அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாக...ஆமின்...
யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.
மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...
இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்
யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).
இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.
1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.
அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...
"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"
"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப் போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது...
நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.
முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா
ஆம்...
ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.
முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன்.
இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.
இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.
இதுதான் நான் எதிர்பார்த்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான்.
ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம்.
பல கேள்விகள்...
நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"
கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.
"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்.
பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திரித்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...
என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...
எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....
இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..
ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்...
பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா?
இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...
என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?
என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா?
இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன்.
இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...
சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.
கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...
உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன்.
பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார்,
நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...
நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அது.
மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.
கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.
எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...
ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...
அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...
என்ன?
ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...
இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்..
என் மனைவி என்னை நம்பவில்லை.
ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...
நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார்.
சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன்.
இறைவா எனக்கு நல்வழி காட்டு....
இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுப்ஹானல்லாஹ்...
என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன்.
நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான்.
dad,..... அப்போ நீங்கள்?
இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.
பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...
எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்?
நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம்,
நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது?
அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்...
அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."
சுப்ஹானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."
யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர்.
இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில் பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.
இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்
இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...
இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
No comments:
Post a Comment