இஸ்லாத்தை ஏற்ற பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்
பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் முகத்தையும் சேர்த்து மூடி ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது. தனி மனித சுதந்திரத்தில் எப்படி பிரான்ஸ் அரசு மூக்கை நுழைக்கலாம் என்று நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒருக்கால் அரசுக்கு இதன் மூலம் சில தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற
எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். குர்ஆன் முகத்தை மூடச் சொல்லி கட்டளையிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
அதே ஃபிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார்.
32 வயதாகும் இவரது இயற்பெயர் மெலோனி ஜியார்ஜியடிஸ். சில காலம் போதை மருந்துக்கும் அடிமையாய் இருநதார். கடுமையான மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். மன நிம்மதி இழந்து தவித்து பல இடங்களிலும் சிகிச்சை பெற்றார். எந்த பலனும் இல்லை. ஒரு முறை இவரது தோழி இவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் 'இரு தொழுது விட்டு வருகிறேன்' என்று சென்றதை ஆச்சரியத்தோடு பார்த்தார். இந்த அளவு இந்த தொழுகைக்கு முக்கியத்துவமா? அப்படி என்ன இருக்கிறது இந்த குர்ஆனில் என்று தொடர்ந்து குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். குர்ஆன் அவரது மனதை ஆட்கொண்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். குர்ஆனை நன்கு படித்து தெளிந்தவுடன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக சுவீகரித்துக் கொண்டார். இவரது முடிவை இவரது ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் முழு ஹிஜாபோடு சமீபத்தில் தொலைக் காட்சிக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
'சிலர் சொல்வது போல் எவரது மிரட்டலுக்காகவும் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை. குர்ஆனை ஆராய்ந்து தெளிவு கிடைத்த பிறகே எனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டுள்ளேன். எனது முடிவால் சிலருக்கு வருத்தம் உள்ளதை அறிவேன். எனக்கு தேவை மன நிம்மதி. அது இஸ்லாத்தில் கிடைத்துள்ளது. இறைவன் இட்ட கட்டளைகளை நான் அடி பிறழாது பின்பற்றுவேன். இஸ்லாத்தை ஏற்று முதன் முதலாக எனது நெற்றி இறைவனை வணங்க தரையை தொட்டபோது இனம் புரியாத சந்தோஷம் என்னுள் பரவுவதை உணர்ந்தேன். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. எனக்கு எனது அமைதியான வாழ்வுதான் முக்கியம். மற்றவை எல்லாம் பிறகுதான். இதை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்கிறார் டயாம்ஸ்.
இஸ்லாத்தை ஏற்ற பிறகு போன மாதம் அளித்த பேட்டி.
சாதாரண ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றால் அது அவனுக்கு மறுமை வாழ்வை சிறப்பாக்குவதோடு அவனது உலக வாழ்விலும் அழகிய வாழ்க்கை நெறியைப் பெற்றுக் கொள்கிறான். ஆனால் இந்த பெண்மணி புகழின் உச்சியில் இருக்கும் போது இந்த முடிவை எடுக்கிறார். இதனால் இசைத் துறையை கை கழுவ வேண்டி வரும். பொது மக்கள் முன்னிலையில் பல ஆண்களோடு இனி நடனமாட முடியாது. மிகப் பெரும பொருளாதார இழப்பும் ஏற்படும். ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். பேரும் புகழும் இனி இந்த மங்கையை தேடி இந்த உலகில் வராது. இருந்தும் அதை அனைத்தையும் தூர எறிந்து அழகிய வாழ்வு முறையை இவ்வுலகத்துக்கும் மறு உலகத்துக்கும் தேர்ந்தெடுத்துள்ள இந்த சகோதரியை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொள்வோம்.
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இவரை யாரும் கத்தியை காட்டி மிரட்டி இஸ்லாத்தை ஏற்கச் சொல்லவில்லை. பணம் காசு தருகிறோம் இங்கு வந்து விடு என்று யாரும் ஆசை காட்டவில்லை. 'வாளாலும் பணத்தாலும் இஸ்லாம் வளர்ந்தது' என்று கூறுபவர்களுக்கு இந்த பெண்மணி அழகிய பதிலை அளித்துக் கொண்டிருக்கிறார்.
'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது,
முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'
-குர்ஆன் 110:1,2,3.
No comments:
Post a Comment