ஃபேஸ்புக் என்பது முகம் தெரியாத பல உறவுகளையும் இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது. ஆரம்பத்தில் யாகூ மெசேஞ்சர், ஆர்குட் போல இதுவும் முழுக்க முழுக்க சாட்டிங் என்ற தளத்திலே பயன்பட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை. இது ஒரு பிரபலமான, பிரபலங்கள் பல குடிகொண்டிருக்கும் சமூக வலைத்தளமாக மாறிவிட்டது. உலக அரங்கிலும், குறிப்பாக நம் நாடுகளின் அரசியல் தளத்தில் முக்கியப் பங்காற்றிக் கொண்டுள்ளது ஃபேஸ்புக்.
தங்களின் எழுத்துக்களை காசுகளாக ஆக்கிக் கொண்டிருந்த பல எழுத்தாளர்களையும் இது அடியோடு பாதித்துள்ளது. அனைவரின் கருத்துக்களும், எவ்வித மட்டுப்படுத்துதலும் இல்லாமல் அப்படியே வெளிப்படுகின்றது. இந்தச் சூழலில்தான் எழுத்தாளர்கள் பலரும் இதில் மையம் கொண்டுள்ளனர். தங்களின் எழுத்துக்களை முந்திக் கொண்டு ஒவ்வொரு விசயத்திலும் பதிவேற்றிக் கொண்டுள்ளனர். இதேபோல் தான் அரசியல்வாதிகளும் தங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இதில் பதிந்து செல்கின்றனர். பெரிய பெரிய வியாபாரிகள் தங்களின் நிறுவனத் தயாரிப்புகளைக் குறித்து இதில் வெளியிடுகின்றனர். ஏழை எளியோனுக்கும் ஃபேஸ்புக் ஒரு சுலபமான ஊடகமாக திகழ்கின்றது. தமிழகத்திலே கடந்த காலங்களில் எழுந்த மாணவப் போராட்டங்களுக்கு இது முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் துறை என்பது ஒரு உயர் நிலையில் உள்ள சூழலில், எளியவர்கள், பின் புலமற்றவர்களின் கருத்துகளும் இங்கு வலுப்படுகின்றது. இதன் எதிரொலியாகவே இன்று எந்த ஒரு வார, மாத இதழ்களிலும் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கப்படுகின்றது. காட்சி ஊடகங்களில் முக்கியப் பிரச்சனை குறித்து, சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பிரபலங்கள் என்பவர்களின் கருத்துக்களே இடம்பெற்றுக் கொண்டிருந்த சூழலில், அவர்களின் கருத்துக்களுக்கு நிகராக, ஃபேஸ்புக் நேயர்களின் கருத்துக்களும், ஸ்கோரல் செய்யப் படுகின்றது எனும்போது ஃபேஸ்புக் எவ்வளவு பெரிய மாற்று ஊடகமாக மாறிவிட்டது என்பது புலப்படுகின்றது.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த மாற்று ஊடகத்தில், எளிய ஊடகத்தில் முஸ்லிங்களின் நிலை என்ன?முஸ்லிம் சமூகம் இன்று பன்மைச் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்படுகின்றது. தீவிரவாதக் குறியீடாகக் காட்டப்படுகின்றது. வாழ்வின் அடிப்படைக் கூறுகள் மறுக்கப்படுகின்றது. எங்கு நோக்கினும் ஒடுக்கப் படுகின்றது. சிறை வாசங்களில் இளைய தலைமுறை குடியமர்த்தப் படுகின்றனர். கொத்து கொத்தாக இச்சமூகத்தின் உயிர்கள் காவு வாங்கப் படுகின்றன. நீதி எந்த தளத்திலும் வழங்கப்படுவதே இல்லை. இப்படியாக சொல்லொண்ணாத் துயரத்தில்தான் உள்ளது இந்திய ,இலங்கை முஸ்லிங்களின் நிலை. இதற்கெல்லாம் யார் காரணம்,வெளிப்படையாகத் தெரியும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பொதுபல சேனா என்று. இவர்களால் எப்படி இவ்வளவும் செய்ய முடிகின்றது? காரணம், அரசியல் பலமும், அதிகார பலமும்தானே. இதனை இவர்கள் எப்படி அடைந்தார்கள்? முழுக்க முழுக்க ஊடகத் துணையால் தானே? நாம் இப்படி குரலற்றவர்களாக இம்மண்ணில் இருக்கக் காரணம் நம்மிடையே அரசியல் பலம் இல்லை, ஊடக வலிமை இல்லை. இதனைத் தானே ஏகபோகமாக எல்லா சமூகத் தலைவர்களும் கூறிவருகின்றார்கள்.
இப்படி விசயத்தினை அறிந்திருந்தால் மட்டும் போதுமா? அதில் களப்பணி ஆற்ற வேண்டாமா?
ஒரு காட்சி ஊடகத்தை நாமிருக்கும் சூழலில் கட்டி எழுப்புவதென்பது அரிதாகவே உள்ளது, சரி, வளர்ந்துவிட்ட ஊடகங்களில் கால் பதிக்கலாம் என்றாலும், யார் நம்மை அங்கீகரிக்கின்றார்கள்? அப்படியே உள்ளே சென்றாலும் நம் தரப்பு நியாயங்களை நம்மவர்கள் பதிவு செய்வதில்லை, காரணம் அது அங்கு இயலாத சூழலாக உள்ளது. அப்படியான கருத்தியல்வாதிகள் அங்கு நிலைபெற முடியாது. இந்தச் சூழலில் நமக்கு அமையப் பெற்ற ஒரு எளிய ஊடகமே ஃபேஸ்புக் எனலாம்
ஆனால், இதனை பெரும்பாலும் முஸ்லிம்கள் அறிந்தவர்களாகவே இல்லை. அறிந்து வைத்திருக்கும் சொற்பத் தொகையினரும், இதனை சரிவரப் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தாவிடிலும் பரவாயில்லை, பயன்படுத்தும் ஒரு சிலரையும் கூடத் தடுக்கின்றனர். இது ஒரு சைத்தானின் செயல், பாவம், ஹராம் என்றும் கூறிவருகின்றார்கள்.இது எவ்வளவு பெரிய அப்பட்டமான தவறு?.
ஆரம்பத்தில் முஸ்லிம்கள் அரசியலை விட்டும் விலகியே நின்றார்கள். காரணம் அரசியல் கூடாது, ஷிர்க் என்றனர். பிந்நாளில் அதனை ஏற்றனர். காரணம் இதைத் தவிர நம் சமூகம் நலம் காண வழியில்லை என்பதனால். பின்னர், இந்திய பாபரி மசூதி இடிப்பு நடந்த பின்னர் இந்தியாவில் இஸ்லாமிய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பெருகின. தவறை உணர்ந்தனர். அடுத்ததாக ஊடகப் பார்வையற்றவர்களாக இருந்து வந்தனர். அதனை நவீன சைத்தான் என ஒதுக்கி வைத்தனர். விளைவு அந்த ஊடகத்தின் உச்ச முகமான சினிமா இவர்களை தீவிரவாதியாக சித்தரித்து பொதுச் சமூக மத்தியிலிருந்து தனிமைப்படுத்தும் வேளையில் முனைப்பாகி, வெற்றியும் கண்டுவிட்டது. இவைகளுக்கு யார் காரணம்?
வெளிப்படையாகக் கூறலாம் முஸ்லிம்கள் என்றே. நம்மை விடவும், சியோனிஸ்டுகளும், பாசிஸ்டுகளும் நம்முடைய புனிதக் குரானையும், ஹதீஸ்களையும் ஆராய்கின்றனர். அதன் விளைவு அவர்கள் சுலபமாக நாம் எதனைப் புறக்கணிப்போம் என அறிந்து, அதனை நமக்கு எதிரான ஆயுதமாக மாற்றுகின்றனர். எதனை நாம் ஹராம், ஹராமென ஒதுக்கித் தள்ளினோமோ அவைகள்தான் நம் அவலநிலைக்குக் காரணம். இன்று அவைகளை நாம் தேடிப் பார்த்து, அதிலுள்ள குறைகளைக் களைந்து, அதனில் நம்முடைய பங்களிப்பை செயல்படுத்த முக்கிக் கொண்டுள்ளோம். இதற்குக் காரணம் தெளிவும், தூர நோக்கு சிந்தனையும் அற்ற நமது சமூகத் தலைவர்களும் என்றே. இந்திய பாபரி மசூதி இடிப்பு குறித்து அதன் பின்னணியினை 17 வருடம்
ஆய்வு செய்த, நீதிபதி லிபர்ஹான் அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்:
“பாபர் மசூதி இடிபட்டதற்கு முஸ்லிம்களும் ஒரு வகையில் காரணம். பொய்யையே மூலதனமாகக் கொண்டு பிரச்சாரம் செய்தும், ரத யாத்திரை செய்தும் வந்தார்களே பாசிஸ்டுகள்.
உண்மையினையும், நியாயத்தினையும் வைத்துக் கொண்டு நீங்கள் உறங்கியா கொண்டிருந்தீர்கள்? நீங்கள் ஏன் போராட வீதிக்கு வரவில்லை?
என்று ஒரு கேள்வி கேட்டு, நம் சமூகத்தின் விழிப்புணர்வு அற்ற நிலையை இனம் காட்டினார் நீதிபதி லிபர்ஹான் அவர்கள். இதுதான் நம் நிலைமை. எதுவும் இருக்கின்ற போதே நாம் விழிப்புணர்வு அடைவதே கிடையாது. அது நம் கை மீறிய பின்னரே, புலம்பிக்கொண்டு திரிகின்றோம். வீதிக்கு வருகின்றோம், போராடுகின்றோம். பாபரி மசூதி இடிப்பாகட்டும்,பொதுபல சேனாவினால் முஸ்லிம்களின் பள்ளிவாயல் இடிப்பாகட்டும் அரசியல் ஈடுபாடாகட்டும், ஊடக உலாவலாகட்டும் எதிலும் நாம் பின்னோக்கியவர்களாகவே இருக்கின்றோம். காரணம் விழிப்புணர்வு இல்லை, கல்வி இல்லை. எந்த சமூகத்திற்கு இந்த நிலைமை?
அரசியலில் நம்மால் ஏதோ தோழமைச் சக்திகளின் ஆதரவோடு பயணிக்க முடிகின்றது. ஆனால் ஊடகத்தில், விழி பிதுங்கி நிற்கின்றோம். அதன் அசுர வளர்ச்சியில் உள்ள ஊடகங்களிலாவது இப்போது நம் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லும், விவாதிக்கும் காட்சி ஊடகங்களிலாவது நம்மால் பங்கு கொள்ள முடிகின்றதா, முடியவில்லை.
இந்நிலைமை இப்படியிருக்க, இனிவரும் காலங்களில் இன்றுள்ள பெரும் காட்சி ஊடகங்களும் இணைய நேரலையில் (ஆன்லைனில்) நுழைய உள்ளது. இன்றுள்ள பெரும் காட்சி ஊடகங்களும் இதில் தற்போதே நுழைந்துவிட்டன. வருகின்ற காலங்களில் எல்லா சேனல்களும் “டேட்டா டாங்கிள் இணைப்புகளாய் இணைய வழிகளிலே காணும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் இந்தத் தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி, ஆக வேண்டும். அந்தச் சூழலில் ஃபேஸ்புக் என்பது இன்னும் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டிருக்கும்.
இன்று முஸ்லிங்களில் பலர் இதனை ஒதுக்குகின்றனர். காரணம் நேர வீண்விரையம் என்கின்றனர், ஆபாசங்கள் நிரம்பியுள்ளது என்கின்றனர் சிலர், தேவையில்லாத அந்நியப் பாலின உறவுகளும், பேச்சுக்களும் நிறைந்துள்ளது என்கின்றனர் சிலர். எல்லாம் சரிதான். பேஸ்புக்கிற்கு பல முகங்கள் உள்ளன. நாம் எதை நோக்கி நம் நகர்வை அதனுள் வைக்கின்றோம் என்பதில்தானே அதன் பயன்பாடு உள்ளது. விபச்சார அழைப்புகள் மிகுந்துள்ள இதில்தான் அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. இஸ்லாமிய அழைப்புப் பணி அசுர வளர்ச்சியில் உள்ளது அது ஒரு முகம், இது ஒரு முகம். அதனைத் தேடிச் செல்பவன் அதனை அடைகின்றான், இதனைத் தேடி வருபவன் இதனை அடைகின்றான். நல்லதும், தீயதும் நம் பார்வையில், நாம் நோக்கி நகருகின்ற திசையில்தான் உள்ளது.
முஸ்லிங்களான நாம் இதில் கவனம் பெறாது, உதாசினப்படுத்துவதன் விளைவு, பேரினவாதிகள் இதில் நுழைந்து தங்களது வக்கிரங்களைவிளைவிக்கின்றனர். இஸ்லாம் பற்றியும், முகம்மது நபி பற்றியும் எண்ணற்ற அவதூறுகளையும், அனாச்சாரங்களையும் பரப்புகின்றனர். இதற்கென பல விருப்பப் பக்கங்கள் (லைக் பேஜ்கள்) செயல்படுகின்றன. நல்ல பதிவுகளை பதியும் தோழர்களிடத்தில் புகுந்து பேரினவாதிகள் விசமம் புரிகின்றனர். இதில் இன்னொன்று ஒரு அரபுப் பெயரில் கணக்கை திறந்து வைத்துக் கொண்டு ஆபாசமான புகைப்படங்களையும், காணொளிகளையும் பகிர்வதும், பதிவதுமாக செய்து பொது வெளியில் இஸ்லாமியர்களை அருவெறுப்பாகச் சித்தரிக்கின்றனர்.இதற்கெல்லாம் யார் பொறுப்பு?முஸ்லிம்கள் தான்!
“நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்" என்று சொல்லப்பட்டிருந்தும் முஸ்லிம்கள் அதில் நாட்டம் கொள்வதில்லை ஏனோ? நமக்கெதிராயும், நம் மார்க்கத்திற்கெதிராயும் வீண் பரப்புரைகளைப் பரப்பும் அவர்களை இனம் கண்டு நாம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், நம்முடைய தோழமைச் சமூகங்களிடத்தில் நம்முடைய கண்ணியங்களை நாம் நிலைநாட்ட வேண்டும்.
இன்னொன்று இதுபோன்ற சமூகக் குற்றங்களை புரியும் நபர்களை சட்டத்தின் பிடியில் கொடுக்க வேண்டும் நம் அரசியல் சாசனச் சட்டத்தின் படி, இது சைபர் க்ரைமாகும். இத்தகு நடவடிக்கைகளில் ஈடுவோருக்கு சிறை தண்டனையும் அல்லது அபராதமும் உள்ளது.
இதேபோல் வேறொருவரைப் போல தம்மை காட்டிக் கொள்ளும் ஃபேக் ஐடிக்கள் கொண்ட நபர்களை, மோசடி வழக்காகப் பதியப்படுகின்றது.
இப்படியான நபர்களின் ஃபேக் ஐடிக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நாம் சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும். இது ஒரு நாட்டு குடிமகன் என்ற முறையில் நமது கடமையாகின்றது. அதே சமயம் நாட்டுப் பற்று ஈமானில் ஒரு பகுதி என்ற பெருமானாரின் வார்த்தைகளுக்கு செய்யும் மரியாதை.
ஆக, விசயம் இப்படியிருக்க முஸ்லிங்களே நீங்கள் ஒதுங்கியிருந்தால் என்ன நிலைமை என்று சிந்தியுங்கள். இதில் ஏதோ விழிப்புணர்வுள்ள சில இஸ்லாமிய இளையோர் இன்று இதில் உலாவி, சமூக அவலங்களை அவ்வப்போது கூறி வருகின்றனர். அவர்களைக் கூட பேனினவாதிகளும்,பௌத்த வாதிகளும் விடுவதில்லை. அவர்களின் செல்போன் எண்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மிரட்டல் விடும் தொனியும் இங்கு நடந்து கொண்டுதான் உள்ளது.
அடுத்ததாக, நம்முடைய சமுதாயத் தலைவர்களின் பங்களிப்பு இதில் கணிசமாக உள்ளது மகிழ்வான விசயம். ஆனால் மிகையானோர் இதில் நாட்டம் கொள்வதில்லை. நாம் நடத்தும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நம் சமூக மக்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதே இல்லை. இவைகளையெல்லாம் வெளியிட எந்த ஊடகமும் தயாராக இல்லை. நாமாக கொண்டு சென்று கொடுத்தாலும் அவர்கள் வெளியிடுவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் பாதிதான் வரும், அதும் ஏதாவது ஒரு மூலையில். இந்த சூழலில் தான் நமக்கு ஃபேஸ்புக் ஒரு எளிய ஊடகமாக உள்ளது. நம்முடைய நிகழ்வுகளை நாம் உடனுக்குடன் இதில் வெளிக்கொணர முடிகின்றது. இது பல்வேறு இயக்கத்தவரும், அரசியல் கட்சியினரும், இந்துத்துவ வாதிகளும்,பௌத்த வாதிகளும் ஏனைய சமூகச் சொந்தங்களும், உளவுத்துறையும் மையம் கொண்டுள்ள இந்த இடத்தில் பரவலாக்கப்படுகின்றது, பார்க்கப்படுகின்றது. ஆனால் நாம் இதனை இந்த மட்டிலாவது சரிவரப் பயன்படுத்துகின்றோமா, கிடையாது. ஆனால் இந்துத்துவ வாதிகளினதும் பௌத்த வாதிகளினதும் பெரும் தலைவர்களெல்லாம் இதில் மையம் கொண்டுள்ளனர், தங்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் இதில் முன்வைக்கின்றனர். தங்களின் மாத இதழ்களுக்கென ஒன்றல்ல பல விருப்பப் பக்கங்களை திறந்து செயல்படுகின்றனர்.
நம் சமூகம் நீதி பெற வேண்டுமெனில், நம்மைப் போன்றே ஒடுக்கப்படும் சமூக மக்களுடன் தோழமை கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஆர்.எஸ்.எஸ்ஸிலும், இந்து முன்னணியிலும் பொதுபல சேனாவிலும் அங்கம் வகிக்கக் கூடிய தீவிரவாதி அல்லாத இந்துக்களையும் சிங்களவர்களையும் நாம் அழைத்து உண்மையை விளங்க வைத்து, அவர்களின் பாரம்பரிய வரலாறுகளைச் சொல்லி, நமக்கும் அவர்களுக்குமான தொப்புள் கொடி உறவினை விளக்கிக் கூறி அவர்களையும் நீதிக்கான அணியில் இணைப்பதன் மூலமே அது சாத்தியப்படும். பேரினவாதிகளை அந்நியப்படுத்த வேண்டும். அதற்கோர் எளிய களமாக உள்ளது ஃபேஸ்புக். நாம் அதனையேனும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையில் இது ஒரு எளிய ஊடகமாகவும், இலவச ஊடகமாகவும் உள்ளது. ஆனால் காலம் இப்படியே இருந்திடுமா என்ன? இன்று இலவசமாகப் பதியப்படும், பதிவேற்றப்படும் கருத்துக்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாளை கட்டணம் என்று ஒன்று நிர்ணயித்தால், என்னாகும் நிலை. எல்லாம் சில காலம் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- இறுதியாக, இப்படியெல்லாம் முகநூலை நாம் சமுதாய நன்மைக்காக களமாக்க முடியுமென்றும், களமாக்க வேண்டும் என்பதுவே என் கருத்து. மாறாக அதிலேயே மூழ்கிவிடுவதும் மிகப்பெரும் தவறு. ஒரு அளவீட்டோடும், வரைமுறையோடும், இதில் நாம் செயல்பட வேண்டும், அடிமைப்பட்டு விடக்கூடாது.
No comments:
Post a Comment