Saturday, 13 October 2012


கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மை நாட்டில் இருபது லட்சம் உத்தியோகபூர்வ தகவல்

இலங்கையின் 2012 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் உத்தியோக பூர்வத முடிவின் பிரகாரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பது தெரிய வந்துள்ளது. கிழக்கில் முஸ்லிம்கள் (சமயரீதியாக) 37.12 வீதம் என்ற பெரும்பான்மையை கொண்டுள்ளனர்.


அதேவேளை ஹிந்துக்கள் 34.8 என்ற தொகையையும் , பௌத்தர்கள் 22.86 என்ற த
 ொகையையும் கொண்டுள்ளனர் .

எண்ணிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் 575,936 நபர்களும் ஹிந்துக்கள் 539,570 நபர்களும் பௌத்தர்கள் 354,772 நபர்களும் உள்ளனர் .

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இரண்டு மாவட்டங்களில் முஸ்லிம்கள பெரும்பான்மயாக உள்ளனர் , அம்பாறையில் 43.6 வீதமும் , திருகோணமலையில் 42.1 வீதமும் , மட்டகளப்பில் 25.5 வீதமும் உள்ளனர்.

இலங்கையில் முஸ்லிம்கள் (சமயரீதியாக) 9.7 என்ற வீதத்தில் உள்ளனர். எண்ணிக்கையில் 1,967,227 நபர்கள் அதாவது அண்ணளவாக இருபது இலட்சம் பேர் உள்ளனர் .

கிழக்கு மாகாணத்துக்கு வெளியே முஸ்லிம்கள் (சமயரீதியாக) விகித அடிப்படையில் அதிகள் உள்ள மாவட்டமாக வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டம் உள்ளது. புத்தளத்தில் 20 வீதமான முஸ்லிம்கள் உள்ளனர். எண்ணிக்கையில் 152,280 நபர்கள் உள்ளனர்.

வடக்கு , கிழக்கு மாகாணத்துக்கு வெளியே விகித அடிப்படையில் இரண்டாவது நிலையில் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் 14.3 வீதமான முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் எண்ணிக்கையில் 196,347 நபர்கள் உள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் 16.55 வீதமான முஸ்லிம்கள் பதிவாகியுள்ளனர் ஆனால் எண்ணிக்கையில் குறைந்த அளவில் உள்ளனர்

Thursday, 11 October 2012

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள் பிரிட்டனில்...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள் பிரிட்டனில்...

இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women" என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது.


இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை "இஸ்லாம் என்றால் என்ன?" என்று அறியத் தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள்.

சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ஆன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன்.

பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.

லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.
இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார்.

இந்த கட்டுரையில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆன்லைன்.

அனைத்தையும் இங்கே பதித்தால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் அவர்களில் இருவருடைய கருத்துக்களை மட்டும் இங்கே காண்போம். இன்ஷா அல்லாஹ்.

1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine)
Nursery school teacher, 31, North London

இஸ்லாத்தை தழுவ விருப்பம் இருக்கின்றதா? என்று என்னுடைய பதினாறாம் வயதில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய பதில் "இல்லை, நன்றி" என்பதாக இருந்திருக்கும். குடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது.

வட லண்டனில் வளர்ந்தேன். என் வீட்டில் மதத்தை பின்பற்றியதே இல்லை. நான் எப்போதும் நினைத்ததுண்டு, மதம் என்பது பிற்போக்கானது மற்றும் (தற்காலத்துக்கு) ஒத்துவராதது என்று.

ஆனால் இவையெல்லாம் என்னுடைய வருங்கால கணவர் சையத்தை சந்திக்கும் வரைதான். அவர் என்னுடைய எண்ணங்களுக்கு சவாலாக விளங்கினார். அவர் இளைஞர், இறைவனை நம்பக்கூடியவர். அவருக்கும் மற்ற டீனேஜ் இளைஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றால், அது, அவர் மது அருந்தமாட்டார் என்பதுதான்.

ஒரு வருடம் சென்றிருக்கும், நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தோம், அவர் முஸ்லிமாகவும் நான் முஸ்லிமல்லாதவலாகவும் இருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது?

சையத்தை சந்திக்கும் வரை என்னுடைய நம்பிக்கையை நான் கேள்வி கேட்டதில்லை. agnostic (agnostic - இவர்கள் இறைவன் இருக்கிறானென்றும் சொல்லமாட்டார்கள், இல்லையென்றும் சொல்ல மாட்டார்கள்) ஆகவே தொடர்ந்திருப்பேன்.

ஆக, ஆர்வ மிகுதியால் இஸ்லாம் குறித்த சில நூல்களை படிக்க ஆரம்பித்தேன்.

குரானின் அறிவார்ந்த விளக்கங்கள் தான் துவக்கத்தில் என்னை கவர்ந்தன. பிறகுதான் குரானின் ஆன்மீக பக்கம் என்னுள் வந்தது. குரானின் விளக்கங்களை விரும்பினேன். மேற்குலகில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation.

மதம் பற்றிய பேச்சுக்களை பேசுவதென்பது எங்கள் வீட்டில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் மூன்று வருடங்கள் என்னுலேயே இஸ்லாம் குறித்த ஆர்வத்தை மறைத்து கொண்டேன். ஆனால், பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில், நானும் சையத்தும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தோம். இப்போது கண்டிப்பாக என் பெற்றோரிடம் சொல்லி விடுவதென முடிவெடுத்தேன்.

என் அம்மாவின் முதல் கருத்து என்னவென்றால், "நீங்கள் ஏன் முதலில் சேர்ந்து வாழக்கூடாது?". நான் திருமணத்திற்கு அவசரப்படுவதும், இஸ்லாமிய பெண்களின் இல்ல பொறுப்புகளும் அவரை கவலைக்கொள்ள செய்தன.

ஆனால் நான் எந்த அளவு இஸ்லாத்தை தழுவுவதில் மும்முரமாக இருக்கிறேன் என்று யாருமே உணரவில்லை. ஒருமுறை என் தந்தையுடன் இரவு உணவுக்காக வெளியே சென்ற போது அவர் கூறினார், "மதுவை அருந்து. நான் சையத்திடன் சொல்ல மாட்டேன்".

நிறைய பேர், நான் இஸ்லாத்தை தழுவ நினைப்பது "சையத்தின் குடும்பத்தை திருப்திபடுத்தத்தான்" என்று நினைத்தார்களே ஒழிய, இஸ்லாம் மீதான என்னுடைய ஆர்வத்தை உணரவில்லை.

அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துவக்கத்தில் நான் ஹிஜாப் (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து அனைத்து உடல் பாகங்களையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) அணியவில்லை. தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொள்வேன்.

படிப்படியாக இஸ்லாமிய எண்ண அலைகளுக்குள் வந்துவிட்டேன். என்னுடைய அறிவாற்றலை வைத்தும், நடத்தையை வைத்தும் தான் என்னை எடை போட வேண்டுமே தவிர, நான் எப்படி உடை அணிகின்றேன் என்பதை வைத்தல்ல. It was empowering.

என்னுடைய நண்பர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது, "என்ன, மது இல்லையா, drugs இல்லையா, ஆண்கள் இல்லையா?........எங்களால் முடியாது"

என்னுடைய ஆண் நண்பர்களிடம் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க சொல்ல சில காலம் ஆனது, "மன்னிக்கவும், இது முஸ்லிம்களின் பழக்கம்"

நாட்கள் போகப்போக, என் கணவரை விட மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவளாக மாறிவிட்டேன்.

என்னுடைய பெற்றோர்களிடம் திரும்ப சென்ற போது, என்னை பார்த்தவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தார்கள், நான் ஏன் இன்னும் அந்த தலையை மறைக்கும் துணியை அணிந்திருக்கின்றேனென்று. ஆனால் நான் தனியாக இருந்தது என்னுடைய நம்பிக்கையை மேலும் வலுவாக்கியது.

இஸ்லாம் எனக்கு திசையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கொடுத்திருக்கின்றது.

முஸ்லிம் பொது பிரச்சனைகள் குழுவில் (Muslim Public Affairs committee) என்னை ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து, வறுமை மற்றும் பாலஸ்தீன நிலைமையை எதிர்த்து என பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வருகின்றேன்.

நான் இன்னும் என்னை பிரிட்டிஷ் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றேன். அதே நேரம் நான் முஸ்லிமும் கூட. இந்த இரண்டு அடையாளங்களுக்கு நடுவே ஒத்து போக சிறிது காலம் ஆனது. நான் இப்போது இந்த இரண்டிலும் அங்கம் வகிக்கின்றேன், அதிலிருந்து என்னை யாரும் வெளியேற்றவும் முடியாது.



2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey)
Solicitor, 30, Bradford

நான் முதல் முறை என் அலுவலகத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. உள்ளே நுழைந்தபோது சிலர் கேட்டார்கள், "எதற்காக தலையை மறைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் முஸ்லிமாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது"

நான் தெற்கு யார்க்க்ஷையரில் வளர்ந்தவள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன் வரை ஒரு முஸ்லிமை கூட பார்த்ததாக நினைவில்லை. என்னுடைய முதல் வேலையின் போது, தனியாக நின்று சம்பாதிக்கக்கூடிய இளைஞியாக வர வேண்டுமென்று முயற்சி செய்தேன். மதுக்கூடங்கள், கடுமையான டயட், ஸாப்பிங் என்று சென்றது வாழ்க்கை. ஆனால் இது எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை.

சில நாட்களுக்கு பிறகு இணையம் மூலமாக குரானை ஆர்டர் செய்தேன்.

லீட்ஸ் புதிய முஸ்லிம்கள் குழுவினரால் (Leeds New Muslims Group) நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்ல தைரியத்தை வரவழைக்க சில நாட்கள் ஆனது.

எனக்கு நினைவிருக்கின்றது, வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தீர்மானமில்லாத நிலையில் என்னையே கேட்டுக்கொண்டேன், "நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?". உள்ளே இருக்கும் பெண்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிற அங்கி அணிந்திருப்பர் என்று கற்பனை செய்து கொண்டேன். "25 வயது பிரிட்டன் பெண்ணான எனக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கும்?"

நான் உள்ளே சென்ற போது, அதிலிருந்த எவரும் நாம் அடிக்கடி கேள்விப்படும் "அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தலைவி" என்ற வட்டத்திற்குள் வரவில்லை (none of them fitted the stereotype of the oppressed Muslim housewife). அவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, உளவியல் நிபுணர்களாக இருந்தனர்.

அவர்கள் மனநிறைவுடனும், பாதுகாப்புடனும் காணப்பட்டார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. நான் எந்த புத்தகத்தை படித்ததை காட்டிலும், இந்த பெண்களுடனான சந்திப்பு என்னை மிகவும் திருப்திபடுத்தியது.

பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 2008ல் ஒரு நண்பரது வீட்டில் இஸ்லாத்தை தழுவினேன். முதலில், நான் சரியான முடிவை எடுத்திருக்கின்றேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.

சில மாதங்களுக்கு பின்னர் என் பெற்றோரிடம் இது குறித்து சொல்ல வேண்டுமென்று உட்கார்ந்தேன். நிறைய மக்கள் நினைப்பது போல, இஸ்லாம் என்னை அடிமைப்படுத்தவில்லை, நான் நானாகவே இருக்க அனுமதிக்கின்றது.

நான் ஒரு பிரிட்டிஷ் என்பதிலும், முஸ்லிம் என்பதிலும் பெருமை கொள்கிறேன். எந்த வழியிலும் இவை இரண்டிற்குமிடையே முரண்பாடு இருப்பதாக நான் நினைத்ததில்லை.


அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனிற்கே....

பிரிட்டிஷ் கலாச்சார பின்னணியில் நம்மை வைத்து பார்த்தால் இந்த சகோதரிகள் கடந்து வந்த பாதை நமக்கு தெளிவாக புலப்படும்.

டைம்ஸ் ஆன்லைனின் இந்த பதிவில் என்னை திணறடித்தது அகீலா லிண்ட்சே வீலர் என்ற சகோதரியின் கருத்து.

"The first time I tried on the hijab, I remember sitting in front of the mirror, thinking, ‘What am I doing putting a piece of cloth over my head? I look crazy!’ Now I’d feel naked without it and only occasionally daydream about feeling the wind blow through my hair" - Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
முதலில் நான் ஹிஜாபை அணிந்த போது, கண்ணாடியை பார்த்து என்னையே கேட்டுக் கொள்வேன், "ஒரு துணியை என் தலையை சுற்றி கட்டுவதால் நான் என்ன பண்ணுகின்றேன்? I look Crazy!". ஆனால் இப்போதோ ஹிஜாப் அணியாமல் இருப்பதை நிர்வாணமாக இருப்பது போல உணர்கின்றேன் --- (extract from the original quote of) Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.

ஆக, எந்த ஹிஜாபை நோக்கி அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ, அதனை விரும்பி அணியும் பெண்களாகத் தான் இவர்கள் இருக்கின்றார்கள்.

இஸ்லாம் தங்களுக்கு மனநிறைவையும், பாதுகாப்பையும், திசையையும், உரிமைகளையும் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

ஒருபுறம், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, அடக்கியாள்கின்றது என்ற பிரச்சாரம். மறுபுறம், டைம்ஸ் இணையதளம் சொல்லுவது போல ஆயிரக்கணக்கில் இஸ்லாமிற்குள் நுழையும் சகோதரிகள்.

இஸ்லாமை நன்கு ஆராய்ந்து அதனுள் தங்களை இணைத்து கொண்டிருக்கும் சகோதரிகளின் கருத்து சரியா?, அல்லது, இஸ்லாமிற்கு வெளியே நின்று கொண்டு இஸ்லாம் பெண்களை இப்படி நடத்துகின்றது, அப்படி நடத்துகின்றது என்று கூப்பாடு போடுபவர்களின் கருத்து சரியா?

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

நன்றி : kattumavaditimes

Wednesday, 10 October 2012

Old Japanese man reverted to Islam in his last days, Allahu Akbar...

Old Japanese man reverted to Islam in his last days,
Allahu Akbar...
May Allah make our end in a good deed,Aameen...




Saturday, 29 September 2012

Youtupe User Converted To Islam

அமைச்சர் M.H.M.அஷ்ரப்f மரணத்தில் புதைந்து போன குளிர் மர்மங்கள். 

(உங்கள் நண்பர்களும் இதை வசிக்க SHARE பன்னுங்கள்)

மறைவிற்கு சில நாட்களுக்கு முன்..

"அக்டோபர் 11ம் திகதியன்று எமது ஆதரவின்றி ஜனாதிபதியால் அரசாங்கம் அமைக்க முடியாது. நாங்கள் ரணிலுடன் கூட்டுசேர விரும்பவில்லை... எமது கைகளில் தான் விஷயம் இருக்கிறது..." 

அஷ்ரப் இவ்வாறு கூறியது எதிர் வரும் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி எதிர்பார்ப்புடன் சந்திரிக்காவின் தலைமையில் உள்ள "பொதுஜன ஐக்கிய முன்னணி" அரசாங்கத்தில் கூட்டு சேர்த்து தனது கட்சியை வலுவான நிலைமைக்கு இட்டுச் செல்லும் நோக்கிலேயாகும். எனினும் தமது கட்சி உறுப்பினர்களுடன் இவ்வாறு பலமாக எழுந்து நின்ற அவரால் தனது எதிர்பார்புக்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனது. அரசியலில் இருந்து மற்றுமின்றி வாழ்க்கை பயனத்திலிருந்தும் அவரை ஓரம்கட்டுவதட்கு சில கொடிய சக்திகள் திட்டமிட்டிருந்தன. 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி வான்வெளியில் நடந்த ஓர் விபத்தில் அஷ்ரப் உயிர் துறந்தது அரசியல் உலகில் இன்னுமொரு மர்மத்தை மறைத்தவண்ணமே. 

மத்திய மலைநாட்டில் அரசியல் பலம் நிறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌம்யமூர்த்தி தொண்டமான் இலங்கையின் அரசியல் களத்தில் அரசாங்கம் அமைக்கும் காரணகர்த்தாவாக நெடுங்காலமாக வாகை சூடிக்கொண்டிருந்தார். இவரது கட்சியே அரசாங்கத்தை அமைக்கும் பெரிய கட்சியை தீர்மானித்தது. எனினும் காலத்தின் மாற்றத்தால் எம்.எச்.எம். அஷ்ரப் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்' இலங்கையின் அரசாங்கம் அமைக்கும் பெரிய கட்சியை தீர்மானிக்கும் பிரதான கட்சியாக உருமாறியது. 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபித்ததுக் காட்டியது. 2000ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதி நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் அஷ்ரபின் ஆதரவானது சந்திரிகா பண்டாரநாயகவிற்கு அரசாங்கம் அமைபதட்கு மிகவும் இன்றியமையாத காரணியாக காணப்பட்டது. காரணம் 1994இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்காவின் கட்சி அரசாங்கம் அமைத்தது பாராளுமன்றத்தில் மேலதிக ஓர் ஆசனத்தினாலேயாகும். முஸ்லிம் காங்கிரஸ் இவ்வரசாங்கத்திட்கு இணைந்ததனால் அஷ்ரப் துறைமுக புனர்நிர்மான மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் இன்னும் இரண்டு பிரதி அமைசுப் பதவிகளுக்கு மேலதிகமாக வேறு சில பதவிகளும் முஸ்லிம் காங்கிரசஸினை வந்தடைதன. இதற்கிடையில் அஷ்ரப் "ஜாதிக சமகி பெரமுன" எனும் கட்சியை உருவாக்கி அதற்கு சிங்கள, தமிழ் மக்களை உள்வங்கிக்கொண்டதனால் 2000ஆம் ஆண்டளவில் அவர் தேசிய மட்டத்தை தாண்டி தனது பலத்தை விஸ்தரித்திருந்தார். இதனால் 2000ஆம் ஆண்டு நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் சந்திரிகாவிற்கு அஷ்ரபின் ஆதரவு மிகவும் அத்தியவசியமனதொன்றகக் காணப்பட்டது. 

நிலைமை இவ்வாறிருக்க அஷ்ரப் தனது அரசியல் வாழ்கையில் ஓர் முக்கிய சிகரத்தை எட்டுவதற்கு ஆயத்தமாக இருந்தார். அதாவது அஷ்ரபின் அடுத்த கட்ட வெற்றியானது அவரை இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூகத்தின் தலைவராக மற்றுமின்றி ஓர் தேசிய அரசியல் தலைவராகவும் உருவெடுக்கவைக்கும் வெற்றியாகும். எனினும் இவர் அடையப்போகும் இம்மாபெரும் வெற்றியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த ஓர் சில முஸ்லிம் தலைமைகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு முன்னர் சுமார் ஒரு தசாப்த காலமாக அஷ்ரப் எதிர்ப்பு பேரணியொன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள்ளே காணப்பட்டது. 1988இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த முஸ்லிம் தலைமைகள் எதிர்த்தன. இதன் ஓர் விளைவாக சந்திரிக்காவின் அரசாங்கத்தில் ஆதிக்கம் நிறைந்த ஓர் முஸ்லிம் அமைச்சராகிய எ.எச்.எம்.பௌஸி தனது எதிர்ப்பை பகிரங்கமாக அறிவித்திருந்தார். 'ஜாதிக சமகி பெரமுன' தலைவராக அஷ்ரப் மற்றும் ஸ்ரீ.சு.க தலைமைகளுக்கும் இடையில் புரிதுணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடும் நோக்கில் கலந்துரையாடல் நடந்த 2000ஆம் ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் பௌஸி மற்றும் அஷ்ரப் இடையிலான மோதல் கொடிகட்டியிருன்தது. 

அமைச்சர் பதவியிலிருந்து அஷ்ரபினை நீக்குவதற்கும் அரசங்கத்தினுள்ளே சதி முயற்சிகள் இடம்பெற்றன. "முடியுமென்றால் அமைச்சர் பதவியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியிலிருந்தும் விலகி தனித்துப் போட்டியிட்டு 5 ஆசனகளுக்கு மேல் வெற்றிபெற்றுக் காட்டுங்கள். இச்சவாலை வெற்றிகொண்டால் நான் அரசியலில் இருந்து முற்றாக விலகிவிடுவேன்" என ஆகஸ்ட் 31ம் திகதி பௌஸி அஷ்ரபினை நோக்கி சவால் விடுத்தார். 

பௌஸி இச்சவாலை விடுக்கும்போது அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.பி.திசாநாயகவுடன் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய கலந்துரையாடலில் காணப்பட்டார்.

பௌஸியின் இக்கருத்து ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்தினால் பெரும் அசெளகரியன்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இதற்கிடையில் பௌஸி சவால்விட்ட அன்றே அஷ்ரப் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய இரண்டு பிரதி அமைச்சர்களினதும் இராஜினாமா கடிதங்கள் விரைவாக ஜனாதிபதியை வந்தடைந்தன. எனினும் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அஷ்ரபிடம் மண்ணிப்பு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இராஜினாமா கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 3ஆம் திகதி "ஜாதிக சமகி பெரமுன" மற்றும் "பொதுஜன ஐக்கிய முன்னணி" ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. 

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் அஷ்ரப் எதிர்ப்புப் பேரணி தொடர்ந்தும் காணப்பட்டது. இதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி மிக முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த சில சிங்கள அமைச்சர்களும் இருந்தனர். ஜனநாயகத்திற்கு பெருமதிப்பளிக்கும் தேசியத் தலைவராக அஷ்ரப் உருவாகிக்கொண்டிருந்ததனால் அவரால் முகம்கொடுக்க வேண்டியேட்பட்ட சவால்கள் சிறிதல்ல. ஜாதிக சமகி பெரமுன மூலம் ஹம்பந்தோட்டை பிரதேசத்திட்கு நியமிக்கப்பட்ட கட்சி அணித் தலைவர் கடத்தப்பட்டார். இக்கடத்தல் சம்பவத்திற்கு அப்பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும் தேர்தல் காலம் தொடங்கியதை அடுத்து அதிகரித்த வேலைப்பளுவுடன் அஷ்ரப் இச்சவால்களையெல்லாம் பின்தள்ளிவிட்டு தனது கட்சியின் வெற்றிக்காக நாடுமுழுவதும் ஓடி அலைந்தார். ஜாதிக சமகி பெரமுனவின் தேர்தல் கொள்கைகளின் வெளியீட்டு விழாவை அம்பாறையில் நடாத்த அஷ்ரப் தீர்மானித்திருந்தார். 

வான்வெளியில் விபத்து...,

அமைச்சர் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி காலை 9:30 மணியளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான (ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட) Mi-17 முக்கிய ரமுகர்களுக்கான ஹெலிகொப்டரில் கொழும்பு - பம்பலப்பிட்டி போலீஸ் மைதானத்தில் இருந்து அம்பாறை நோக்கி புறப்பட்டார். கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கிய வான் பயணப்பாதை கண்டி, ரந்தெனிகல, மஹா ஓய, இங்கினியாகல ஊடக அம்பாறை நோக்கியதாக இருந்தது. இது சுமார் 40 நிமிட பாயனப்பதையாகும். விமானப்படையை சேர்த்த கப்டன் சிரான் பெரேரா தலைமையில் ஹெலிகாப்டர் பயணத்தை துவங்கியது. கப்டன் சிரான் பெரேரா 7000 மணி நேர வான் பயணத்தை கடந்த சிறந்த அனுபவமுள்ள விமானபடை விமானி. 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 அடி உயரத்தில் ஹெலிகாப்ட்டர் சென்றுகொண்டிருக்கும் போது கப்டன் சிரான் பெரேரா இறுதியாக கட்டுநாயக இலங்கை விமானப்படை கட்டுபாட்டு கோபுரத்துடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். தான் கண்டிக்கு 15 நிமிட தொலைவில் இருப்பதாகவும் காலநிலை சீராக இருப்பதாகவும், பயணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் சில நிமிடங்கள் சென்று Mi-17 ஹெலிகப்டரிடம் இருந்து எந்த தொடர்பலைகளும் கிடைக்கவில்லை. கட்டுநாயக கட்டுப்பட்டு கோபுரத்துடனான தொடர்பும் முற்றாக துண்டிக்கப்பட்டு இருந்தது. 

இறுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 13 பேரின் சடலங்கள் ஊராகந்த, அரனாயக பகுதியில் உள்ள காட்டிலிருந்து கிராமவாசிகளால் மீட்கப்பட்டது.

• சீரற்ற காலநிலை, 
• ஹெலிகோப்டேரில் தொழிநுட்பக்கோளறு,
• மலைகள் நிறைந்த காட்டுப்பகுதி, 
• விடுதலை புலிகளின் ஏவுகணை தாக்குதல் 
என பலவகையான சந்தேகங்களுக்கு மத்தியில் இம் மர்மம் தொடர்ந்தும் மர்மமாகவே புதைத்து போனது.

*எனினும் இவ் விபத்துக்கு பின்னால் மறைந்து போன சில உண்மைகளும் இருக்கின்றன.

• பம்பலப்பிட்டி போலீஸ் மைதானத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகோப்டேரில் 13 பேர்தான் பயணித்தனர் என்பதற்கு பொருத்தமான ஆதாரம் எதுவும் கிடையாது. போலீஸ் அறிக்கையிலும், இராணுவ அறிக்கையிலும் சில முரண்பாடுகள் உள்ளன. இதன் படி இதில் 15 அல்லது 17 பேர் பயனித்திருக்கலம் என நம்பப்படுகின்றது. 

• கப்டன் சிரான் பெரேரா 7000 மணி நேர வான் பயணத்தை கடந்த இலங்கையின் திறமையான விமானி மற்றுமின்றி எந்த காலநிலையையும் சமாளித்து தரையிறக்கும் திறமை கொண்டவர்.

• விபத்து இடம்பெற்ற்ற பகுதியில் உள்ள கிராமவாசிகளின் கருத்துப்படி அப்பிரதேசத்தில் அவர்கள் ஹெலிகாப்டர்கள் பறப்பதை கண்டதேயில்லை. அப்பிரதேசம் ஹெலிகோப்டேர்களின் பயணப்பாதையிலும் இல்லை. 

• ஹெலிகாப்ட்டர் அப்பாதையை பயன்படுத்தியது இதுவே முதல் தடவை.
• ஹெலிகோப்டேரின் கருப்புப்பெட்டி விடயமும் சரிவர மேடைக்கு வரவில்லை.

• எல்லாவற்றிலும் முக்கிய விடயம் விபத்துக்குள்ளான ஹெலிகாப்ட்டர் ரஷியாவில் முக்கிய பிரமுகர்களுக்கென பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டது.
................................................................................

Thursday, 13 September 2012

இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒரு நீங்கா தடம் பதித்தவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்..!


இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒரு நீங்கா தடம் பதித்தவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்..!

இலங்கைவாழ் முஸ்லிம்களை பொறுத்தவரையில் செப்டம்பர் 16ஆம் நாள் மறக்க முடியாத தினமாகும். 1980களிற்கு முன்னர் பேரினவாத அரசியல் கட்சிகளை நம்பியிருந்த இலங்கைவாழ் முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுவதற்காக உருவாக்ககப்ட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இவ்வுலகினை விட்டு பிரிந்த தினமாகும்.
மிகவும் நீண்ட காலமாக இலங்கையில் புரையோடிப்போயுள்ள இன முரண்பாட்டினை தீர்த்து வைத்து அதனூடாக சமாதான பூமியாக இலங்கையை காண வேண்டும் இதுவே காலத்தின் தேவை என்ற எண்ணத்திலும் செயலிலும் ஈடுபட்டுவந்த ஓர் சமாதான பிரியர் மர்ஹும் அஷ்ரப் இவ்வுலகினை விட்டு பிரிந்து 12 வருடங்களாகின்றன.
விதானையான தகப்பனார் முகம்மது உசைன், தாய் மதீனா உம்மா அவர்களுக்கு மகனாக 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி கிழக்கிழங்கையில் உள்ள சம்மாந்துறையில் மூன்று சகோதரிகளுடன் பிறந்தார் அஷ்ரப். தனது வாழ்விடமாக கல்முனைக்குடியினை கொண்டிருந்து தனது ஆரம்ப கல்வியை கல்முனைக்குடி அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலை கல்வியை கல்முனை பத்திமா கல்லூரியிலும் உயர்கல்வியை கல்முனை வெஸ்லி கல்லூரியிலும் தொடர்ந்தார்.
தனது பாடசாலை வாழ்வில் இன, மத மற்றும் குல போதமின்றி அனைத்து மாணவ மாணவியர்களுடன் பழகிய இவர் பாடசாலையில் நடைபெறுகின்ற சகலவிதமான நிகழ்வுகளிலும் பங்குபற்றி தனது ஆற்றலை வெளிக்காட்டி வளர்த்தும் கொண்டதுடன் அவரின் பாடசாலை பருவ அனுபவங்கள் அவரின் அரசியல் மூலோட்டத்திற்கு பெரிதும் துணைபுரிந்தது.
தனது எண்ணம்போல் சட்டத்தரணியான அஷ்ரப் பேரியல் இஸ்மாயிலை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவ்விருவருக்கும் இடையில் ஓர் ஆண்மகனும் பிறந்தார்.
அஷ்ரபின் வரலாற்றினை எடுத்து பார்க்கும் போது இன்றுள்ள அரசியல்வாதிகளைப் போன்று வெறுமனே ஒரு துறையில் மட்டும் வைத்து அவரை பார்க்க முடியாது ஏனெனில் சிறந்த குடும்ப தலைவனாக, சிறந்த பேச்சாற்றல் வன்மையுள்ள சட்டத்தரணியாக, கவிஞனாக மற்றும் சிறந்த அரசியல்வாதி என பலதுறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தமையினால் அவை ஒவ்வொன்றையும் பார்ப்பதே சாலச் சிறந்தது.
தனது 12ஆம் வயதிலிந்து கவிதைகள், கதைகள் என இலக்கிய துறையில் நுழைந்த அஷ்ரப் தனது வாழ்வில் இரவு வேளைகளில் கவிதைகளை வடிப்பதிலேயே தனது பெரும் பகுதியை செலவிட்டார்.
 அவர் வடித்த முதலாவது கவிதை தாயை பற்றியதாகும்.
என்னைப் பெற்ற தாய்
ஏந்தலான தாய்
பத்து மாதம் சுமந்து
பாங்காய் வளர்க்கும் தாய்
காய்ச்சல் வரும் போதும்
கதறி அழும் தாய்
இக்கவிதை அவர் மரணித்த அதே தினத்தில் தேசிய முரசில் பிரசுரமானது. இவ்வாறு தனது கவிதைகளை காலத்திற்கு காலம் தேவைக்கேற்ப வெளியிட்ட அஷ்ரப், தனது சட்டக் கல்லூரி நண்பனான சிவபாலன் என்பவர் கேஸ்வெடித்து அகால மரணமான போது கல்முனை சவக்காலையில் அவர் பாடிய இரங்கற்பா அனைவரது மனங்களையும் குமுறவைத்தது.
அஷ்ரப் தனது வாழ்வில் எழுதிய கவிதைகள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து 600 பக்கங்களை கொண்ட “நான் எனும் நீ” கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இலங்கையில் மாத்திரமன்றி உலகில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உன்னத வரவேற்பினைப் பெற்ற நூலாக இன்றும் இக்கவிதைத் தொகுப்பு விளங்குகின்றது.
தனது எழுத்தாற்றலால் பல நூல்களை வெளியிட்டார். குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய வெளிச்சங்கள் எனும் பாடல் தொகுப்பு அவரால் இயற்றப்பட்டவையாகும். சிறந்த கவிஞனாக வாழ்ந்து காட்டிய அஷ்ரப் அதனை தனது வாழ்நாளின் இறுதிவரை முன்னெடுத்துச் சென்றார்.
மர்ஹும் அஷ்ரபின் சட்டத்தரணி வரலாற்றை எடுத்து நோக்கும் போது பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது சட்டத்துறை கல்வியை நிறைவு செய்தார். இளம் சட்டத்தரணியாக வளர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணியாக வளர்ச்சி பெற்று தனது கணீரென்ற பேச்சாற்றலாலும், வாதத் திறமையாலும் அத்தொழிலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவரது அரசியல் பிரவேசத்திற்கான உந்து சக்தியை சட்டக்கல்லூரி வாழ்க்கையே கொடுத்தது அத்துடன் அவர் இளம் வயதில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிடவும் சட்டக்கல்லூரி வாழ்க்கையே பெரிதும் உதவியது. இன்றும் கூட அவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சட்டத்துறை சமமந்தமான நூல் காணப்படுகின்றமை அவர் சிறந்த அரசியல்வாதி கவிஞன் என்பதைப் போன்று அவர் சிறந்த சட்ட வல்லுனர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.அஷ்ரபின் இலக்கிய சட்டத்துறை வரலாறு அவரது சிறப்பை தெளிவாக விளக்கினும் அவரது வரலாற்றுப் பயணத்தில் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுக்காக குறிப்பாக முஸ்லிம் மக்களின் அரசியல் விடிவிற்காக போராடிய தன்மை இன்னும் மறக்க முடியாத வரலாறாகவே உள்ளது.
சுரமும் சுரமும் ஒன்று சேர்ந்தால் கின்னரம் பாடும் என்பார்கள் அது போன்று தன்னிடமுள்ள பேச்சாற்றல், வாதத்திறன், இலக்கிய கலை ரசனை மற்றும் சட்டத்துறை வல்லுநர் என்பவற்றை இணைத்து இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக அரசியலை மேற்கொண்டதனால் இலங்கையின் அரசியலில் தடம் பதித்தார். இவரது அரசியல் பிரவேசமும், அரசியல் நடாத்துகையும் இலங்கைவாழ் அனைத்து மக்கள் மத்தியிலும் அவரை பிரபல்யப்படுத்தியது.
இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது அல்லது முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது நிச்சயமாக அஷ்ரபின் வரலாறு ஒரு தெளிவான வரலாறாக காணப்படுகின்றது. இலங்கைவாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக எவ்வித தனித்துவமுமின்றி இலங்கை சுதந்திரமடைந்தது முதல் நான்கு தசாப்தங்களாக பேரினவாத அரசுகளின் பின்னால் வாழ்ந்தும் சங்கமித்தும் இருந்தனர். இதனால் முஸ்லிம்களுக்கென எவ்வித தனித்துவமான அரசியல் இயக்கம் இலங்கையில் தடம் பதிக்கவில்லை. இந்நிலையில் 1976ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகும்.
1976ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாயலுக்குள் நுழைந்த காவல் படையினர் காட்டு மிராண்டித் தனமாக சுட்டதனால்; பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வு பற்றி நாடாளுமன்றத்தில் கதிரைகளில் ஒட்டியிருந்த எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் வாய்திறந்து பேசாது மௌனம் காத்தனர். இவ்வேளையில் அது பற்றி பேசிய ஒரே ஒருவர் தந்தை செல்வா மட்டுமே. இந்நிகழ்வு மர்ஹும் அஷ்ரபின் அரசியல் உணர்வில் மேலும் ஒரு உந்து சக்தியை கொடுத்தது.
பேரினவாதிகளின் கைகளை பிடித்துக் கொண்டு அரசியல் மேற்கொண்டால் முஸ்லிம்களின் அரசியல், எதிர்காலம் மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்பதினை தெளிவாக உணர்ந்த அஷ்ரப் தமிழ் பேசும் மக்களுக்காக அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களுக்காக அம்மக்களின் அரசியல் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தினை பல புத்திஜீவிகளுடன் ஒன்றிணைந்து 1981ல் தம்மை ஏக தலைவராக கொண்டு உருவாக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை பல பிரிவுகளும், பிரிவினைகளும் இக்கட்சிக்குள் வந்திடினும் மக்கள் மத்தியில் இது வேரோடியிருக்கின்றமை இக்கட்சியின் தேர்தல் முடிவுகள் தெளிவாக புடம் போட்டு காட்டுகின்றன.
அஷ்ரப் ஒரு குறுகிய மனித வர்க்கத்தை வைத்துக் கொண்டு தனது அரசியலை மேற்கொண்டார் முஸ்லிம் மக்களின் அரசியல் உணர்வினை கிள்ளி விட்டார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு விருட்சமாக வளர ஆரம்பித்தது. நள்ளிரவை தாண்டியும் மக்கள் மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டதுடன் ஈற்றில் வெற்றியும் கண்டதுடன் முஸ்லிம்களின் அரசியல் பயணத்தில் ஒரு தனித்துவ அரசியலையும் அடையாளப்படுத்தினார்.
1981-85வரை அம்பாறை, மட்டகளப்பு மாவட்ட கிராமங்கள் தோறும் முஸ்லிம் மக்களின் அரசியல் தனித்துவத்தை வலியுறுத்தியும் பேரினவாத கட்சிகளையும் அதன் முகவர்களையும் அம்பலப்படுத்தியும் தமிழ் மக்களுக்கெதிரான போக்குகளை விமர்சித்தும் பிரசாரங்கள் மெற்கொண்டார். அஷ்ரபின் அரசியல் வரலாற்றில் கல்முனையில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இனமுரண்பாடு அவரை கொழும்பு நோக்கி குடிபெயரச் செய்தது.
காலங்கள் கடந்தன கொழும்பில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் பல்வேறுவிதமாக சிந்தித்தார். சவூதியில் இருந்து வந்த எம்.ரி.ஹசன்அலி மற்றும் எம்.ஐ.எம். இஸ்மாயில் ஆகியோர் அஷ்ரபை சந்தித்து முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் இதில் மருதூர்கனியும் இணைந்து கொண்டார்.
முடிவாக 1986.11.29ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டு 1988.02.11ஆம் திகதி மரச்சின்னதுடன் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரையும் இவ்வியக்கம் முஸ்லிம்களின் அரசியல் குரலாக மிளிர்கின்றது.
1988ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் பல இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போட்டியிட்டு முழுமையான வெற்றியினை தட்டிக் கொண்டது. அது மட்டுமன்று 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 202,016 வாக்குகளை இலங்கை முழுவதிலும் பெற்ற இக்கட்சி நான்கு ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தது. இலங்கையின் வரலாற்றில் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனத்தில்; அமர்ந்து கொண்டு தனது மும்மொழி பேச்சாற்றலால் அனைவரினது கவனத்தையும் ஈர்த்தார். 1989ல் நாடாளுமன்றம் நுழைந்த அஷ்ரப் பேச்சாற்றலாலும் கனீரென்ற குரலினாலும் நாடாளுமன்றத்தையே அதிரவைத்தார்.; தமிழ் பேசும் மக்களின் சுய கௌரவத்திற்காக அன்றைய நாடாளுமன்ற ஆசனத்தை அஷ்ரப் பயன்படுத்திக் கொண்டார்.
இவரது அரசியல் சொல், செயல் வடிவம் கொண்டது 1994.03.01இல் கிழக்கில் பிரதேச சபை தேர்தல் இடம்பெற்றது. திகாமடுல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏதேனும் ஒரு பிரதேச சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியை தழுவுமானானல் தான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சபதம் கொண்டார். முடிவோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில பிரதேச சபைகளில் தோற்றது. அதனை அடுத்து அஷ்ரப் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
மர்ஹும் அஷ்ரப் அரசியலில் சாணக்கியம் மிக்கவர் 1994.07.01ல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாக்க குமாரத்துங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து அதற்கமைய அன்று நடைபெற்ற 16வது நாடாளுமன்ற தேர்தலில் 09 ஆசனங்களைப் பெற்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மையின கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மை ஆட்சியாளர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதினை நிரூபித்தார்.
இலங்கையின் அரசியலில் சேவையின் சிகரமாக திகழ்ந்தார்.; இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி இலங்கையர் என்ற அடிப்படையில் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் கிடைக்கப்பெற்ற சிறந்த அமைச்சு பதவியினூடாக சேவைகளை செய்தார். ஏழைகளின் இல்லங்களை நோக்கிச் சென்ற அஷ்ரப் அவர்களின் தேவைகளை பல வழிகளிலும் பூர்தி செய்தார்.
இலங்கைவாழ் முஸ்லிம்களின் கல்வி நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 23.10.1995 தனது முழு முயற்சியினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை உருவாக்கினார். இது போன்றே ஒலுவில் துறைமுகம் என்பதும் அவரது கனவாக இருந்தது.
தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு தொடர்பில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டவர். அண்ணன் அமிர்தலிங்கம் ஈழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவார் என்று கூறியிருந்தமை அக்காலத்தின் தேவையாக காணப்பட்டது. அதுபோன்றே தமிழ் இயக்கங்களை அனுசரிக்காத எந்தவொரு தீர்வும் தீர்வாகாது எனக் கூறியிருந்தமை அவர் ஒரு சமாதான பிரியர் என்பதை சுட்டுகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாத கட்சி என பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் கருத்துக்கள் தெரிவித்தனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருந்தே தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஆரம்பித்தார் அது மட்டுமன்றி சிங்கள இனத்தவரான அசித்த பெரேரா என்பவருக்கு நாடாளுமன்ற ஆசனத்தை வழங்கி தான் ஒரு இனவாதியல்ல என்பதை நிரூபித்தும் காட்டினார். அஷ்ரபின் மரணத்தை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட பிளவுகளும், சர்ச்சைகளும் அஷ்ரபின் இலட்சிய பயணத்தை தெடர்வதற்கு தடைக்கற்கற்களாக அமைந்தது.
அஷ்ரப் சிறந்ததொரு மனிதராக அனைத்து விடயங்களிலும் விளங்கி புரட்சியை ஏற்படுத்தியுள்ளர். இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் வரலாற்றை கற்பதற்கு அஷ்ரபின் வரலாறு காலத்தின் தேவையாகும்.
அஷ்ரபினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்ததினைத் தொடர்ந்து பிரதேசவாரியாகவும், தனிப்பட்ட விறுப்பு வெறுப்புக்களுடனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் பல சிதறல்களாக சிதறியும், சுகபோக அரசியலின் பின்னாலும் சென்று கொண்டிருப்பதைக் காணலாம். கொட்டும் மழையிலும் வாட்டும் வெயிலிலும் கடற்கரை வீதிகளில் மக்களை ஒன்று சேர்ந்து ஊர் ஊராக சென்றும் தாய்மார்களின் குலவை வாழ்த்துக்களாலும் வளர்த்தெடுக்டகப்பட்ட இக்கட்சி இன்றும் குழந்தை வடிவத்திலேயே தவழ்ந்து செல்வதனை காணலாம்.
இருந்தபோதிலும் மக்கள் மனதில் மாறாத நினைவாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது இதற்கு அஷ்ரப் போட்ட அடித்தளமே காரணம் என்றால் மிகையாகாது. இன்று அஷ்ரப் உலகை விட்டு பிரிந்து 12வருடங்கள் ஆனாலும் மக்கள் உள்ளங்களில் அஷ்ரப் என்ற ஒரு தலைவனுக்கு என்றுமே சந்ததி சந்ததியாக நீங்கா நினைவலைகள் நிலைத்திருக்கும்.
இலங்கையில் வாழ்கின்ற குறிப்பாக வட கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல் செய்வதை விடுத்து அனைவரும் ஒரு அணியில் ஒன்று சேர்நது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுப்பதே மர்ஹும் அஷ்ரபிற்கு செய்யும் மாபெரும் கைமாறாகும் இல்லையெனில் அன்று அஷரப் சொன்னதைப் பொன்று கிளிக்குஞ்சுகளாக அரசாங்கங்களின் பின்னால் இருக்க வேண்டிவரும் என்பதே யதார்த்தமாகும்.
யா அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக!!!