Wednesday, 21 March 2018

உலகம் அழியும் #காலம் நெருங்கும்போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் #யஃஜூஜ் #மஃஜூஜ் ஆவர்.
உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக #நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும்.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தினர் நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அவர்களால் வரவும் முடியாது.
அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது.
#யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரையிலான வசனங்கள் கூறுகின்றன.
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள்.
 உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள் என்று 21:96 வசனம் கூறுகிறது.

    இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் #Flores என்ற ஒரு தீவு உள்ளது.
இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர் நெல்லிஸ் குயா தனது மூதாதையர்கள் கூறியதாக சொல்லும் விசித்திர கதை.

    இந்த கிரமத்திற்கு அப்பால் உள்ள மலைகளுக்கு பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கண்கள் சிறியதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியவர்களாகவும், ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள் என்றும், இவர்கள் அடிக்கடி தங்கள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்கள், உணவுப் பொருள், பழங்களை திருடிக்கொண்டு ஓடி விடுவார்கள். பெரும் பசிக்காரர்கள். எதையும் தின்பவர்கள். இக்குள்ளர்களை
(Ebu gogo) எபு கோகோ என்று அழைப்பதாகவும் கூறினார். இதற்குப் பொருள் எதையும் தின்னும் தின்னிப்பண்டாரம்.

    இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் சில ஆண்டு முன்பு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகை முடிவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு #எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.

    அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பாகும்.

    இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறினார்.

    முதியவர் நெல்லிஸ் குயாவின் கிராமத்தினர், இன்னும் இந்த விசித்திர குள்ளர்கள் மலைகளுக்கு அப்பால் அல்லது பாதாள நகரத்தில் வசிப்பதாக நம்புகின்றனர். இக்கிராமத்தினர் அனைவரும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். விசித்திர குள்ளர்களை Ebu Gogo என்று அழைப்பது  யஃஜுஜ், மஃஜுஜின் ஆங்கிலப் பெயரான Yahog, Magog வுக்கு நெருக்கமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சித்திர குள்ளர்கள் மனித இனத்தின் ஒரு பிரிவினர். இவர்களுக்கு Homo floresiensis என்ற பெயர் இடப்பட்டுள்ளது.

    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) ஏவாள் (ஹவ்வா )அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்: தப்ரானீ

இவர்கள் நூஹ்(அலை) நோவா அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.

    ‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர்.

ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573

     “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.

 அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ

    கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் முக அளவும் கிராம மக்களின் வர்ணிக்கும் ‘எபு கோகோ குள்ளர்களின் அமைப்பும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர்னைன் அவர்கள் பயணம் செய்த கீழ்திசை இரு மலைகள் சூழ்ந்த அமைப்பு, விளங்கிக்கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள், மேலும் எரிமலை குழம்பு நிறைந்த ஃபுளோரஸ் தீவில் இரும்புப் பாலங்களும் நெருப்பாக்குவதற்கு தேவையான மரங்கள் மற்றும் நிலக்கரியும் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான், அவர்களில் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக் கண்டு அதன் நீரைப் பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும்போது (தண்னீர் இராது என்பதால்) அந்த இடத்தில் ஒரு சமயத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(அரழி) நூல்: முஸ்லிம்

    இக்கூட்டத்தினர் வெளியாகும்போது மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்றளவுக்கு அனைத்தையும் தின்று தீர்த்து அநியாயம் செய்வார்கள். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒரு மாட்டின் தலை இன்று என்ன பெறுமதியோ, அது அன்று நூறு தங்க காசுகளைவிட அதிக வெகுமதியாக இருக்கும்”

    துல்கர்னைன் எழுப்பிய தடுப்புச் சுவர் இந்தோனேஷிய தீவுகளில் எதாவது ஒன்றில்  இருக்கலாம். ஃபுளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடும் எலும்புக்கூடும் தரும் ஆய்வுச் செய்திகள், குள்ள மனிதர்கள் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள், கூர்மையான கற்களால் ஆன ஆயுதங்களை கொண்டு ராட்சத பல்லி, முயல் அளவில் உள்ள காட்டெலி அன்று வாழ்ந்த குள்ள யானை போன்ற மிருகங்களை வேட்டையாடி வீழ்த்தியுள்ளார்கள்.

மனிதன் கால்படாத ஏராளாமான காட்டு பிதேசங்கள் இன்றும் இந்தோனேஷிய தீவுகளில் உள்ளன. ஆகவே அறிவியல் சான்றுபடியும் கிராம மக்கள் வழிவழி கதைகள் மூலமும் குர்ஆன் ஹதீஸ் மூலம் அறியும்   யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் இந்தோனேஷிய தீவுகளில்   வாழ்ந்து வரலாம். எது எப்படியோ 3 அடி குள்ள மனிதர்கள் ஆதம்(அலை) சந்ததிகள் என்ற குர்ஆன், ஹதீஸ் முன்னறிவிப்பு இன்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments: