Tuesday, 31 July 2012

சவூதி வரை வந்த சாதீயம், சாகடிப்போம் சாதி வெறியை

                                                                 
  FACEBOOK ல்  என் மனதை காப்டுத்திய பதிவு 

தமிழ்நாட்டில் அதுவும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிவெறியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி நான் ஏற்கனவே பதிவிட்டிருந்த போது நிறைய நண்பர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் அப்படியா? உண்மையா? இன்னுமா சாதிவெறி இருக்கிறதா? என்று கேட்டார்கள். இவ்வளவுக்கும் அந்த சாதி வெறியால் பாதிக்கப்பட்டவன் என் நெருங்கிய நண்பன். 



சவூதி வரை வந்த சாதீயம்

நண்பர் பாலமுருகன் பரமக்குடி பக்கத்தில் இருக்கிற தலித் கிராமத்தைச் சேர்ந்தவர் எனக்கு பக்கத்து ஊர்க்காரர். இங்கு சவூதியில் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார். மாதம் இந்திய மதிப்பிற்கு 40000 சம்பளம் வாங்குகிறார்.

இன்னும் அதே ஊரைச் சார்ந்த நண்பர்கள் அனைவரும் ஒரே ரூமில் பத்தாஹ் என்கிற ஏரியாவில் இருக்கிறார்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு முதல் நாள் வியாழன் இரவே அவர்களின் ரூமிற்கு சென்று தங்கி இருந்து விட்டு வெள்ளிகிழமை மாலைதான் என் ரூமிற்கு வருவது வழக்கம். 

நண்பர் வருடா வருடம் சித்திரை மாதம் ஊருக்கு வருவார். எனக்கு ஆரம்பத்தில் முதல் வருடம் அவர் ஊருக்கு சித்திரை மாதம் போகும்போதே சந்தேகம். என்ன சித்திரை மாதம் யாரவது ஊருக்கு விடுமுறையில் போவார்களா? மண்டையை பிளக்கிற வெயில் அதுவுமில்லாமா அடிக்கடி கரண்ட் கட் ஆகும் ஏன் இந்த மாதம் கம்பெனியில் விடுமுறை வாங்கிட்டு போகிறார் என்ற கேள்வி புரியாத புதிராக இருந்தது.

அடுத்த ஆண்டுகளில் கொஞ்சம் நெருங்கி பழகிய பிறகு இதை அவரிடமே நேரடியாக கேட்டு விட்டேன். ஏங்க சித்திரை மாசம் ஊருக்கு போறீங்கே மண்டை பிளக்கிற கத்திரி வெயிலு. கரண்ட் வேற புடுங்கிருவாய்ங்க. இரவு நேரத்தில் கசகசன்னு வேர்க்கும். ஏன் ஒரு நாலு மாதம் கழித்து மழை காலத்துல போனால் என்ன? 

நண்பர் சொன்ன பதில் சித்திரை திருவிழாவுக்கு ஊருல இருக்கனும்.
அப்ப சரிதான் திருவிழாவுக்கு எல்லா நண்பர்களும், உறவினர்களும் வருவாங்க சந்திக்கலாம் அதைவிட ஆத்துல எறங்கிற ஆழகர் சாமியை தரிசிக்கலாம் (நண்பருக்கு தெய்வ பக்தி அதிகம் என்று மனதில் நினைத்துக் கொண்டே) என்பதற்காகத்தனே ஊருக்கு போறீங்க? சரிதான் அதற்காக கரண்ட் கட்டு, வெயில் இதையெல்லாம் பொறுத்துகிறலாம் என்று சொன்ன போது.

நண்பர் அதற்கு அளித்த பதில் ஒரு நிமிடம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது என்னங்க சொல்றீங்க? உண்மையாகவா? 




ஆமா ஹைதரு நான் பறையர் சாதியை சேர்ந்தவன் என்பதால் நான் தான் சாமி ஆத்துல றங்கும் போது கொட்டடிக்கனும், ஏன் அதுக்கு ஊரில் ஆள் இல்லையான்னா? இருக்காங்க ஆனா எங்க ஊரைச் சேர்ந்த முக்குலத்தோர்(கள்ளர்,தேவர்,
மறவர்) ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் ஆத்துல கள்ளழகராக வேடம் போட்டு ஆத்துல றங்கும் போது அந்த ஊரைச் சேர்ந்த நாங்கள் தான் பரம்பரை பரம்பரையாக கொட்டடித்துக் கிட்டு போவது வழக்கம். அப்பாவுக்கு வயசாகி விட்டது முடியாது.



சவூதிக்கு விசா கிடைத்தவுடன் ஊரிலுள்ள ஆதிக்க சாதீக்காரர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை பன்னினார்கள், ஏண்டா எல்லா பறபயலும் துபாயி, சிங்கப்பூரு, சவூதின்னு போயிட்டா எவண்டா இங்கே கொட்டு அடிப்பாய்ங்க?
என்று "சவுண்ட்" விட்ட அவர்களிடம். ஐயா தம்பிக்கு வருடா வருடம் "லீவு"ல திருவிழா மாசத்துல ஊருக்கு கொட்டடிக்க வந்துரும். அனுமதி கொடுங்கய்யா என்று கேட்ட பிறகு டேய் வருஷமானா திருவிழாவுக்கு கரெக்டா வந்துரனும் சரியா? என்ற மிரட்டி அவர்கள் வழிவிட்ட பிறகு தான் நான் சவூதி வர முடிந்தது என்றார்.

சரி உங்க வீட்டுக்கு எதாவது சமான் வாங்கி கொடுத்து விடுறீங்கலா பெட்டி கட்ட போறேன் என்று கிளம்பி விட்டார். என் பசங்களுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கி கொடுத்து விட்டேன் இப்படி என் மகனுக்கும் அறிமுகமாகி விட்டார்.



  
இந்த வீடியோவை பாருங்கள்

அடுத்த வருடம் அதே சித்திரை மாதத்தில் நான் ஊருக்கு போக வேண்டிய அவசர சூழல் இப்ப இரண்டு பேரும் ஒன்றாக பயணம். சவூதியிலிருந்து இலங்கை, இலங்கையிலிருந்து திருச்சி "ஏர்போர்ட்.ST  வேன் சர்வீஸில் புக்" பண்ணி விட்டதால் அவர்களே ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரை கொண்டு விட்டு விடுவார்கள் எனது ஊர் வருவதற்கு முன்பாக நண்பரின் கிராமம். நண்பர் எழுந்து அணிந்திருந்த சட்டையையும் பேண்டையும் கழட்டி கைலிக்கு மாறினார். ஏங்க ஊரு வந்தவுடன் கைலிக்கு மாறுறீங்க? ஆமா பேண்ட் போட்டுகிட்டு போனா உயர் ஜாதிக்காரவுங்க முறைத்துப் பார்ப்பார்கள்.

அடப்பாவிகளா தலையில் அடித்துக் கொண்டேன் வண்டி நின்றது உள்ளே ஒத்தையடி பாதை அதனால் வண்டி போகாது தலையில் சூட்கேஸை தூக்கி வைத்துக்கிட்டு நடக்க ஆரம்பித்தார் சரி நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி விட்டு நான் ஊருக்கு வந்து விட்டேன். நாளை என்று சொன்னனே தவிர அவரைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

பரமக்குடி ஆத்துல சித்திரை திருவிழா நான் குடும்பத்தோடு போயிருந்தேன். பெரிய ராட்டினம், மரணகிணறு, பாம்புப்பெண், போன்ற பொழுதுபோக்கு கட்டண அரங்குகளும், நிறைய ஸ்டால் கடை போட்டு இருப்பார்கள் ஊருக்கு போய் இருக்கும் போது பசங்கள கூட்டிட்டு போகாட்டி அவ்வளவுதான்! அதுவுமில்லாம என் மனைவி ஒவ்வொரு ஸ்டால் கடையா கையை காட்டி எனக்கு அது வாங்கி தா இது வாங்கி தா என்று சின்னபுள்ள மாதிரி கேட்டு வாங்குவதை எப்பூடி "மிஸ்" பண்ண முடியும்.



இப்புடி வாங்கிட்டு, சுத்தி பாத்துகிட்டு இருக்கும் போது என் மகன் சின்னவன் அத்தா(வாப்பா/அப்பா)அங்கே பாருங்க என்று கையை பிடித்து இழுத்தான். என்னடா 
சொல்லு அந்த அங்கே கொட்டடிச்சுக் கிட்டு போறரே அவர் நம்ம பாலமுருகன் அங்கிள் தானே டாய்ஸ் கொண்டு வந்து கொடுத்தாரே அவர் தானே அவன் கைகாட்டிய திசையில் பார்த்தேன்.

 ஆமா பலமுருகன் சவூதியில் அழகான "கலரில் பேண்ட் சார்ட்" போட்டு அதை அணிந்து வருவார் அவ்வளவு அழகாக அங்கு இருப்பவர். இப்ப பழைய அழுக்கு வெட்டியே தூக்கி கட்டிகிட்டு அது நழுவிடாம இருக்க முதலை மார்க் நாலு இஞ்சி அகல பச்சை கலர்ல பெல்ட்டு கட்டிகிட்டு. உடம்பில் சட்டை இல்லாமல் காலில் செருப்பு இல்லாமல் தோளில் கொட்டோடு இணைக்கப்பட்ட வாரை மாட்டிகிட்டு. கள்ளழகர் வேடம் போட்ட ஆதிக்க சாதிகாரவுங்க பின்னாடி மூர்க்கமாக கொட்டடித்துக் கொண்டே போயிகிட்டு இருந்தார்.

மறுபடியும் என் மகன் அத்தா(வாப்பா/அப்பா) அது பாலமுருகன் அங்கிள் தானே? என்று கேட்டு இயல்புக்கு கொண்டு வந்தான். இல்லப்பா அவரு வீட்டுக்கு உனக்கு" டாய்ஸ்" கொண்டு வந்தருலே அப்ப இப்புடியா "டிரஸ் " போட்டு இருந்தாரு அவரு "ஜீன்ஸ் டீசார்ட்" போட்டு இருந்தார்ல இந்த "அங்கிள்" கிட்ட அதுலாம் இல்ல பாரு அவரு இல்ல இவரு என்றேன். 



இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது பி.பி.சி. செய்தியில் வெளியான ஒரு சம்பவத்தை பகிர்கிறேன் பாருங்கள்.

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி சத்துணவு மையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சத்துணவு தயாரிப்பாளர்களாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை2, 2012) நியமிக்கப்பட்டனர்.


இதனால், தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் எனக்கூறி, அக்கிராமத்தில் இருக்கும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

“இப்பிரச்சனை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றபோது, கிராம மக்களின் விருப்பத்திற்கிணங்க அவ்விரு பெண்களையும் வேறொரு பள்ளிக்கு மாற்றல் செய்து, இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயன்றது அரசு” என்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலர் சாமுவேல்.

மேலும், “மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தங்கள் அமைப்பு வாதாடியதைத் தொடர்ந்து, அவர்களின் மாற்றல் உத்தரவுகள் திரும்பப்பெறப்பட்டு அந்த இருவரின் ஒரு பெண் மீண்டும் அங்கே சென்று சமைக்கத் துவங்கியிருப்பதாகவும், ஆனாலும் கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை அங்கே சாப்பிட இன்னமும் அனுமதிக்கவில்லை” என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார் சாமுவேல்.


என்றுதான் ஒழியுமோ இந்த சாதி. ஆதிகால சித்தர் கோபமாக இப்படி பாடினார்.



பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ, பணத்திபோகம் வேறதோ?
என்று கோபம் மேலிட்டுக் கேட்ட கேள்விக்கு ஜாதி வெறியர்கள் என்ன பதில் பேச முடியம்?
சாதாரண பாலைவனத்தில் வாழ்ந்த அரேபிய பழங்குடி காட்டரபிகள் அன்றைய பெரும் வல்லரசாக இருந்த பாரசீக,ரோம் சம்ராஜியத்தை வீழ்த்திய காரணம் என்ன தெரியுமா?? இதுபோன்று நான் மேலானவன் நீ கீழானவன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்களை இஸ்லாம் இணைத்திருந்தது.
அரேபிய வரலாற்று ஆசிரியர் ‘தபரி’ எழுதுகிறார்: பாரசீக மன்னன் ரூஸ்தமை சந்திக்க சென்ற அரேபியத்தூதராக சென்ற ‘மூகிரா’ பாரசீகத் துருப்புகளின் அருகே சென்றதும் ருஸ்தமைச் சந்திப்பதற்கு முன் அனுமதி பெறுவதற்காக அவர் நிறுத்தப்ப்ட்டார்.மூகிரா அங்கே (அதாவது ருஸ்தமின் சபைக்கு) போய்ச் சேர்ந்தபோது பொன்இழைகளால் செய்யப்பட்ட அழகான உடை அணிந்த பாரசீகர்களைக் கண்டார்.
அவர்கள் தலையில் கீரிடங்கள் அணிந்திருந்தார்கள்.சிறிது தூரம் வரை கம்பளங்கள் விரித்திருந்தார்கள்.வருபவர் அந்த தூரத்தை நடந்து கடக்க வேண்டியிருந்தது. ‘மூகிரா பின் ஷோபா’ அங்கே சென்றபோது, ருஸ்தாமின் சிம்மாசனத்தின் மீது இருந்த இருக்கை மெத்தை மேல் அமர்ந்தார். சிலபேர் ஒடிவந்து அவரைக் கிழே இழுத்து விட்டார்கள்.
மூகிரா சொன்னார்: நங்களெல்லோரும் உங்களுடைய விவேகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் உங்களை விட அதிக முட்டாள் தனமான மக்கள் இல்லை என்பதை நான் இப்போது காண்கிறேன். அரேபியர்களான நாங்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்கள். நாங்கள் போரில் தவிர யாரையும் அடிமையாக்குவதில்லை.எனவே நீங்களும் அதே போல அனுதாபம் கொண்டவர்களாக இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
ஆனால் இன்று நீங்கள் செய்த செயல்களிலிருந்து, உங்களில் சிலர், உங்களிலேயே மற்றவர்களுக்கு எஜமானர்கள் ஆகியிருப்பதைக் கண்டேன். இது சரியான வழி அல்ல. இப்படிப்பட்ட முறைகளில் வாழும் எந்த நாடும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்றார்.

No comments: