I did not come into contact with any Muslim before I embraced Islam. I read the Qur'an first and realized no person is perfect, Islam is perfect, and if we imitate the conduct of the Holy Prophet Muhammad saw (Peace Be Upon Him) we will be successful.
Yusuf Islam
யூசுப் இஸ்லாம் (கேட் ஸ்டீவன்ஸ்)
''நான் ஜெரூஸலத்துக்குப் போக வேண்டும். முஸ்லிம் சகோதரர்களைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வு என்னுள் வளர்ந்தது. புனித குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதியை நான் வாசித்து விளங்கிய பின்பே இந்த உந்துதல் எனக்குள் ஏற்பட்டது.
நான் ஜெரூஸலத்துக்குப் பயணமானேன். அங்கேயுள்ள பள்ளிவாசல் என்னைக் கவர்ந்தது. பாதணிகளைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தேன். பள்ளிவாசலினுள் ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டேன்.
நீங்கள் யார்? ஏன் இங்கு வந்தீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று அங்கிருந்த ஒருவர் கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தார்.
நான் அமைதியாகப் பதிலளித்தேன். பள்ளிவாசலின் அமைதி, புனிதம் என்பன என்னை முழுமையாக உள்வாங்கியிருந்தது.
‘நான் ஒரு முஸ்லிம்’ என்று பதிலளித்தேன். எனது பதிலில் எனக்கு மிகுந்த மன நிறைவும் திருப்தியும் இருந்தது. அந்த சகோதரர் எனது பதிலில் திருப்தியடையவில்லை.
உங்களது பெயர் என்ன? என்று வினவினார்.
எனது பெயர் ‘ஸ்டீவன்ஸ்’ என்றேன். எனது பதிலினால் அச்சகோதரர் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டார். அப்பள்ளிவாசலில் நான் தொழுகையில் ஈடுபட்டேன். ஆனால் அது ஒழுங்கு முறையிலான தொழுகையாக அமையவில்லை.
எனது ஜெரூஸலத்துப் பயணத்தை முடித்துக் கொண்டு புதிய அனுபவங்களுடன் இலண்டனுக்குத் திரும்பினேன் லண்டனில் ஒரு முஸ்லிம் சகோதரியைச் சந்தித்தேன் அவரது பெயர் நபீஸா.
புனித குர்ஆனை வாசித்ததில் இருந்து எனக்குள் புதுத்தெம்பு பிறந்திருந்தது. குர்ஆன் போதிக்கும் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என்று அந்தச் சகோதரியிடம் தெரிவித்தேன். அவர் என்னை லண்டன் புதிய ரீஜன்ட் பள்ளிவாசலுக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் 1977ஆம் ஆண்டு நடந்தது. நான் புனித குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதியொன்றினைப் பெற்று ஒன்றரை வருடங்களின் பின்பே இச்சம்பவம் நிகழ்ந்தது.''
இந்த அனுபவத்திற்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல. உலகப் பிரசித்தி பெற்ற ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பொப் இசை நட்சத்திரம் கேட் ஸ்டீவன்ஸே அவர். இவர் கிறிஸ்துவ மதத்திலிருந்து புனித இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை யூசுப் இஸ்லாம் என்று மாற்றிக் கொண்டவர்.
1948 இல் லண்டனில் பிறந்த யூசுப் இஸ்லாம் (கேட் ஸ்டீவன்ஸ்) தனது ஆரம்ப கால வாழ்க்கை அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.
''நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன். ஒவ்வொரு குழந்தையும் தனது பெற்றோர்களின் மதத்துக்கு உரியவராகி விடுகிறார்கள். நான் கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். எனது சமயத்தின் மீது சில சந்தேகங்கள் எதிர்க்கருத்துகள் எழுந்தன. என்றாலும் எனது பெற்றோரிடம் இவை பற்றி தெரிவிப்பதற்குப் பயந்தேன்.
நான் தொழிலாக இசைத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஒரு பிரபல பாடகராவதற்கு ஆசைப்பட்டேன். பணம் உழைப்பதே எனது குறிக்கோளாக இருந்தது. இதுவே உலகமாய் இதுவே வாழ்க்கையாக இருக்க வேண்டுமென எண்ணினேன்.
அது எனது இளவயது. பொப் பாடலில் மிகவும் பிரபல்யமானேன். எனது பெயரும் போட்டோக்களும் ஊடகங்களில் வெளிவந்தன. சுகபோக வாழ்க்கை வாழ விரும்பினேன். மதுவும், போதைப் பொருட்களும் எனது சுகபோக வாழ்க்கையில் புகுந்து விளையாடின.
ஒரு வருட காலம் நான் ஆடம்பர டாம்பீக வாழ்க்கையில் மூழ்கியிருந்தேன். இந்தக் கால கட்டத்தில் தான் நான் சோதனைகளுக்குள்ளானேன். காச நோய் என்னைத் தொற்றிக் கொண்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். வைத்தியசாலையில் எனது நிலைமைகள் நிறைய என்னைச் சிந்திக்கத் தூண்டின. நோயும், துக்கமும், துயரங்களும் எனது தவறான வாழ்க்கைக்கு கடவுள் தந்த தண்டனைகளாகக் கருதினேன்.
ஏன் நான் வைத்தியசாலை கட்டிலில் இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை காண முயன்றேன். அப்போது கீழைத்தேய நாடுகளின் சமயங்கள் பற்றி சிந்தித்தேன். தியானத்தினால் உண்மையையும், கடவுளையும் காணலாம் என்பதில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது. இது தொடர்பான புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அதன்படி நான் சைவ உணவு உண்பவனாக மாறிக் கொண்டேன். இந்த மாற்றங்கள் நான் வைத்தியசாலையில் இருந்த காலத்தினுள் நிகழ்ந்தன.
எனது மாற்றங்களுக்குள்ளான கருத்துக்கள் அடங்கிய பாடல்களை இயற்ற ஆரம்பித்தேன். ‘கடவுளை கண்டறியும் வழி’ எனும் பாடலொன்றை எழுதினேன். இதனால் நான் இசைத்துறையில் மேலும் பிரபல்யமானேன். நான் செல்வந்தனாகவும் பிரபல்யமானவனாகவும் மாறிய போது பல சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்க நேர்ந்தது. இந்த கஷ்டங்களுக்கும் சவால்களுக்கும் காரணம் என்ன என்று தேடிக்கண்டுபிடிக்க முயற்சித்தேன்.
இச்சந்தர்ப்பத்தில் நான் ஒரு நிலைக்கு வந்தேன். பெளத்த மதமே சரியானது. சமாதானத்தையும், நிம்மதியான வாழ்க்கையையும் தரக் கூடியது என்ற தீர்மானத்திற்கு வந்தேன். ஆனால் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தை விட்டும் விலக விரும்பவில்லை. எனது சமூகத்திலிருந்தும் விடுபட்டு ஒரு துறவியாக விரும்பவில்லை.
இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு இஸ்லாத்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அப்போது தான் அந்த அதிசய சம்பவம் நிகழ்ந்தது. ஜெரூஸலத்திலிருந்த பள்ளிவாசல் ஒன்றுக்கு விஜயம் செய்த எனது சகோதரர் அங்கிருந்து குர்ஆன் மொழி பெயர்ப்பு பிரதியொன்றினைக் கொண்டு வந்து என்னிடம் கையளித்தார்.
ஜெரூசலம் பள்ளிவாசல் தேவாலயங்களைப் போல் வெறிச்சோடியில்லாது சுறுசுறுப்பாக இருந்ததாக என்னிடம் கூறினார். அவர் இஸ்லாத்துக்கு மதம் மாறவில்லை. ஆனால் இஸ்லாமிய சமயத்தினால் கவரப்பட்டிருந்தார்.
குர்ஆனை வாசித்தபோதுதான் எனக்கு சரியான வழிகாட்டல் கிடைத்தது. நான் யார்? நான் எந்த நோக்கத்திற்காக வாழ வேண்டும்? நான் எங்கிருந்து வந்துள்ளேன்? இவை பற்றியெல்லாம் நான் தெளிவாக விளங்கிக் கொண்டேன். அனைத்தும் இறைவனின் செயல் அனைத்தையும் உருவாக்கியவன் அவனே என்பதை நான் உணர்ந்தேன். நான் நல்ல மனிதனாக மாற்றம் பெறுவதற்கான அனைத்தும் இஸ்லாத்தில் அடங்கியிருந்தது. இந்நிலையில் நான் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டேன். முஸ்லிமாக மாறினேன்.
புனித குர்ஆனை முழுமையாக வாசித்து இஸ்லாத்தைப் புரிந்து கொண்டதுடன் 1977இல் ஜெரூசலம் பள்ளிவாசலுக்குள் சென்று பெற்ற அனுபவங்களும் என்னை இஸ்லாமியனாக்கின. ஒரு வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்பு இமாமிடம் சென்று இஸ்லாத்தின் மீதான எனது நம்பிக்கையை அவரது கரங்களுடன் எனது கரங்களை இணைத்து வெளியிட்டேன். ஏனைய மதங்களில் போலன்றி இஸ்லாத்தின் சமய வணக்கங்கள் மூலம் நேரடியாக அல்லாஹ்வை தொடர்பு கொள்ள முடிகிறது. எனது தேவைகளை முன்னெடுக்க முடிகிறது.
இறுதியாக நான் சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன். நான் அல்லாஹ்வை மகிழ்விப்பதற்காகவே அனைத்தையும் செய்கிறேன். இஸ்லாம் மார்க்கத்துக்கு நிகரானது எதுவும் இல்லை. நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். அல்லாஹ் நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்ற எமக்கு அருள் புரிவனாக ஆமீன்.
No comments:
Post a Comment