Wednesday 29 November 2017

நோன்பாளி பகல் வேளைகளில்

நோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது (தனது மனைவியை) முத்தமிடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆதாரம்: தாரமி-1722, புகாரி கிதாபுல் ஸியாம்24ம் பாடம், முஸ்லிம் கிதாபுல் ஸியாம் 12ம் பாடம், இப்னுமாஜா-1683, அபூ தாவூத் கிதாபுல் ஸவ்ம் – 34ம் பாடம், திர்மிதி – 723)
சில அறிவிப்புக்களில். “நானும் நோன்பாளியாக இருக்கும் நிலையிலேயே நோன்பாளியான அவர் என்னை முத்தமிட்டார்” என்று காண்ப்படுகிறது. (அபூ தாவூத், கிதாபுல் ஸவ்ம் 24ம் பாடம்)
இது நபி(ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரிய சட்டமல்ல. என்பதற்கும் அநேக சான்றுகள் உள்ளன. அதில் ஒன்றை மாத்திரம் வேறு சில தேவை கருதி இங்கே குறிப்பிடுகின்றோம்.
ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தமது மனைவியை முத்தமிட்டுவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் பெரியதொரு தவறைச் செய்து விட்டேன். நோன்புடன் (என் மனைவியை) முத்தமிட்டுவிட்டேன் என்றார்கள். 
அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ நோன்பு நோற்றிருக்கும் போது வாய் கொப்பளிப்பது பற்றி என்ன எண்ணுகிறாய்? என வினவினார்கள். உமர்(ரழி) அவர்கள், அதில் தவறில்லையே எனப் பதிலளித்தார்கள். உடலுறவு, நீர் அருந்துதல் போன்றது என்றால் முத்தமிடுவது வாய்கொப்பளிப்பது போன்றது தான் என்ற கருத்தை நபி(ஸல்) அவர்கள் சூசகமாக உணர்த்தினார்கள்” (ஆதாரம்: தாரமீ-1724, அபூதாவூத்- 2385, இப்னு குஸைமா-1999)
எனவே, நோன்பாளியான கணவன்-மனைவி முத்தமிட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதை உணரலாம். உணர்ச்சி வசப்பட்டு உடலுறவில் ஈடுபட்டுவிடுவோமோ என்ற அச்சம் இருப்பின் அதிலிருந்து விலகிக் கொள்ளல் கடமையாகும். நபியவர்களின் உவமானத்தைக் கூர்ந்து நோக்கும் போத இன்னுமொரு உண்மையையும் அறியலாம். 
நோன்பாளி ஒருவர் வாய் கொப்பளிக்கும் போது தொண்டை வரை நீர் சென்று விடும் அளவுக்கு எல்லை மீறிச் செல்லலாகாது” என்பது நபிமொழி. இதனோடு ஒப்பிட்டு உவமையை நோக்கும் போது முத்தமிடுவதில் எல்லை மீறிச் சென்றிடலாகாது என்பதையும் யூகிக்கலாம்.
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

No comments: