு விற்பனை செய்கிறேன். பணத்தைப் பிறகு தரலாம். அது பற்றி கவலை இல்லை என்றார்.
உடனே நூறு திர்ஹம்கள் விலை பேசி அந்த ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள். மற்றொரு அரபி அங்கு வந்து அபுல் ஹஸன் அவர்களே இந்த ஒட்டகத்தை விற்பனை செய்கின்றீர்களா? என்று வினவினார்.
ஆச்சரியப்பட்ட அலி (ரலி) அவர்கள் இதை நான் நூறு திர்ஹம்களுக்கு வாங்கினேன். நீர் எவ்வளவு தருவாய்? என்று கேட்டார்கள். அப்படியா, நான் இந்த ஒட்டகத்தை 160 திர்ஹம்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். சரியென சம்மதித்து ஒட்டகத்தை ஒப்படைத்து 160 திர்ஹம்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
சிறிது தூரம் சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது முதலில் ஒட்டகத்தை தவணை முறையில் கொடுத்தவர் அங்கு வந்தார். ‘அபுல் ஹஸன் அவர்களே! ஒட்டகத்தை விற்பனை செய்து வீட்டீரா? என்று வினவினார்.
ஆம் என அலி (ரலி) அவர்கள் கூறியதும் ‘அப்படியானால் வாக்குப்படி எனக்கு சேர வேண்டிய நூறு திர்ஹம்களைக் கொடுத்து விடுங்கள்’ என்று கேட்டார்.உடனே ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் நூறு திர்ஹம்களை கொடுத்து விட்டு மீதி 60 திர்ஹம்களை எடுத்துக் கொண்டு போய் தனது அன்பு மனைவி பாத்திமா (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள்.
ஆச்சரியப்பட்ட பாத்திமா (ரலி) அவர்கள் நான் கொடுத்த துணிக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைக்கும்? இவ்வளவு பணம் எப்படி உங்களுக்குக் கிடைத்தது? என்று வினவினார்கள்.
உங்கள் துணியை ஆறு திர்ஹம்களுக்குத் தான் அதை அல்லாஹ்வுக்காக வியாபாரம் செய்தேன். அவன் ஒன்றுக்குப் பத்து இலாபமாகப் பெருக்கி 60 திர்ஹம்களை நமக்குத் தந்தான். என்று கூறி நடந்த நிகழ்ச்சியை சொல்லிக் காட்டினார்கள். பாத்திமா (ரலி) அவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
உடனே அலி (ரலி) அவர்கள் அருமை பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த சம்பவங்களை எடுத்துச் சொன்னார்கள். இதைக் கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ‘அலியே உம்மிடம் ஒட்டகத்தை விற்றது யார் தெரியுமா? அவர்கள் ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) ஆவார்கள்.
உம்மிடமிருந்து ஒட்டகத்தை வாங்கியது யார் தெரியுமா? மீக்காயீல் (அலை) ஆவார்கள். இன்னும் கேட்டுக்கொள் அந்த ஒட்டகம்தான் கியாமத் நாளில் சொர்க்கத்தில் பாத்திமா (ரலி) அவர்களின் வாகனமாகும்’ எனக் கூறிவிட்டு அலியே! எவருக்கும் கொடுக்கப்படாத மூன்று சிறப்புகளை அல்லாஹ் உமக்கு வழங்கி உள்ளான்.
1. உம்முடைய மனைவி சுவனப் பெண்களின் தலைவி.
2. உம்முடைய இரண்டு மக்கள் ஹஸன், ஹுஸைன் (ரலி) சுவனத்து வாலிபர்களுக்கு தலைவர்கள்
3. உம்முடைய மாமனார் ரசூல் மார்களுக்கெல்லாம் தலைவர். ஆகையால் உமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பாக்கியங்களுக்கு அல்லாஹ்வுக்கு நன்றியுடையவராக நீர் இருந்து வருவீராக!மொழிந்தார்கள்.

திருக்குர்ஆன் ஓதும் போட்டியில் வெற்றியீட்டிய இந்து மத மாணவி

   
                                                              குர்ஆன் ஓதும் போட்டியில் வெற்றியீட்டிய இந்து மத மாணவி
---------------------------------------------------------------
ஆந்திர பிரதேசம் விஜய வாடாவில் ஒரு இஸ்லாமிய தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் கே.ஸ்வர்ண லஹரி. .
அந்த பள்ளியில் குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது. அதில் தானும் கலந்து கொள்வதாக ஆசிரியைகளிடம் சொன்னாள் ஸ்வர்ண லஹரி. மகிழ்ந்த ஆசிரியைகள் இந்த மாணவிக்கு குர்ஆனை ஓத பயிற்சி கொடுத்தனர்.
ஆச்சரியமாக 200 மாணவிகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் பலரையும் பின்னுக்கு தள்ளி விட்டு பரிசை தட்டிச் சென்றார் ஸ்வர்ண லஹரி. இவர் குர்ஆனை ஓதும் அழகைப் பார்த்து முஸ்லிம்களே ஆச்சரியப்பட்டனர்.
 .பரிசு வென்ற ஸ்வர்ண லஹரி கூறுகிறார் 'நான் கோவிலுக்கும் செல்கிறேன். குர்ஆனை தொடர்ந்து ஓதி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அதன் பொருள் உணர்ந்து படிக்க தொடங்கி விடுவேன். என்னை இந்த அளவு ஊக்கப்படுத்திய எனது தந்தைக்கும் எனது ஆசிரியைகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார்..
ஸ்வர்ண லஹரியின் தந்தை துர்கா பிரசாத் கூறுகிறார்:
'பலரும் எனது மகளை பாராட்டி மகிழும் போதுதான் எனது மகள் எவ்வளவு அழகிய பணியை செய்துள்ளாள் என்பது விளங்குகிறது. அவளது திறமையைக் கண்டு மொத்த ஆடிட்டோரியமும் நானும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனோம். .
இதற்கு முன்னால் நான் குர்ஆனைப் பார்த்ததில்லை. எனது மகள் எனக்கு குர்ஆனை அறிமுகப்படுத்தினாள். அவளது ஆர்வத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினேன். .
எனது நம்பிக்கையானது தனிப்பட்ட ஒன்று. உலக முடிவு நாளில் அனைத்து மதங்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்' என்கிறார். .
மகளும் தந்தையும் அனைத்து செல்வங்களும் பெற்று சிரமமின்றி நேர் வழியில் தங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ள நாமும் பிரார்த்திப்போம்.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்