அன்பின் இஸ்லாமிய சகோரர்களே! சகோதரிகளே!
பொதுவாக முஸ்லிம்கள் தமது நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளில் பிறை தொடர்பாக ஊருக்கு ஊர் பிறை பார்க்கவேண்டும், நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும், இஸ்லாமிய கலண்டர் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் செயற்பட வேண்டும் அல்லது முழு உலகிற்கும் ஒரு பிறை பார்த்தால் போதும் என்பது போன்ற நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றார்கள்.
இவைகளில் நாம் உலகில் ஒரு இடத்தில் பிறை கண்டால் முழு உலகும் அதைக்கடைப்பிடிக்க வேண்டும் என்ற (சர்வதேசப்பிறை) நிலப்பாட்டையே பின்வரும் காரணங்களால் அவசியம் தெரிவு செய்ய வேண்டும்.
1.அல்குர் ஆனும், அஸ்ஸுன்னாவும் சர்வதேசப்பிறையையே அதிகம் வலியுறுத்துவது.
2.சர்வதேசப்பிறையே அறிவுபூர்வமானதும் நடைமுறைச்சாத்தியமானதும் சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்க கூடியதாகவும் இருக்கின்றது.
3.பிறையை எமக்குத் தீர்மானித்து தரும் பிறைக்கொமிட்டியினர் தொடர்ச்சியாக மோசடிகளில் ஈடுபட்டு அவர்களின் நம்பகத்தன்மையை இழந்தமையும்.
1.சர்வதேசப்பிறை தொடர்பான அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆதாரங்கள்:.
இன்றைய நடைமுறையில் உள்ளது போல் இஸ்லாமிய அடிப்படையில் ஒரு வருடத்தின் மாதங்கள் பன்னிரன்டுதான் என அல்குர் ஆனின் பின்வரும் வசனம் உறுதி செய்கிறது.
” நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் என்னிக்கை 12களாகும். இவை அல்லாஹ்வின் நியதியில் அவன் வானங்கள், பூமியயை படைத்த நாள்முதல் இருந்து வர்கின்றன.”(அல்குர்ஆன்)
அவ்வாறே ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் என்பதை பின்வரும் நபி மொழி தெளிவு படுத்துகிறது.
“நாங்கள் எழுதாத, கணக்கை பயன்படுத்தாத உம்மி சமூகமாவோம். எனவே மாதம் என்பது ஒன்றில் இருபத்தொன்பது நாட்களாகும், அல்லது முப்பது நாட்களாகும்” என நபியவர்கள் விரல்களினால் சைகை செய்தார்கள்.”அறிவிப்பளர்: இப்னு உமர் ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்.
மேற்படி நபிமொழி மாதம் என்பது இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்கள் என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஒருபோதும் இருபத்தெட்டு ஆகவோ முப்பத்தொன்று ஆகவோ இருக்க முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றது. எனவே அதனடிப்படையில் மாதத்தின் முதல் நாளை எவ்வாறு தீர்மானிப்பது என்பது தொடர்பான ஆதாரங்களை கவனிப்போம். ரமளான் மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பது தொடர்பாக இஸ்லாம் மூன்றே மூன்று வழிகளை மாத்திரம் காட்டித்தந்துள்ளது.
1.(29ம் நாளில்) பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோட்பது பிறையை கண்ணால் கண்டு நோன்பை விடுவது.
” பிறையை கண்டே நோன்பு வைய்யுங்கள், பிறையை கண்டே நோன்பை விடுங்கள்.” அறிவிப்பளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: புஹாரி
2.(29ம் நாளில்) பிறையை காணாவிட்டால் கண்டதாக வருகின்ற இரு சாட்சிகளின் தகவல்களை ஏற்றுக்கொள்ளல்.
”இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள், நோன்பை விடுங்கள்.” அறிவிப்பளர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழ்ர்களிடமிருந்து)ஆதாரம்:அஹ்மத் நஸ்ஈ
3.(இருபத்தொன்பதாம் நாளில்) நாம் பிறையை கானவில்லை, கண்டதான சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்ற நிலையிருந்தால் குறித்த மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்துவிட்டு, பிறை பார்க்காமல், சாட்சியங்களை எதிபார்க்காமல், முப்பதாம் நாளை அடுத்த மாதத்தின் முதல் நாளாக கொள்வது.
”மேகத்தால் உங்களுக்கு பிறை மறைக்கப்பட்டால் (மாதத்தை) முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள்.”
அறிவிப்பளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: புஹாரி
எனவே மேற்கூறப்பட்ட மூன்று அடிப்படைகளையும் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்பவர்களும் சரி அல்லது சர்வதேசப்பிறை அடிப்படையில் செயற்படுபவர்களும் சரி எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால்“இரு சாட்சியங்களின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்வது” என்ற விடயத்தில்தான் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்பவர்க்ளுக்கும் சர்வதேசப்பிறை பார்ப்பவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடு தோன்றுகிறது.
மேற்படி இரு சாட்சியங்களும் முஸ்லிம்களாக, நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டுமென்று மாத்திரம் நபிமொழிகள் வலியுறுத்த நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பவர்கள் குறித்த நாட்டுக்குள் அவர்கள் இருக்க வேண்டுமென்று மூன்றாவது ஒரு நிபந்தனையையும் எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இல்லாமல் முடித்து விடுகின்றார்கள். அதாவது நபி (ஸல்) அவர்கள்” இரு நீதமான முச்லிம்களின் சாட்சியம்” என பொதுவாக கூறியிருக்க அவ்விருவரும் எங்கள் நாட்டுக்குள் இருந்தால்தான் ஏற்றுக்கொள்வோம், வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் முஸ்லிம்களாக நீதமானவர்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அடம் பிடிக்கின்றார்கள்.
சர்வதேசப்பிறை அடிப்படையில் செயற்படும் நாம் என்ன கூறுகிறோம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியது போல் இரு நீதமான முஸ்லிம்களின் சாட்சியத்தை அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சரி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். நபி (ஸல்)அவர்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்து வந்த சாட்சியங்களையும் ஏற்றுள்ளார்கள் என பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்திகிறது.
”ரமளான் மாதத்தின் முப்பதாம் நாளில் மக்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்பொழுது இரு கிராமப்புற காட்டரபிகள் வந்து அல்லஹ்மீது ஆனையிட்டு நாங்கள் நேற்று இரவு பிறை கண்டதாக நபி (ஸல்)அவர்களிடம் சாட்சி கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (அதை ஏறுக்கொண்டு) மக்களை நோன்பை விடும்படி ஏவினார்கள்” அறிவிப்பளர் : இப்னு ஹர்ராஸ் (நபித்தோழரிடமிருந்து)
ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்
எனவே அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் உலகில் எங்கு பிறை கண்டாலும் சாட்சியங்கள் அடிப்படையில் அதனை ஏற்று செயற்படுவதே சரியானதாகும். நாட்டுக்கு நாடு பிறை பார்ப்பதற்கு அல்குர் ஆன், அல்ஹதீஸில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபிக்கப் படுகின்றது.
2.சர்வதேசப்பிறையே அறிவுபூர்வமானதும்:நடைமுறைச்சாத்தியமானதும் சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கக்கூடியதுமாகும்:
ஆம், வெளிநாட்டில் உள்ள நீதமான முஸ்லிம்களின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதே அறிவு பூர்வமான விடயமாகும். உதாரணமாக வெளிநாட்டில் உள்ள ஒருவர் இறந்துவிட்டார் என்ற தகவலை ஏற்று அவருடைய மனைவி இத்தா இருக்கின்றார் என்பதப் பார்க்கின்றோம். உள்நாட்டு சாட்சியத்தை மாத்திரம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்கள் கூட இந்த விடயத்தில் இவ்வாறு நடப்பது முரண்பாட்டை காட்டுகிறதல்லவா?
அது மாத்திரமல்ல, நாட்டுக்கு நாடுதான் பிறை பார்க்க வேண்டு மென்பது பகுத்தறிவிற்கு முற்றிலும் முரணான் வாதமாகும். இதை விளங்கிகொள்ள பெரிதாக அல்குர் ஆன், அல்ஹதீஸை ஆய்வு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரமான ஒவ்வொரு முஸ்லிமாலும் இதனைப்புரிந்து கொள்ளமுடியும்.
நாடுகளின் வரையறையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ ஏற்படுத்தவில்லை. அவை மனிதனாலும் அரசியற் காரணிகளாலும் உருவானவை. நாடுகள் சில ஒரு நாடாக மாறவும் கூடும். அதேபோல ஒரு நாடு பல நாடுகளாக பிரியவும் சாத்தியமுண்டு. எனவே, நாடுகள் பிரியும்போதும் சேரும்போதும் அல்லாஹ்வின் சட்டம் வேறுபடும் என்று யாராவது கூறமுடியுமா?
எமது நாட்டையே எடுத்துக்கொள்வோம். தற்போது முழு இலங்கைக்கும் ஒரு பிறை பார்க்க வேண்டுமென்று வாதிடுபவர்கள் தப்பித் தவறி அரசாங்கம் புலிகளுக்கு ஈழ நாட்டை கொடுத்து விட்டால் ஒரு பிறை பார்ப்பதா? இரு வேறு பிறைகள் பார்க்கவேண்டுமா?
இரு பிறைகள் என்றால் அது அறிவுபூர்வமான வாதமா? அல்லது ஒரு பிறைதான் என்றால் நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்ற வாதம் நொருங்கிவிடுமல்லவா? எனவே நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பது அல்குர் ஆன், அல்ஹதீஸுக்கு முரணான வாதம் மட்டுமல்ல மனித அறிவிக்கும் முரணாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் சுமார் ஐம்பது கி.மீ தொலைவிலுள்ள இந்தியாவின் கீழக்கரையில் பிறை கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடாது அனால், சுமார் நானூறு கி.மீ தொலைவிலுள்ள மாத்தறையில் பிறை கண்டால் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது எவ்வளவு பகுத்தறிவுக்கு முரணான வாதம்?அது மாத்திரமல்ல, சர்வதேசக்கடற்பரப்பில் பயணிக்கின்ற ஒருவர் எந்த நாட்டின் பிறை அடிப்படையில் நேன்பு நோட்க வேண்டும்?
உதாரணமாக, இந்தியாவில் பிறை கண்டு இலங்கையில் பிறை காணவில்லை என்று வைத்துக்கொள்வோம், இலங்கை இந்தியாவிற் கிடையில் உள்ள கடற்பரப்பில் பயணம் செய்யும் ஒருவர் இந்திய பிறை அடிப்படையில் நோன்பு நோட்பதா? அல்லது இலங்கையில் பிறை தென்படவில்லை என்று நோன்பு வைக்காமல் விடுவதா?
எனவே நாட்டுக்கு நாடு பிறை என்ற வாதம் அறிவுக்கு முரணானதென்பதயும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்; உலகில் ஓரிடத்தில் பார்க்கின்ற பிறையைக் கொண்டு உலக முஸ்லிம்கள் அனைவரும் செயற்பட வேண்டும் என்கின்ற “ச்ர்வதேசப்பிறை” ஒரு நடைமுறச்சாத்தியமான விடயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் எப்போது ஒரு பகுதிக்கு பகலாகவும் ஒரு பகுதி இரவாகவும் இருக்கும். எனவே ஒருபகுதிக்கும் அதற்கு நேர் எதிரே இருக்கின்ற பகுதிக்கும் இடையே உள்ள கால வித்தியாசம் ஆக கூடியது 12 மனித்தியாலங்கலாக இருக்கும்.
உதாரணமாக:- இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை ஏழு முப்பது மணி என்றால் கலிபோனியாவில் வெள்ளிக்கிழமை காலை ஏழு முப்பது ஆக இருக்கும். எனவே இப்போது இலங்கையில் பிறை கண்டால் அது சனிக்கிழமை ரம்ழான் மாதத்தின் முதற்பிறை என்கின்ற படியால் கலிபோனியாவில் உள்ளவர்கள் வெள்ளி இரவு ஸஹர் செய்து சனிக்கிழமை முதல் நோன்பை பிடிப்பார்கள்.
ஆனால், மேற்கு நாடுகளில் முதற்பிறை தென்பட்டால் கீழத்தேய நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது.
அதாவது, கலிபோர்னியாவில் பிறை கண்டதாக அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஏழு முப்பது மனிக்கு அறிவித்தார்களென்றால் நாம் சனி காலை ஏழு முப்பது மனியில் இருப்போம். கலிபோனியாவில் கண்ட பிறை சனிக்கிழமை முதல் நோன்பு என்பதைக்காட்டியதால் சனி காலை ஏழு முப்பது மனியில் இருக்கின்ற நாம் தகவல் கிடைத்த நேரத்தில் இருந்து நோன்பை நோற்க வேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த பின்வரும் சம்பவம் ஆதாரமாகும்.
ரமளான் நோன்பு கடமையாக்க படுவதற்கு முன்பு ஆஷுரா நோன்பு கடமையாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையானதன் பின்னால் அஷுரா நோன்பு விரும்பியவர் நோற்கல்லாம் விரும்பியவர் விட்டு விடலாம் என்று ஆக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது முஹர்ரம் பத்தாம் நாள் யூதர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கக் கண்டு அந்த நாள் ஆஷுரா என தெரிந்து அன்று காலையுணவை சாப்பிட்டார்கள், அப்படியே நோன்பு வக்கும் படியும் சாப்பிடாதவர்கள் அந்த நேரத்தில் இருந்து மீதமுள்ள நேரத்தில் (மாலை வரை) “நோன்பு நோற்கும் படியும் ஏவினார்கள்” இதற்கான ஆதாரங்களை புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் ஆஷுரா என்ற பாடத்தில் பார்க்கலாம்.
எனவே நபி(ஸல்) அவர்கள் ஒரு கடமையான நோன்பை தனக்கு தகவல் தெரிந்த நேரத்தில் இருந்து நோற்று மக்களையும் நோற்கும்படி ஏவியதன் அடிப்படையில் எமக்கு குறித்த நாள் நோன்பு என்று தகவல் கிடைத்தது முதல் நோன்பு நோற்பது கடமையாகும்.
அகவே, ஆகக்கூடுதலான 12 மனி வித்தியாசத்திலேயே பிறைத்தகவலை ஏற்று நோன்பு நோற்பது சாத்தியமாக இருக்கும்போது அதற்குக் குறைவான நேரங்களில் ஏற்படும் வித்தியாசத்தில் நோன்பு நோற்பது மிகவும் சாத்தியமான ஒன்றாகும். எனவே உலகில் ஓரிடத்தில் பிறை கண்டால் அதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுச்செயல்படுவதே நடைமுறைச்சாத்தியமானதாகும் என்பது தெளிவாகின்றது.
ஆனால், நாட்டுக்கு நாடு பிறை பார்த்தல் என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லாத விடயமாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக, கரிபியன் தீவுகள், ட்ரிலிடாட், குயானா அகிய நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 6 மாதங்களை மழைகாலமாக கொண்டிருப்பவர்கள் நாட்டுக்கு நாடு பிறை என்ற அடிப்படையில் 4 மாதங்கள் தொடர்ச்சியாக முப்பது முப்பதாக பூர்த்தி செய்துவிட்டு ரமளான் மாதத்தை ஆரம்பிப்பார்களானால் ரமளான் மாத்தத்தின் முடிவைக்காட்டும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை ரம்ளான் மாதத்தின் 27ல் அல்லது 28லேயே தென்பட்டுவிடும். மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள்தான் என்று நாம் ஆரம்பித்தில் கூறியுள்ள நபிமொழிக்கு இது முரண்படுவதால் இம்மக்கள் வெளிநாட்டவரின் பிறையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
எனவே, நாட்டுக்கு நாடு பிறைபார்த்தல் என்பது எமது நாட்டுக்கு சாத்தியம் சில நாடுகளுக்கு சாத்தியமில்லை என்பதிலிருந்து அது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்பதனை புரிந்து கொள்வதுடன் அசாத்தியமான விடயங்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் மார்க்கமாகாது என்பதனையும் விளங்க வேண்டும்.
சில பாமரர்கள் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நேரத்திலா தொழுகிறார்கள்? தொழுகை நேரங்கள் வித்தியாசப்படுவது போல பெருநாள் போன்றவையும் வித்தியாசப்படவேண்டும் தானே என்று கேள்வி கேற்கின்றனர். இக்கேள்வி அடிப்படையிலேயே தவறாகும். காரணம் நாம் ம்ஃரிப் தொழுவதென்றால் சூரியன் மறைய வேண்டுமென்றுதான் நபி மொழி கூறுகின்றதே தவிர சூரியன் மறந்ததாக இரு முஸ்லிம்கள் சாட்சி சொன்னால் அதனடிப்படையில் தொழுங்கள் என்று கூறவில்லை.
அனால், பிறை விடயத்தில் பிறை கண்டால் நோன்பு பிடியுங்கள் என்று மாத்திரம் கூறாமல் இரு நீதமான முஸ்லிம்கள் அவர்கள் (எந்த நாட்டவராக இருந்தாலும்) பிறை கண்டதாக தெரிவித்தால் நோன்பு பிடியுங்கள் என்றும் நபி மொழி கூறுவதால் தொழுகைக்கும் நோன்பிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பவர்களின் வாதத்தின் படியே பார்த்தாலும் காத்தான் குடி மக்களாகிய நாம் எல்லா வருடங்களும் காத்தான்குடியில் கண்டுதான் நோன்பு பிடிக்கின்றோமா? பிறை கண்டுதான் நோன்பை விடுகின்றோமா?
இல்லை, மாறாக கிண்ணியாவில் பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு அத்தகவல் வானொலி மூலம் அறிவிக்கப்பட்டால் நோன்பு நோற்கிறோம் நோன்பை விடுகிறோம் அவ்வாறே கென்னியாவில் பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு அத்தகவல் தொலை பேசியூடாக அறிவிக்கப்பட்டாலும் கூட அதை ஏற்று செயத்பட வேண்டும் என்றுதான் நாம் கூறுன்றோமே தவிர, பிறை காணப்படாவிட்டாலும் நோன்பு பிடிக்க வேண்டுமென்று ஒரு போதும் கூறவில்லை.
அவ்வாறே சர்வதேசப்பிறையானது முழு உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வழிவகுக்ககூடையதும், கண்டத்திற்கு ஒரு பிறை, நாட்டுக்கு ஒரு பிறை, ஊருக்கு ஒரு பிறை, மத்ஹபுகளுக்கு ஒரு பிறை, தரீக்காவிற்கு ஒரு பிறை என்று அனைத்து வேறுபாடுகளையும் களையக்கூடியதாகவும் உலகமே ஒரு கிராமம் போல் ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை பிரகடணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
3.பிறை விடயத்தில் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவும் அதன் பிறைக்குழுவும் தொடர்ந்தும் மோசடிகள் செய்து வருவது:
நாட்டுக்கு நாடு பிறை பார்த்தல் என்ற அடிப்படையில் நோன்பு, நெருநாள் இபாத்தத்களை நிறைவேற்றிவருவதாக நினத்திருக்கும் நீங்கள் உண்மையிலேயே இலங்கை பிறையின் அடிப்படையில் நோன்பு பிடிப்பதும் இல்லை, பெருநாள் கொண்டாடுவதும் இல்லை.
மாறாக ஜமிய்யதுல் உலமாவின் பிறைக்குழுவும், பெரிய பள்ளிவாயல் நிருவாகமும் பிறை கண்டாலும் சரி, பிறை காணாவிட்டாலும் சரி அவர்கள் இச்சைக்கு ஏற்ப எப்போது நோன்பு என்று அறிவிக்கின்றார்களோ அப்போது நோன்பு நோற்கின்றீர்கள். எப்போது பெருநாள் என்று அறிவிக்கின்றார்களோ அப்போது பெருநாள் கொண்டாடுகின்றீர்கள். இந்த மோசடி நம்பிக்கை துரோகம் ஓரிரு வருடங்களாக அன்றி ஐந்தாறு வருடங்களாக தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
இத்தகவல் உங்களை திடுக்கிட செய்யலாம். உண்மை கசப்பாக இருந்தாலும் அதை எத்தி வைப்பது எமது பணி என்பதால் இங்கு ஆதாரத்துடன் விளக்குகிறோம்.
2005ம் ஆண்டு இலங்கையில் கண்ட பிறையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு புதன், வியாழன், வெள்ளி அகிய மூன்று தினங்களிலும் இல்ங்கை மக்கள் பெருநாள் கொண்டாடினர். இதில் ஜமிய்யதுல் உலமாவில் உள்ள சில உலமாக்கள் கூட பிறைக் குழுவால் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பெருநாள் கொண்டாடினர்.
ஆனால் நமது பிரதேச மக்கள் நோன்பு நாளில் நோன்பு பிடிக்காமல் இருப்பதற்கும், பெருநாள் தினத்தில் நோன்பு பிடிப்பதற்கும், பெருநாள் இல்லாத தினத்தில் பெருநாள் கொண்டாடுவதற்கும் தவறாக வழிநடாத்தப்பட்டனர்.
இவைகளுக்கான அடிப்படைக்காரணம் என்ன?
அல்குர் ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் ஏன் மத்ஹபுகளில் கூட ஒதுக்கப்பட்ட வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து முதல் நாள் பேருவலை முஸ்லிம்கள் கண்ட பிறை நிராகரிக்கப்பட்டது. எனவே குர் ஆன், ஹதீஸுக்கு முரணான வான சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் நோன்பு மற்றும் பெருநாள் தீர்மானிக்கப்படுகிறதே பிறை பார்த்தல் அடிப்படையில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்தோடு இது தொடர்பாக மாற்றுக்கருத்துள்ளவர்களுடன் அவர்கள் யாராக இருந்தாலும் என்றும் எப்போதும் அல்குர் ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ, கல்ந்துரையாடவோ தேவை ஏற்படின் ஒரு பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்ளவோ எமது நிருவன உலமாக்கள் தயாராக உள்ளனர்.
அல்லாஹ் எம்மனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாக காட்டி அதைப்பின்பற்றுகின்ற பாக்கியத்தையும் அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி அதை தவிர்ந்து நடக்கின்ற பாக்கியத்தையும் தந்தருள்வானாக!
“எமது கடமை தெளிவாக சொல்வதே அன்றி வேறில்லை” (அல்குர் ஆன்)