Thursday, 11 October 2012

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள் பிரிட்டனில்...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள் பிரிட்டனில்...

இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women" என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது.


இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை "இஸ்லாம் என்றால் என்ன?" என்று அறியத் தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள்.

சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ஆன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன்.

பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.

லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.
இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார்.

இந்த கட்டுரையில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆன்லைன்.

அனைத்தையும் இங்கே பதித்தால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் அவர்களில் இருவருடைய கருத்துக்களை மட்டும் இங்கே காண்போம். இன்ஷா அல்லாஹ்.

1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine)
Nursery school teacher, 31, North London

இஸ்லாத்தை தழுவ விருப்பம் இருக்கின்றதா? என்று என்னுடைய பதினாறாம் வயதில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய பதில் "இல்லை, நன்றி" என்பதாக இருந்திருக்கும். குடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது.

வட லண்டனில் வளர்ந்தேன். என் வீட்டில் மதத்தை பின்பற்றியதே இல்லை. நான் எப்போதும் நினைத்ததுண்டு, மதம் என்பது பிற்போக்கானது மற்றும் (தற்காலத்துக்கு) ஒத்துவராதது என்று.

ஆனால் இவையெல்லாம் என்னுடைய வருங்கால கணவர் சையத்தை சந்திக்கும் வரைதான். அவர் என்னுடைய எண்ணங்களுக்கு சவாலாக விளங்கினார். அவர் இளைஞர், இறைவனை நம்பக்கூடியவர். அவருக்கும் மற்ற டீனேஜ் இளைஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றால், அது, அவர் மது அருந்தமாட்டார் என்பதுதான்.

ஒரு வருடம் சென்றிருக்கும், நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தோம், அவர் முஸ்லிமாகவும் நான் முஸ்லிமல்லாதவலாகவும் இருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது?

சையத்தை சந்திக்கும் வரை என்னுடைய நம்பிக்கையை நான் கேள்வி கேட்டதில்லை. agnostic (agnostic - இவர்கள் இறைவன் இருக்கிறானென்றும் சொல்லமாட்டார்கள், இல்லையென்றும் சொல்ல மாட்டார்கள்) ஆகவே தொடர்ந்திருப்பேன்.

ஆக, ஆர்வ மிகுதியால் இஸ்லாம் குறித்த சில நூல்களை படிக்க ஆரம்பித்தேன்.

குரானின் அறிவார்ந்த விளக்கங்கள் தான் துவக்கத்தில் என்னை கவர்ந்தன. பிறகுதான் குரானின் ஆன்மீக பக்கம் என்னுள் வந்தது. குரானின் விளக்கங்களை விரும்பினேன். மேற்குலகில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation.

மதம் பற்றிய பேச்சுக்களை பேசுவதென்பது எங்கள் வீட்டில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் மூன்று வருடங்கள் என்னுலேயே இஸ்லாம் குறித்த ஆர்வத்தை மறைத்து கொண்டேன். ஆனால், பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில், நானும் சையத்தும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தோம். இப்போது கண்டிப்பாக என் பெற்றோரிடம் சொல்லி விடுவதென முடிவெடுத்தேன்.

என் அம்மாவின் முதல் கருத்து என்னவென்றால், "நீங்கள் ஏன் முதலில் சேர்ந்து வாழக்கூடாது?". நான் திருமணத்திற்கு அவசரப்படுவதும், இஸ்லாமிய பெண்களின் இல்ல பொறுப்புகளும் அவரை கவலைக்கொள்ள செய்தன.

ஆனால் நான் எந்த அளவு இஸ்லாத்தை தழுவுவதில் மும்முரமாக இருக்கிறேன் என்று யாருமே உணரவில்லை. ஒருமுறை என் தந்தையுடன் இரவு உணவுக்காக வெளியே சென்ற போது அவர் கூறினார், "மதுவை அருந்து. நான் சையத்திடன் சொல்ல மாட்டேன்".

நிறைய பேர், நான் இஸ்லாத்தை தழுவ நினைப்பது "சையத்தின் குடும்பத்தை திருப்திபடுத்தத்தான்" என்று நினைத்தார்களே ஒழிய, இஸ்லாம் மீதான என்னுடைய ஆர்வத்தை உணரவில்லை.

அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துவக்கத்தில் நான் ஹிஜாப் (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து அனைத்து உடல் பாகங்களையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) அணியவில்லை. தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொள்வேன்.

படிப்படியாக இஸ்லாமிய எண்ண அலைகளுக்குள் வந்துவிட்டேன். என்னுடைய அறிவாற்றலை வைத்தும், நடத்தையை வைத்தும் தான் என்னை எடை போட வேண்டுமே தவிர, நான் எப்படி உடை அணிகின்றேன் என்பதை வைத்தல்ல. It was empowering.

என்னுடைய நண்பர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது, "என்ன, மது இல்லையா, drugs இல்லையா, ஆண்கள் இல்லையா?........எங்களால் முடியாது"

என்னுடைய ஆண் நண்பர்களிடம் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க சொல்ல சில காலம் ஆனது, "மன்னிக்கவும், இது முஸ்லிம்களின் பழக்கம்"

நாட்கள் போகப்போக, என் கணவரை விட மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவளாக மாறிவிட்டேன்.

என்னுடைய பெற்றோர்களிடம் திரும்ப சென்ற போது, என்னை பார்த்தவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தார்கள், நான் ஏன் இன்னும் அந்த தலையை மறைக்கும் துணியை அணிந்திருக்கின்றேனென்று. ஆனால் நான் தனியாக இருந்தது என்னுடைய நம்பிக்கையை மேலும் வலுவாக்கியது.

இஸ்லாம் எனக்கு திசையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கொடுத்திருக்கின்றது.

முஸ்லிம் பொது பிரச்சனைகள் குழுவில் (Muslim Public Affairs committee) என்னை ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து, வறுமை மற்றும் பாலஸ்தீன நிலைமையை எதிர்த்து என பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வருகின்றேன்.

நான் இன்னும் என்னை பிரிட்டிஷ் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றேன். அதே நேரம் நான் முஸ்லிமும் கூட. இந்த இரண்டு அடையாளங்களுக்கு நடுவே ஒத்து போக சிறிது காலம் ஆனது. நான் இப்போது இந்த இரண்டிலும் அங்கம் வகிக்கின்றேன், அதிலிருந்து என்னை யாரும் வெளியேற்றவும் முடியாது.



2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey)
Solicitor, 30, Bradford

நான் முதல் முறை என் அலுவலகத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. உள்ளே நுழைந்தபோது சிலர் கேட்டார்கள், "எதற்காக தலையை மறைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் முஸ்லிமாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது"

நான் தெற்கு யார்க்க்ஷையரில் வளர்ந்தவள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன் வரை ஒரு முஸ்லிமை கூட பார்த்ததாக நினைவில்லை. என்னுடைய முதல் வேலையின் போது, தனியாக நின்று சம்பாதிக்கக்கூடிய இளைஞியாக வர வேண்டுமென்று முயற்சி செய்தேன். மதுக்கூடங்கள், கடுமையான டயட், ஸாப்பிங் என்று சென்றது வாழ்க்கை. ஆனால் இது எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை.

சில நாட்களுக்கு பிறகு இணையம் மூலமாக குரானை ஆர்டர் செய்தேன்.

லீட்ஸ் புதிய முஸ்லிம்கள் குழுவினரால் (Leeds New Muslims Group) நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்ல தைரியத்தை வரவழைக்க சில நாட்கள் ஆனது.

எனக்கு நினைவிருக்கின்றது, வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தீர்மானமில்லாத நிலையில் என்னையே கேட்டுக்கொண்டேன், "நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?". உள்ளே இருக்கும் பெண்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிற அங்கி அணிந்திருப்பர் என்று கற்பனை செய்து கொண்டேன். "25 வயது பிரிட்டன் பெண்ணான எனக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கும்?"

நான் உள்ளே சென்ற போது, அதிலிருந்த எவரும் நாம் அடிக்கடி கேள்விப்படும் "அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தலைவி" என்ற வட்டத்திற்குள் வரவில்லை (none of them fitted the stereotype of the oppressed Muslim housewife). அவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, உளவியல் நிபுணர்களாக இருந்தனர்.

அவர்கள் மனநிறைவுடனும், பாதுகாப்புடனும் காணப்பட்டார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. நான் எந்த புத்தகத்தை படித்ததை காட்டிலும், இந்த பெண்களுடனான சந்திப்பு என்னை மிகவும் திருப்திபடுத்தியது.

பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 2008ல் ஒரு நண்பரது வீட்டில் இஸ்லாத்தை தழுவினேன். முதலில், நான் சரியான முடிவை எடுத்திருக்கின்றேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.

சில மாதங்களுக்கு பின்னர் என் பெற்றோரிடம் இது குறித்து சொல்ல வேண்டுமென்று உட்கார்ந்தேன். நிறைய மக்கள் நினைப்பது போல, இஸ்லாம் என்னை அடிமைப்படுத்தவில்லை, நான் நானாகவே இருக்க அனுமதிக்கின்றது.

நான் ஒரு பிரிட்டிஷ் என்பதிலும், முஸ்லிம் என்பதிலும் பெருமை கொள்கிறேன். எந்த வழியிலும் இவை இரண்டிற்குமிடையே முரண்பாடு இருப்பதாக நான் நினைத்ததில்லை.


அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனிற்கே....

பிரிட்டிஷ் கலாச்சார பின்னணியில் நம்மை வைத்து பார்த்தால் இந்த சகோதரிகள் கடந்து வந்த பாதை நமக்கு தெளிவாக புலப்படும்.

டைம்ஸ் ஆன்லைனின் இந்த பதிவில் என்னை திணறடித்தது அகீலா லிண்ட்சே வீலர் என்ற சகோதரியின் கருத்து.

"The first time I tried on the hijab, I remember sitting in front of the mirror, thinking, ‘What am I doing putting a piece of cloth over my head? I look crazy!’ Now I’d feel naked without it and only occasionally daydream about feeling the wind blow through my hair" - Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
முதலில் நான் ஹிஜாபை அணிந்த போது, கண்ணாடியை பார்த்து என்னையே கேட்டுக் கொள்வேன், "ஒரு துணியை என் தலையை சுற்றி கட்டுவதால் நான் என்ன பண்ணுகின்றேன்? I look Crazy!". ஆனால் இப்போதோ ஹிஜாப் அணியாமல் இருப்பதை நிர்வாணமாக இருப்பது போல உணர்கின்றேன் --- (extract from the original quote of) Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.

ஆக, எந்த ஹிஜாபை நோக்கி அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ, அதனை விரும்பி அணியும் பெண்களாகத் தான் இவர்கள் இருக்கின்றார்கள்.

இஸ்லாம் தங்களுக்கு மனநிறைவையும், பாதுகாப்பையும், திசையையும், உரிமைகளையும் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

ஒருபுறம், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, அடக்கியாள்கின்றது என்ற பிரச்சாரம். மறுபுறம், டைம்ஸ் இணையதளம் சொல்லுவது போல ஆயிரக்கணக்கில் இஸ்லாமிற்குள் நுழையும் சகோதரிகள்.

இஸ்லாமை நன்கு ஆராய்ந்து அதனுள் தங்களை இணைத்து கொண்டிருக்கும் சகோதரிகளின் கருத்து சரியா?, அல்லது, இஸ்லாமிற்கு வெளியே நின்று கொண்டு இஸ்லாம் பெண்களை இப்படி நடத்துகின்றது, அப்படி நடத்துகின்றது என்று கூப்பாடு போடுபவர்களின் கருத்து சரியா?

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

நன்றி : kattumavaditimes

No comments: