Wednesday, 2 May 2018

மூஸா அலைஹிஸ்ஸலாம்

                             
           
                       

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 3200 வருடங்களுக்கு முன் எகிப்தில் பிறந்தார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் இஸ்ராயில் என்ற வம்சத்தில் பிறக்கின்ற எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்ய உத்திரவிட்ட காலத்தில்தான் அவர் பிறந்தார். மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பிறந்தவுடன் அவரைப் பெட்டியில் வைத்து நைல்நதியில் விட்டுவிடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். நைல்நதியில் மிதந்து வந்த பெட்டியில் உள்ள குழந்தையை ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா கண்டெடுத்து ஃபிர்அவ்னின் அரண்மனைக்கு கொண்டு சென்றார். அக்குழந்தை இஸ்ராயில் வம்சத்தை சார்ந்ததினால் அக்குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்தான். ஆனால் தன் மனைவி ஆசியாவின் நிர்பந்தத்திற்க்கு இணங்கி அக்குழந்தையை கொல்லாமல் விட்டுவிட்டான். அக்குழந்தைக்கு பால் கொடுப்பதற்க்காக செவிலித்தாய் என்ற முறையில் ஃபிர்அவ்னுக்கு தெரியாமல் அதன் சொந்த தாயிடம் ஒப்படைத்தார்கள். மூஸா அலைஹி வஸ்ஸலாம் ஃபிர்அவ்னின் அரண்மனையிலே வளர்ந்து வாலிபம் அடைந்தார். ஓரு அக்கிரமக்காரனின் கொடுமையிலிருந்து அப்பாவியான இஸ்ரவேலரை காப்பதற்க்காக மூஸா அவனை தாக்கிய போது அவன் இறந்து விடுகிறான். அவனை கொலை செய்வது மூஸாவின் நோக்கமல்ல. ஆனால் கொலைப் பழி அவர்மீது சாட்டப்பட்டதால் ஃபிர்அவ்னின் ஆட்கள் அவரை தேட ஆரம்பித்தனர். இதை அறிந்ததும் அவர் அந்த இடத்தைவிட்டு தப்பி சென்றுவிட்டார். சினாய் மலைப்பகுதிகளையும், பாலைவனங்களையும் கடந்து பல மைல் தூரம் தனித்து நடந்து மதியன் இடத்தை அடைந்தார்.

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.

ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார். அல்குர்ஆன் 28:23-24
the place where the damsels watering their flocks

ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டிய இடம்.
 the shade where the Prophet Moosa took rest.

மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஓய்வெடுத்த இடம்.

இங்கு ஓய்வெடுக்கும் போதுதான் அப்பெண்களில் ஒரு பெண் சிறிது வெட்க்கத்துடன் வந்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்து உதவியதற்க்கு கூலி கொடுக்க எங்கள் தந்தை அழைக்கிறார் என்று கூறினார். அந்த தந்தை ஸுஐப் அலைஹி வஸ்ஸலாம் ஆவார்கள். ஸுஐப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் மகள்களில் ஒருவரை பத்து ஆண்டுகள் ஆடு மேய்த்து திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின்படி திருமணம் செய்து கொடுத்தார்கள். அதற்க்குபின் பத்து ஆண்டுகள் மத்யனில் வாழ்ந்த பிறகு மனைவியை அழைத்துக் கொண்டு மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு இப்பொழுது எகிப்த்தை சார்ந்த தெற்க்கு சினாயில் உள்ள துவா பள்ளத்தாக்கிற்க்கு வந்து சேர்ந்தார்.
The valley of Thua

துவா பள்ளத்தாக்கு

இரவில் அந்த இருளில் அல்லாஹ் அவரிடம் நேரில் பேசினான். அதற்க்கு பிறகு நேர்ந்த சம்பவங்களை குர்ஆனில் அல்லாஹ் விவரிக்கிறான்.

“நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

இன்னும் “நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.

“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:12-14
Holy Catherine Church

துவா பள்ளத்தாக்கில் கி.பி.330ல் கான்ஸ்டன்டைன் என்ற கிருத்துவ அரசன் நிர்மானித்து கி.பி.530ல் ஜஸ்டினிய மன்னரின் உத்தரவின்பேரில் விரிவு செய்யப்பட்ட புனித கேதரின் என்ற கிருத்துவ மடம்தான் இது.

மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் நீண்டதொரு உரையாடலை நிகழ்த்தியது ஒரு மரத்திற்க்கு அருகிலிருந்துதான்.

அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார். அல்குர்ஆன் 28:30

அல்லாஹ்வின் பேரொளி எழுந்த இடத்தில் இருந்த அந்த மரத்தின் தொடர்ச்சியாக ஒரு மரத்தை இப்பொழுதும் காணலாம். நெருப்பின் ஜுவாலைகள் வெளிப்பட்டதால் இந்த மரம் பர்னிங் புஸ்(Burning Bush) என்று பெயர் பெற்றது (படம் 8a)
Burning Bush

No comments: