Wednesday 2 April 2014

சைரஜீ ஜன்னாத் மார்கோஸ்! இஸ்லாத்தை நோக்கிய தமது பயணம் குறித்து விவரிக்கிறார்:




சைரஜீ ஜன்னாத் மார்கோஸ்! ரஷியாவில் அவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. நாளேடுகள், மாத-வார இதழ்களில் கலை, கலாசாரம் குறித்து எழுதிவரும் பிரபல பத்திரிகையாளர். கலாசார விழாக்களில் அவரது பங்கு ரஷியாவில் முக்கியமானது.

‘அல்முஜ்தமா’ ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாத்தை நோக்கிய தமது பயணம் குறித்து விவரிக்கிறார்:

சிறுவயது முதலே, மகா வல்லமை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், அவனுக்கு எந்தப் பெயரையும் நான் சூட்டிக்கொண்டதில்லை. நாத்திகக் கல்வியால் எனது இயல்பான தேட்டத்தைத் தடுக்க இயலவில்லை. இருந்தாலும், எதற்கும் ஒரு நேரம் வந்தாக வேண்டுமல்லவா?

கிறித்தவ மதத்திலிருந்தே என் ஆராய்ச்சியும் தேடலும் தொடங்கியது. அப்போது எனது மத நடவடிக்கைகள் சட்டப்புறம்பானவையாகக் கருதப்பட்டன. மூன்றாண்டு சிறைத் தண்டனையும் 1982இல் விதிக்கப்பட்டது. சீனா-மங்கோலியா எல்லையில் தென் சைப்ரஸில் உள்ள ‘தோபா’’வில் சிறை தண்டனையை அனுபவித்தேன்.

1985இல் மாஸ்கோ திரும்பினேன். அங்கு அடிப்படை மாற்றங்கள் தொடங்கியிருந்தன. சமயக் குழுக்களுக்குச் சுதந்திரம் கிடைத்தது. நாட்கள் செல்லச் செல்ல 1990இல் ரஷிய வானொலியில் சமய நிகழ்ச்சிகளுக்கு டைரக்டராக நியமிக்கப்பட்டேன். இதனால், ரஷியாவில் பரவியுள்ள எல்லா மதங்களின் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. அரசாங்க ஒலிபரப்பில் முழு ரஷியாவுக்கும் சமய நிகழ்ச்சியைத் தயாரித்தேன்.

கிறித்தவம், பௌத்தம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்தேன். இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. காரணம், இஸ்லாமிய அறிவு படைத்த ஊடகவியலாளர்கள் யாரும் கிடைக்கவில்லை. ஒலிபரப்பு தொடங்கி ஆறாண்டுகளுக்குப் பிறகு லைலா ஹசீனோவா தலைமையில் ஒரு குழுவை உருவாக்கினோம். ரஷியாவில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை இக்குழு தொடர்ந்து ஒலிபரப்பியது. இந்நிகழ்ச்சிக்கு ‘இஸ்லாத்தின் ஓசை’’ எனப் பெயரிட்டோம். வெள்ளிக்கிழமை தோறும் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இஸ்லாமிய உலகின் முக்கிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், முஃப்திகள் ஆகியோருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. இது இஸ்லாத்துடனான அறிமுகத்திற்கும் அதைப் பற்றிய அறிவுக்கும் வழிவகுத்தது.

தொடர்ந்து ஆறாண்டுகளாக இஸ்லாமிய நிகழ்ச்சியை ஒலிபரப்பிவந்த லைலா சோர்வடைந்து விலகிவிட்டார். எனவே, நிகழ்ச்சி தடைபட்டது. இதை அறிந்த பிரதமர் விக்டர் வானொலி மேலாளரைத் தொடர்புகொண்டு, இஸ்லாமிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒலிபரப்ப வேண்டுமென்றும், இல்லாவிட்டால் ரஷியாவின் உள்நாட்டு அரசியலில் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றும் சொன்னார். 20 மில்லியன் முஸ்லிம்கள் ரஷியாவில் இருப்பதே அவரது அச்சத்திற்குக் காரணம்.

நானே இஸ்லாமிய நிகழ்ச்சியை ஒலிபரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் மலைப்பாக இருந்த எனக்குப் பிறகு தைரியம் வந்தது. புனைபெயரில் நிகழ்ச்சியைத் தொடங்கினேன். இதையடுத்து இஸ்லாத்தைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தேன். என் நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு, நெருங்கிய நண்பர்கள் நீ முஸ்லிமாகிவிட்டாயா என்றுகூட கேட்டார்கள். நான் இல்லை என்று மறுத்தேன்.

பிறகு 2000ஆம் ஆண்டில் ஓர் இரவில் என்னை ஒரு கேள்வி உலுக்க ஆரம்பித்தது. உண்மையிலேயே நான் இஸ்லாத்தை ஏற்றால் என்ன? என்பதே அக்கேள்வி. கிறித்தவ மதத்தில் என்னை நச்சரித்துக்கொண்டிருந்த ஏராளமான கேள்விகளுக்கு இஸ்லாத்தில்தான் எனக்கு விடை கிடைத்தது. எனவே, இறுதியாக இஸ்லாத்தின் இணைந்தேன்.

No comments: