Friday 9 May 2014

இலங்கையில் நடப்பது என்ன..? – ஒரு புற நிலைப் பார்வை


(பின் ஆதம்)

இன்று இலங்கையில் துவங்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் போர் வெறுமனே பௌத்த இனத்தைப் பாதுகாப்பதற்கான போர் அல்ல. தனது கையாலேயே தனது தலையில் மண்ணை வாரி அள்ளிக் கொட்டிக் கொள்ளும் ஒரு பேரினவாத அவலம் இன்று ஆரம்பித்திருக்கின்றது.
இஸ்லாம் நசுக்கப்பட்ட போதெல்லாம் அது முன்னரை விடப் பல மடங்கு தேடப்பட்டிருக்கின்றதுஇ அறியப்பட்டிருக்கின்றது பலம் பெற்றிருக்கின்றது. இது உலகெங்கணும் நாம் காணுகின்ற யாதார்த்தம். இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்பதற்கு வேறொரு நியாயத்தைத் தேடத் தேவையில்லை.

இலங்கைத் திரு நாட்டைக் கூறுபோட்டு (கொரியாவைப் போன்று) இரு முனைவு அரசுகளை உருவாக்கி வங்காள விரிகுடாவை தனது வல்லாதிக்கத்தின் கீழ் வைத்திருக்க மேற்கொள்ளப்படும் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் பல் அரங்க அரங்கேற்றத்தின் ஒரு காட்சியையே நாம் இங்கு கண்டுகொண்டிருக்கின்றோம்.

இது இன்று நேற்று ஆரம்பமானதல்ல..

இலங்கையைக் கூறுபோட எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்கள் எதனையும் எடுத்து நோக்கினால் அப்போதெல்லாம் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட கதைகளைத்தான் நாம் காண்கின்றோம். அங்கெல்லாம் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான சமூகமாக அல்லது தரப்பாக ஏற்பாட்டாளர்கள் அங்கீகரிக்க மறுத்துள்ளனர்.

முஸ்லிம்களைத் தனித்தரப்பாக அங்கீகரிக்கின்றபோது தங்களது நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிகழ்த்தி முடிக்க முடியாமல் போகும் என்பதே அவர்களது புரிதல். என்றாலும் முஸ்லிம்களைச் சூழ்நிலைக் கைதிகளாக்கி தாம் விரும்புகின்ற பக்கத்தில் அவர்களை சிறைப்படுத்துவது ஒன்றே மேலாதிக்கவாதிகளின் தேவையாக இருந்தது. ஆனால் எண்ணக் கோட்டையில் பேரிடியாக வந்து விழுந்தது வடக்குக் கிழக்குப் பிரிப்பு.

(மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் வெட்டிய வாய்க்காலில் வந்த தண்ணீரை தானே குளம் கட்டி பாய்ச்சல் பாச்சினேன் என்று தன்னைக் கரையோர நீர் விநியோக கர்த்தா என்று தம்பட்டம் அடித்தது போலவே ஜே.வி.பி. பிரேரணை கொண்டுவர விடுபட்டுப்போன கிழக்கை தான்தான் வடக்கிலிருந்து வலிந்து வடமிழுத்துப் பிரித்தேன் என சிம்மக் குரல் எடுத்து கர்ச்சிக்கும் அமைச்சரின் சங்கதி அது வேறு.)

வரலாற்றில் எந்தவொரு சந்தர்பமாக இருக்கட்டும் தேசத்தின் இறைமைக்கும் கௌரவத்திற்கும் ஊறு ஏற்படவிருந்த அனைத்துப் பொழுதுகளிலும் முஸ்லிம்கள் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு அலாதியானது. தனது உயிர் போனாலும் நாட்டின் மன்னனைக் காட்டிக் கொடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்து தன்னுயிரை ஈந்து ஸ்ரீ விக்கிரம இரஜசிங்கனைக் காத்த முஸ்லிம் பெண்மணியின் சரித்திரம் இந்த நாட்டு முஸ்லிம்களின் தேசப்பற்றுக்கு ஒரு சோற்றுப் பதமாகும். அது இன்று ஜெனீவா வரை சென்று நிற்கின்றது. இந்தத் தேசத்தைக் கூறுபோடும் ஏற்பாட்டில் முஸ்லிம்களை பகடைகளாக்குவது அவ்வளவு எளிதானதல்ல என்ற யதார்த்தம் புரியப்பட்டபோது ஜனநாயகம் எனும் துரும்பு ஒன்றே தற்போதைக்கு வசமானது என்று ஏற்பாட்டாளர் காத்திருந்தனர்.

ஜெனீவாவிலிருந்து திரும்பிய கையோடு மானம் காத்த மறவர்களுக்குக் கிடைத்த சன்மானம் தம்புள்ளைப் பள்ளி விவகாரமும் தொடர் சம்பவங்களும். சூழ்நிலைகளை அலசும்போது இரண்டும் ஒருசேர நடப்பதற்கான கால இடைவெளி இயற்கை நிலைமைகளில் நிகழ்தகவுச் சாத்தியம் அற்றதாகவே தெரிகின்றது. இது செயற்கையானது

காத்திருந்தனர் ஏற்பாட்டாளர். வந்தது கிழக்குத் தேர்தல். சந்தர்ப்பம் கனிந்து வந்ததாக எண்ணி களமிறங்கினர்.

'ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி இலங்கையைக் கூறு போட வேண்டுமானால் அதற்காக கிழக்கு வாழ் முஸ்லிம்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத தேவையாகும். எனவே தமது பிரித்தாளும் பாரம்பரிய உபாயத்தைக் கையாண்டு சிங்கள பௌத்தர்களுடன் சேர்ந்து வாழ முடியாது எனும் நிலைமையை முஸ்லிம்களிடம் உருவாக்குவதன் மூலம் தமது இலக்கை அடைந்துகொள்ள ஏற்பாட்டாளர்கள் முயன்றதாகவே கிழக்குத் தேர்தலின் முன்கட்டக் காட்சிகளை நாம் நோக்க வேண்டியுள்ளது.

தவிர்க்கவொணாமல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இயக்கமாக பல தளங்களில் அங்கீகாரம் பெற்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த இழுபறிக்குள் சிக்கிக்கொள்கின்றது. 'மா ரெக லே' (என்னைப் பாதுகாத்த இரத்தம்) என விக்கிரம இராஜசிங்கன் உளம் நெகிழ்ந்த இரத்தத்தின் சொந்தக்காரியான முஸ்லிம் வீரப் பெண்ணியின் பாரம்பரிய நிலைப்பட்டை கைக்கொள்ளும் மு.கா. வின் நிலைப்பாட்டை உள்ளும் புறமும் இருந்த பலர் புரிந்து கொள்ளவே இல்லை.

இதனால் புரிந்துணர்வின் அடிப்படையில் பிரிந்து நிற்கும் நிலைப்பாட்டுக்கு மு.கா. வந்தது. பள்ளிவாயல் மீதான தாக்குதல்களை மு.கா. சாதுர்யமாகப் பயன்படுத்தி தனது நிலையை  இஸ்திரப்படுத்திக் கொண்டது. தேர்தல் முடிந்த கையோடு மலையனைய விமர்சனங்களுக்கும், நெருக்குவாரங்களுக்கும்,  நீலிக் கண்ணீர் வடிப்புக்களுக்கும் முகங்கொடுத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய நிலைப்பாட்டுக்கே மு.கா. சென்றது. இதனைப் பலவீனமாகக் கருதியவர்களும் இல்லாமல் இல்லை.

மு.கா. எடுத்துக் கொண்ட நிலைப்பாடு ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புக்களில் மண்ணை வாரிப்போட்டது. இப்போது அவர்கள் அவர்களது இடைவேளைக்குப் பிந்திய காட்சிகளை அரங்கேற்றத் தொடங்கியிருக்கின்றார்கள். புதிய கதாபாத்திரம் 'பொது பல சேனா' அறிமுகமாகியிருக்கின்றார்.

இப்போது அரங்கேறிக் கொண்டிருப்பதை பௌத்த பேரினவாதம் என்று நாம் கருதினால் அது தவறு. இது மேலாதிக்கவாதத்தின் சூதாட்மன்றி வேறில்லை. இந்தச் சூதாட்டத்தில் நாட்டின் ஜனாதிபதி முதற்கொண்டு தேசத் தலைமைகள் பல சூழ்நிலைக் கைதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தாம் ஜனாதிபதியை பொறியிடைப்படுத்தியிருப்பதாக ஏற்பாட்டாளர்களின் சார்புப்  பாத்திரங்கள் வசனம் பேசுவதனை நாம் பல சந்தர்ப்பங்களில் கேட்கின்றோம். ஆம், பாதுகாத்தலும் பெறுப்புக் கூறலும் எனும் பொறிக்குள் நாட்டின் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலரும் சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது யாமறிந்தது. இது சாதாரண பொறியல்ல. உண்மைகளைச் சூழ்ச்சிகளுடன் முடிச்சுப்போட்டு பின்னப்பட்ட பொறி. இதன் உச்சம் என்ன என்பதனை உலக நடப்புக்கள் உதாரணம் சொல்லும்.

இந்தப் பொறியின் யதார்த்தம் பற்றி ஜனாதிபதி அறியாதிருப்பார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஏற்பாட்டாளர்களின் தேவைக்கேற்றவாறு நாட்டைப் பிரித்துக் கொடுப்பது ஒன்றே இந்தப் பொறியில் இருந்து தப்புவதற்கான ஒரே வாசல் எனும் நிலைமை அவருக்கு ஏற்படுத்தப்படப் போகின்றது. சிங்கள பௌத்தத்தின் காவலன் என்று தன்னைப் பற்றிய கருத்தியலை நாட்டில் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஜனாதிபதிக்கு இது ஆகாத காரியமே. ஆனாலும் செய்துதான் ஆகவேண்டும். ஆயின் ஏவ்வாறு? அதற்குத்தான் பொதுபலசேனா.
பொதுபலசேனா பௌத்த மத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டாலும் அந்த இலக்கினை அடைவதற்கு மிக அடிப்படையான எந்த உருப்படியான காரியத்திலும் அது இதுவரை இறங்கவில்லை. 

மாறாக முஸ்லிம்களுக்கு மாத்திரமே உரித்தான ஹலால் பிரச்சினை, மற்றும் முஸ்லிம் யுவதிகளின் ஆடை போன்ற தமது மதத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத விடயங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டு கூத்தாடுகின்றது.

இந்த இரண்டு விடயங்களும் ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் மத்தியில் வலிதானவையாகும். முதலாவது மார்க்கம் இரண்டாவது மானம். இதில் எந்தவொன்றுக்காகவும் போர் புரிவதனை தனது கடமையாகக் கூட ஒரு முஸ்லிம் எண்ணுவான். இவற்றோடு இன்னும் பல புரளிகளை அங்கும் இங்கும் சிலர் கிளப்பினாலும் இவ்விரண்டு விடயங்களையும் தெரிவு செய்து முதன்மைப்படுத்தியிருப்பது சீண்டிவிடும் காரியமாகத்தான் என்பது புரியப்பட வேண்டும்.

ஆரம்பத்தில் இது ஒரு சிறு குழுவின் குறும்புச் செயல் என அரசு சமாதானம் சொன்னது. அவ்வாறேயாயின், சர்வதேச வலைப்பின்னலும், பக்கபலமும் கொண்டிருந்த பலமான ஆயுத அமைப்பான புலிகளை தயவு தாட்ஷண்யமும் தயக்கமும் இன்றி நசுக்கிய ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் இந்தச் சுட்டிப் பயல்களை நசுக்க எவ்வளவு நேரமாகும்? அது ஏன் இன்னும் நடக்கவில்லை?

ஜனாதிபதியின் ஆசீர்வாதம் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனாவின் செயலாளர் கங்கொடவில ஜனா சமுத்திர தேரர் அறிக்கை விட்டிருப்பதுவும் குனூத் ஓதுவது தொடர்பாக ஜனாதிபதி கேள்வி கேட்டிருப்துவும் நமக்குச் சொல்ல வருவது என்ன?

எஹூதி நஸாறாக்களினால் காலாகாலத்திலும் (போர்கள் தொடர்பாக இறங்கிய) அல்குர்ஆன் வசனங்கள் தொட்டும் தொடுக்கப்பட்ட கேள்விகளை பொதுபலசேனா மறுபதிப்புச் செய்வதன் பின்புலம் யாது?

இனித்தான் கிளைமெக்ஸே ஆரம்பமாக இருக்கின்றது...!

நாட்டைக் கூறுபோடுதல் என்பது ஜனநாயக ஏற்பாடுகளுக்கூடாக நடாத்தப்படப் போகின்றது. இதில் நாட்டின் இணைப்பு – பிரிப்பு எந்தவொன்றிலும் இன்றியமையாத தீர்மனிக்கும் கூறான முஸ்லிம்கள் பகடைகளாக்கப்படப் போகின்றார்கள்.

நாட்டில் முஸ்லிம் – பௌத்த சிங்கள முறுகல் நிலையைத் தோற்றுவித்து வளர்த்தெடுப்பதன் மூலம் சிங்கள பௌத்தர்களுடன் இணங்கி வாழ முடியாது எனும் நிலையை முஸ்லிம்களிடம் ஏற்படுத்துதல் இதன் அடிப்படை விடயமாகும். இந்தக் கைங்கரியத்திற்கெனத் தோற்றுவிக்கப்பட்ட பாத்திரமே பொதுபலசேனா.

பொதுபல சேனாவின் செயற்பாடுளைக் கண்டும் காணாமல் விட்டுவிடவேண்டும் என்பது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரையாக இருக்கலாம்.

அத்தோடு இந்த அமைப்பை தீனிபோட்டு வளர்க்கும் பொறுப்பு அமெரிக்கப் பிரஜா உரிமை பெற்றிருக்கும் பாதுகாப்புச் செயலருக்கும், மிலிந்த மொறகொடவுக்கும் அவரது மனைவிக்கும் வழங்கப்பட்டிருக்கலாம்.

இனியென்ன? கிளைமெக்ஸ்.

01. நாட்டில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வுக்கு ஒப்பான ஒரு உளநிலை தேசிய – சவதேச மட்டங்களில் முஸ்லிம்களுக்கும் ஏற்படும் வகையிலான அனைத்து அட்டூழியங்களும் இந்தத் தேசத்தில் கட்டவிழ்த்து விடப்படும். அனைத்தும் சிங்கள – பௌத்த பேரினவாதம் எனும் முத்திரையோடு நடாத்தப்படும். அரசும் தலையையும் வாலையும் காட்டிக்கொண்டு சமாளிக்கும் சங்கடத்தில் இறுகும்.

02. தொடர்ந்து ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பு சர்வதேச ஏற்பாடுகளுடன் இலங்கை மீது திணிக்கப்படும்.

03. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதற்கு இன்றுவரை வருத்தம் தெரிவிக்காது இருந்துகெண்டு 'ஒரு சமூகத்தின் உரிமையில் இன்னொரு சமூகம் தலையிட முடியாது' என இன்று அறிக்கை வசந்தம் வீசுபவர்களிடமிருந்து விரக்தியின் விளிம்பில் நிற்கப்போகும் முஸ்லிம்களுக்கு அழைப்பு வரும். கடந்த கிழக்குத் தேர்தலில் சாதிக்க முடியாது போனதை சாதிப்பதற்கு அவர்கள் புன்முறுவுவார்கள். கிழக்குத் தேர்தலுக்கு முன் முஸ்லிம்கள் சிலர் செய்ய நினைத்ததைப் போன்று தலைமைகளின் உபன்னியாசங்களையும் காலில் மிதித்துக் கொண்டு கிழக்கு முஸ்லிம்கள் விட்டில்களாவார்கள்.

04. நாட்டைக் கூறுபோடும் மக்கள் அபிப்பிராயம் திரட்டப்பட்டு ஒப்பந்தம் என      எழுதப்படும்.

05. நாடு இரண்டாகும். கூத்தாடி கொண்டாடுவான்.

06. நாட்டைக் கூறுபோடத் துணை நின்ற இழுக்கு முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது ஏற்றப்படும்.

07. நாட்டின் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலரும் பாதுகாத்தல் பொறுப்புக் கூறல் எனும் குற்றக்கூண்டிலிருந்து வாக்களிக்கப்பட்டவாறே இறக்கப்படலாம். நாட்டைப் பிரித்துக் கொடுத்த அவப்பெயரிலிருந்தும் தம்மை அவர்கள் காத்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து? இலங்கையிலும், ஈழத்திலும் முஸ்லிம்கள் வாழ்விழந்தவர்கள்தான்.

ஆனாலும், நம்பிக்கை இழக்கவில்லை.

இஸ்லாம் நசுக்கப்பட்ட போதெல்லாம் அது முன்னரை விடப் பல மடங்கு தேடப்பட்டிருக்கின்றது. அறியப்பட்டிருக்கின்றது. பலம் பெற்றிருக்கின்றது. இது வெறுமனே வானைப் பார்த்துக் கொண்டு வாயைப் பிளந்துகொண்டிருப்பதால் ஆகிவிடப் போவதில்லை.
 (பின் ஆதம்)            February 26, 2013

      மறு பதிப்பு 2014.05.09 
            A.S.IBRAHIM    
                                     

No comments: